Wednesday, February 10, 2021

உலகடம் ஓலகடம் , அந்தியூர் பெண்நவகண்டம்

கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றான வடகரை நாடு , பவானி ,அந்தியூர் ஆகிய முக்கிய ஊர்களை உள்ளடக்கிய நாடு ஆகும் .  பவானியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலகடம் என்னும் ஊர் .  


இங்கே மிக பழமையான உலகேஸ்வரர் கோயில் உள்ளது . இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இவ்வூரை "உலகவிடங்கம்" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது . "உலகவிடங்கம்" இதுவே மருவி "உலகடம்" என்றும் "ஓலகடம்" என்றும் ஆயிற்று . இங்கு கி . பி 12 - கி. பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகள் மற்றும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன. கொங்கு சோழரான  வீரராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் , விக்கிரம சோழன் ஆகியோர்களின் கல்வெட்டுகளும் ,  கொங்கு பாண்டியரான சுந்தர பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன . சில கல்வெட்டுகள் சிதைந்த நிலையிலும்  , சில கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது மாற்றி வைக்கபட்டுள்ளது.


கொங்கு நாட்டில் ஆட்சி செய்த சோழர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் வீரராஜேந்திர சோழர் .  இவர் கொங்கு சோழமன்னர்களின் பெரும்புகழ் பெற்றவர் . வட கொங்கு , தென் கொங்கு என இரு கொங்கு பகுதியையும்  ஆண்டவர் என்று குறிப்பிடப்படுபவர் . இவரது கல்வெட்டுகள் சில உள்ளன .


இக்கோவிலில் மூன்று நடுகற்கள் உள்ளன . ஆநிரை மீட்டல் , சதி கல் மற்றும் பெண் நவகண்டம் ஆகிய நடுகற்கள் உள்ளன . வேறு எங்கும் காணப்படாத பெண் நவகண்டம் கொடுக்கும் சிற்பம் இங்கு உள்ளது இக்கோயிலின் மற்றுமொறு சிறப்பு ஆகும் .














கொடுமணல்

 ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்த கொடுமணலில் 

தற்போது இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த கொடுமணலில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களைக் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுவதற்கு முன்னால் இந்த சங்ககால தொழில் நகரான கொடுமணல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இதனைக் கண்டுபிடித்த முதுபெரும் தொல்லியல் அறிஞர் திரு. புலவர் இராசுவிடம் கேட்டறிந்தவற்றை அவரிடமே கேட்டறிவோம்.


ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18யை ஒட்டிய புதன் கிழமை கொடுமணல் அருகில்  உள்ள தங்கம்மன் கோயிலில் விழா எடுப்பது வழக்கம் . அவ்வாறே1979ம் ஆண்டு விழா நடந்த போது சிறப்பு விருந்தினராக அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. தியனேஸ்வரர் அவர்கள் கலந்து கொண்டார் . அவர் புதிதாக பொறுப்பேற்ற காரணத்தால் என்னையும் (புலவர்.இராசு) அவருடன் அழைத்து சென்றார் . அங்கு ஆட்சியருக்கு இரண்டு மணி நேரம் வேலை இருந்த காரணத்தால் நான் மிதிவண்டி எடுத்துக்கொண்டு நொய்யல் ஆற்றின் வழியே சிறிது தூரம் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஆற்றின் கரையில் சில சிவப்பு கறுப்பு ஓடு , பாசி மற்றும் சங்குகள் ஆகியவற்றை கண்டெடுத்து பத்திரப்படுத்தினேன். அது குறித்து அப்போது எதுவும் தெரியாததால் அதற்கு அடுத்த வாரம் மதுரை நாயக்கர் மஹாலில் நடந்த தொல்லியல் மாநாட்டில் திரு . நாகசாமி ஐயாவிடம் காண்பித்த போது அவர் " ராசு இது ஒரு அரிய பொக்கிஷம் " எங்கு கிடைத்தது என்று கேட்டு அறிந்து கொண்டார் . பின்னர் கொடுமணல் வந்து சிறு சோதனை (trial bit) நடத்தி உறுதிபடுத்தினார். இவை யாவும் சங்ககால பானை ஓடுகள் என்றும் இவ்விடம் சங்ககால தொல்லியல் மேடு என்பதையும் உறுதி செய்தார்.


