Tuesday, February 9, 2021

ஆறுநாட்டார்மலை , கரூர்

 கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் எனும் ஊரில் உள்ளது ஆறுநாட்டார்மலை. இம்மலை உச்சியில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இதே மலையின் மேல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளிலும் குகையின் விளிம்பிகளிலும்தான் கரூரின் தொன்மைக் கல்வெட்டுக்கள் உள்ளன. 

கல்வெட்டு 1

  ......தா அ ம ண ண ன யா ற றூ செ ங கா 

ய ப ன உ றை ய

கோ ஆ த ன செ ல லி ரு ம பொ றை ம க ன 

பெ ரு ங க டு ங கோ ன ம க ன.ன ங்

க டு ங கோ ள ங கோ ஆ சி அ று த த க ல


மேற்கண்ட இந்த கல்வெட்டானது மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. 

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ, இவரது மகன் இளங்கடுங்கோ என்பவர் இந்த படுகையை அமைத்துக் கொடுத்ததாக செய்தி. 

சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இம்மூன்று சேர அரசர்களையும் இங்குள்ள  கல்வெட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு. 

கல்வெட்டு ; 2

யா ற றூ செ ங கா ய ப ன ..ற றி ட

டா ட டா ன ம 

என்ற கல்வெட்டு வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. 


மேலும் யாற்றூரைச் (தற்போதைய ஆத்தூராக இருக்கலாம்) சேர்ந்த  செங்காயபன் என்பவர் சமணத் துறவியாக மாறியதன் பொருட்டு அவருக்கு செய்து கொடுத்த படுக்கை இதுவாகும். மூத்த அமணன் என்று குறிப்பிடப்படுவதால் அங்கிருக்கும் துறவிகளுக்கு தலைமை துறவியாக இருக்கலாம்.

மேலும் இவரது படுக்கையை குறிக்கும் வகையில் துறவியின் பெயர் படுக்கையிலும் உள்ளது.


கல்வெட்டு 3

(சு) ண ண வா ண ணி க ன

வே ள ஆ த ன அ தி ட டா ன ம


மேற்குறிப்பிட்ட இந்த கல்வெட்டு வாசகமும் ஒரு துறவியின் படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த துறவி ஒரு சுண்ணாம்பு வணிகராக இருந்தவர் என்பதையும், கரூரில் சுண்ணாம்பு வாணிகம் நடந்திருந்தமையும் இந்த கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.


கல்வெட்டு 4

கருஊர பொன வாணிகன

நநதி அதிடடானம


இந்த கல்வெட்டானது கரூரைச் சார்ந்த பொன் வாணிகன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளமையால் கரூரில் பொன் வேலைப்பாடுகளும் பொன் சார்ந்த வாணிகமும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.


கல்வெட்டு 5

ந ம பி ஊ ர அ பி ட ன கு று ம ம க ள

கீ ர ன னே றி செ யி பி த ப ளி


மேற்கண்ட இந்த கல்வெட்டில் வரும் பிட்டன் குறுமகள் என்ற வாசகத்தின் மூலம் பெண்துறவிகளும் இங்கு இருந்தமையை அறிய முடிகிறது.


மேற்கண்ட இந்த கல்வெட்டுக்கள் யாவும் தொன்மைத்தமிழ் பிராமி எழுத்துக்களால் கிமு2ம் நூற்றாண்டு முதல் கிபி2ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவை என்று அறிஞர்களால் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேரநாட்டின் தலைநகராக விளங்கிய வஞ்சிமாநகர் என்றழைக்கப்படும் கரூரின் தொன்மையையும் சிறப்பையும் அறியலாம்.










கற்திட்டை நம்பியூர் மலையபாளையம்

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எலும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.

                                 ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் என்ற ஊரின் அருகில் மலையபாளையத்தில்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டை காணப்படுகிறது .

தற்போது ஒரே ஒரு கற்திட்டை  நல்ல நிலையில் உள்ளது . 

                     வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே. கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.