அதன் பிறகு நான் அப்போதைய ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியின் தாளாளர் முத்தையாவுடன் கலந்து பேசி அவருடன் இணைந்து 30 மாணவியர்களை அழைத்துக்கொண்டு சிறு சுற்றுலா போல உணவு தண்ணீர் எடுத்துக்கொண்டு கொடுமணல் நோக்கி பயணப்பட்டோம். அங்கு மாணவியர்களுக்கு எப்படி பட்ட பொருள்களை எடுத்துத் தரவேண்டும் என்று பயற்சியளித்ததால், அக்குழந்தைகள் கடுகு போல பச்சை பாசியை கூட எடுத்துக்கொடுத்தனர் . அங்கு கிடைத்த மிக அரிய கல்மணிகள்  தற்போது கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது .


அதன் பிறகு 1985,1986,1989,1990,1997 ஆகிய ஆண்டுகளில் தமிழ் பல்கலைகழகம் , தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை , சென்னை பல்கலைகழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆகியவை தனித்தனியேவும் இணைந்தும் அகழாய்வுகளை நடத்தினர் . 









ஹொய்சாளர் மல்லிகார்ஜுனகோயில் மாண்டியா கர்நாடக basaralu

ஹொய்சாளர் அல்லது கோசலர் என்று அழைக்கப்படும் ஹொய்சாளர்கள்  தென்னிந்தியாவின் முக்கிய பேரரசுகளில் ஒன்றாகும் .  இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்த மலை நாட்டைச் சார்ந்தவர்கள் . 

 மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்குப்பின் நிருபகாமன் (கி.பி 1022 - 1040) கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் பேலூரில் , கோசலை மரபை தோற்றுவித்தார் . அவரை அடுத்து வந்த ஹொய்சாள மன்னன் வினயாதித்தன் தலைநகரை பேலூரில் இருந்து ஹளேபேடு  என்னும் இடத்திற்கு மாற்றினார் . இவர்கள் வழிவந்த ஹொய்சாளர்  மன்னன் வீர நரசிம்மர் கர்நாடகம் மாநிலம் முழுவதும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார் . இவர்கள் தமிழகத்திலும் பல பகுதிகளில் ஆட்சி செய்து உள்ளனர் . தமிழ் கல்வெட்டுகள் இவர்களை போசாளர்கள் என்று குறிப்பிடுகிறது . 

          மாண்டிய மாவட்டத்தில் உள்ள பஸ்ரலு (Basaralu) இன்னும் சிறிய கிராமம் நாகமங்களா (Nagamangala) என்னுமிடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாண்டியாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது . 2ம் நரசிம்மரின் தளபதியான ஹரிஹர தனநாயக அவர்கள் கட்டிய மல்லிகார்ஜுனா கோயில் ஒன்று இங்கு உள்ளது . இக் கோயில் ஹொய்சாளர்களின்  தனித்தன்மையுடன் காணப்படுகிறது.  


இக்கோயின் நுழைவாயில் கூடத்தின் இருமருங்கிலும் இரண்டு யானைகள் அமைந்துள்ளன . கருவறை முன் மண்டபம் பல தூண்களுடன் காணப்படுகிறது .  உயரமான மேடையின் மீது கோயில் கட்டப்பட்டு இருக்கின்றது . இக்கோயில்களில் சுவர்களில் நரசிம்மர் , பைரவர் நடனமாடும் சரஸ்வதி , மன்மதன் ரதி ,  காலபைரவர் , சிவயோகி, பலராமன் , நான்கு முக பிரம்மா பிரம்மா , நடனமாடும் பைரவா ஆகிய சிற்பங்கள் உள்ளன . இக்கோயில்களின் சுவர்களில்  அடுக்கடுக்காய் காணப்படும் இச்சிற்பங்கள்  தனித்தன்மையுடன் விளங்குகிறது . அடிப்பகுதியில் யானைகள் குதிரைகள் யானைகள் போன்றவற்றின் அணிகளும் உருவங்களும் காணப்படுகின்றன . ராமாயணம் , மகாபாரத காட்சிகளும் விவரிக்கப்பட்டுள்ளன .  இக்கோயிலில் உள்ள தூண்கள் அனைத்தும் வட்ட வடிவில் காணப்படுகின்றன . இக்கோவிலின் உள்ளே சப்தமாதர் சிலைகள் அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது .  இந்தியாவிலுள்ள  கோயில்கள் அனைத்திலும் நுணுக்க வேலைப்பாட்டுக்கு சிறந்த காணப்படுவது ஹொய்சாளர் கோயில்களாகும் .

























Arethippura ; Doddabetta , Chikkabetta Mandyadistrict , Karnataka

கர்நாடக மாநிலம் , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் அரெதிப்புரா (Arethippura)  . இது மத்தூரில்   இருந்து 22km தொலைவில் உள்ளது . இவ்வூர் சமணர்களின் புனித தலங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கி இருக்கிறது  . இங்கு தொட்டபெட்டா  (Doddabetta ) ,  சிக்கபெட்டா (Chikkabetta ) அல்லது கனககிரி என இரண்டு மலைகள் உள்ளன . 


தொட்டபெட்டா  மலையின் உச்சியில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பாகுபலி  சிலை (கி.பி 843 )ஒன்று நின்ற நிலையில் இருக்கிறது .  இது சரவணபெலகுளாவில்  ( கி. பி 973 )உள்ள பாகுபலி சிலையை விட பழமையானதாக கருதப்படுகிறது . இங்குள்ள கல்வெட்டுகளின் படி இது கங்கர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் பின்னர் ஹொய்சளர் ஆட்சியில் இது சிறந்து விளங்கி இருக்கிறது  .  விஷ்ணுவர்தன்  , சமண கோயிலுக்கு திப்பூர் (Tippur )  என்னும் கிராமத்தை தானமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .  இது சமணர்களின் முக்கிய தலமாக அப்பொழுது விளங்கியிருக்கிறது  . இங்கு உள்ள பாகுபலி சிலை  சுமார் 10 அடி உயரம் கொண்டது . இது தென்னிந்தியாவின் பழமையான சிற்பமாக கருதப்படுகிறது . 


சிக்கபெட்டா என்னும் மலையில் இடிந்த நிலையில் பழைய சமணக்கோயில் இருந்து இருக்கிறது .  1970ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளபட்டபோது இங்கு  சமணக்கோயில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இங்கு 12 கோயில்கள் இருந்திருக்கலாம் என்றும்  இதில் ஐந்து கோயில்கள் தெற்கு நோக்கியும் , மூன்று கிழக்கு நோக்கியும் , இரண்டு மேற்கு நோக்கியும்,  இரண்டு வடக்கு நோக்கியும்  இருந்ததாக தெரிகிறது .   அகழ்வாராய்ச்சியின் போது ஆதிநாதர் ,  பாகுபலி ,சரஸ்வதி ,  தீர்த்தங்கர்கள் சிலைகள்  மற்றும் தீர்த்தங்கர்கள் உள்ள தூண்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது . இங்கு உள்ள பாலியின்   அருகே உள்ள பாறையில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . இது ஒரு காலத்தில் சமணர்களின் புனித தலமாக விளங்கி இருக்கிறது  என்பதற்கு இதுவே சான்று .