விஜயமங்கலம் விஜயபுரிஅம்மன் , குறுப்புநாடு

ஈரோடு மாவட்டம் , பெருந்துறைக்கு அருகே உள்ள ஊர் விஜயமங்கலம் . இவ்வூர் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றான குறுப்பு நாட்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும் . 32 ஊர்களை கொண்ட நாடு குறுப்பு நாடு . அவற்றின் தலைநகரம் விஜயமங்கலம்.  இங்கு உள்ள விஜயபுரி அம்மன் ஆலயம் பழமையானது . ஊரின் பெயரிலேயே அம்மன் அமைந்தது இதன் சிறப்பு . இக்கோயிலில்  மகாபாரத கதையை    விளக்கும் சிற்பம்  உள்ளது . 

பஞ்சபாண்டவர்கள்  ஓராண்டு காலம் மறைந்து வாழ்த்த பகுதி தாராபுரம் என்று கூறப்படுகிறது . அப்போது அர்ஜுனன் தன்னிடம் இருந்த வில்லை விஜயபுரி அம்மனிடம் அடைக்கலப்படுத்தி வைத்திருந்ததாக கொங்கு மண்டல சதங்கம் கூறுகிறது . 


கொங்கு மண்டல சதங்கம்,

"  துளைமணி ரத்ன மகுடா சலத்தைவர் சூதில்நொந்தே

கிளையினை நீங்கி வனவாசம் செய்கையில் கீர்த்திபெற்ற 

விளைவயல் சூழ்மங்கைப் பத்தினிக் கோட்டத்தில் வில்விசயன்

வளைவில் அடைக்கலம் வைத்தது வும்கொங்கு மண்டலமே "


இவ்வாலயத்தின் கிழக்கு சுவற்றில் அர்ஜுனன் தேரில் வருவது போலவும் தனது வில்லை அம்மனிடம் அடைக்கலம் கொடுப்பது போலவும் சிற்பங்கள் உள்ளன . 

இக்கோயிலின் புணரமைப்பின் போது முன்மண்டபத்தில் இருந்த சிம்மத்தூண்கள் அகற்றப்பட்டு கோயிலுக்கு வெளியே வைக்கப்படுள்ளது . அதனுடன் மிகப்பழமையான சில நடுகற்கள் உள்ளன . அவற்றில் மூன்று நவகண்ட சிற்பங்கள் . மக்கள் , நாடு அல்லது அரசன் நலனுக்காக தன்னை தாமே கழுத்தை அறுத்து கொண்டு பலியிட்டு கொண்டு வீரமரணம் அடைவது நவகண்டம் ஆகும் . 












Thursday, December 31, 2020

தாளவாடி பன்றிகுத்திப்பட்டான்கல்

 காலம் : 16ம் நூற்றாண்டு

இடம்: தமிழக- கர்நாடக எல்லை பொம்மனஹள்ளி , தாளவாடி

கல்வெட்டுக்களில் ஒடுவங்க நாட்டைச் சேர்ந்த பொம்மனஹள்ளி என குறிப்பிடப்படும் இவ்வூர்,  அக்காலத்தில்  கொங்கு மண்டலத்தின் 24 பிரிவுகளில் ஒன்றாக திகழ்ந்ததாக அறிகிறோம்.

மூன்று  அடுக்கு நிலை சதி நடுகல்லில் முதல்நிலையில் உள்ள வீரன் காட்டு பன்றியுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தவன். அருகில் உள்ளது அவனது  மனைவி அவனுடன் சதியேறியவர் . அடுத்தநிலையில் மொத்தம் ஆறுபேர் உள்ளனர்.  இறந்த வீரன் மற்றும் அவன்  மனைவியை மேலுலகத்திற்கு அழைத்துச் செல்லும்  தேவகன்னிகள் கையில் வெண்சாமரத்துடன்.

மேலே உள்ள இறுதிநிலையில் வீரனும் அவனது  மனைவியும் இறைவனடி சேர்ந்து இறைவனை வணங்கியபடி உள்ளனர்.




Saturday, December 26, 2020

ஈரோடு ஈங்கூர் அல்லலீஸ்வரர்

                 கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடுமேற்கரை பூந்துறை நாடு . இந்நாட்டின் ஆறாவது ஊர் ஈங்கூர் ஆகும் . "ஈஞ்சனூர்"  "ஈங்கையூர்" என்பதே மருவி ஈங்கூர் ஆயிற்று . 

                        இவ்வூர் ஈரோடு - சென்னிமலை செல்லும் வழியில் பெருந்துறை அருகில் உள்ளது . இங்கு அருள்மிகு வடிவுள்ள மங்கை  உடனமர் அல்லலீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் உள்ளன . 

                     ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயிலில் புலிகுத்தி கல் மற்றும் சில நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன . அல்லலீஸ்வரர் கோயில் மிகவும் பழமையான கோயில் . இக்கோயிலில் கி .பி 1694 ம் ஆண்டு மைசூர் உடையார்  சிக்கராய உடையார் காலத்தில் , நஞ்சராயர் என்பார் கொங்கு நாட்டில் அதிகாரம் செய்யும் போது இவ்வூரினர் இக்கோயிலுக்கு குளம் அளித்ததாக கல்வெட்டுக் குறிப்பு உள்ளது . இக்கல்வெட்டு தற்போது காணப்படவில்லை . 


ஈங்கூர் குட்டை தோட்டத்தில் ஒரு அழகிய அய்யனார் சிற்பம் கல்வெட்டுக் குறிப்புடன் இருந்தது. 

             ஈங்கூரை சேர்ந்த காவலன் குரும்பில்லரில் போத்தன் செய்யானான குலோத்துங்க பல்லவரையன் என்ற வேட்டுவ தலைவர் அய்யனார் சிற்பத்தை எடுப்பிதாக இக்கல்வெட்டு கூறுகிறது . இந்த கல்வெட்டு அருகில் யோக பட்டையுடன் அமர்ந்த நிலையில் ஐயனார் உள்ளார் . ஆண்களும் பெண்களும் ஐயனாரை வணங்குகின்றனர் . வேட்டைக்கு செல்லும் வேடர்கள் நாயுடன் காட்சி தருகின்றனர் . வேடர்களின் உடை  அலங்காரம் , அணிகலன்கள் , வேட்டை கருவி ஆகியவை அழகாக காட்டப்படுள்ளது . இக்கல்வெட்டு இச்சிற்பமும் தற்போது ஈரோடு கலைமகள் பள்ளி கலைக்கூடத்தில் உள்ளது .












ஈரோடு ஈஞ்சம்பள்ளி நடுகல்

கொங்கு நாட்டின் ஒரு பிரிவான மேல் கரைப் பூந்துறை நாட்டை சேர்ந்த ஊர்களில் ஒன்று , ஈஞ்சம்பள்ளி . ஈரோடு - கொடுமுடி செல்லும் வழியில் சோளங்காபாளையம் அருகில் அமைந்துள்ளது இவ்வூர் . ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ் ஒரு நடுகல் உள்ளது . " வேடன் சாமி " என்ற பெயரில் மக்கள் இந்த வீரனை வணங்குகின்றனர் . 

                              இந்த நடுகல் வீரன் வில்லுடன் காட்சி தருகிறான் . அடுத்து அவனே  ஒருவருடன் சண்டையிடுவது போலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது . ஊர்ப்பூசல், சிறு சண்டை காரணமாக இந்த வீரன் இறந்து பட்டிருக்கலாம்.  இந்த நடுகல் ஊர்ப்பொதுவில் உள்ளதால் பொது மக்களால் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன் (பிழையிருப்பின் அறிஞர்கள் திருத்தி உதவ வேண்டுகிறேன்). இதன்  15-16ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த நடுகல்லின்  அருகில் வேறு ஒரு நடுகல் கிடத்தப்பட்ட நிலையில் உள்ளது . இன்றுவரை இது நல்ல வாழிபாட்டுக்குறியதாக இருப்பது கொங்கு நாட்டில் நடுகல் வழிபாடு போற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் . 

                       மேலும் இவ்வூரில் சோழீஸ்வரர் மற்றும் பெருமாள் கோயில்கள் அருகருகே இருக்கின்றன.  இவற்றில் கல்வெட்டு எதுவும் காணப்படவில்லை . ஆனால் கோயில் பழமை மாறாமல் இருக்கிறது .  கோயிலின் உள்ளே தவ்வை தாய் சிற்பம் உள்ளது . அது மட்டும் அல்லாமல் கோயிலின் வெளியே பழமையான சிற்பங்கள் கிடத்தப்பட்டுள்ளது .