Tuesday, December 6, 2022

தியாகனூர் புத்தர்

                  உலகில் தற்போதும் சிறப்புற்று விளங்கும் மதங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.  இம்மதமானது புத்தர் என்று போற்றப்படும் சித்தார்த்த கௌதமரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது. இம்மதம் தோன்றிய சில நூற்றாண்டுகளிலேயே அரசுகளின் ஆதரவைப் பெற்று  பரவத் தொடங்கியது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கை, சுமத்ரா, தாய்லாந்து , சீனா ஆகிய நாடுகளுக்கு இம்மதம் பரவியது. சங்கம் என்ற அமைப்பு  பௌத்த நெறிகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தது. இதற்கு ஆதரவு அளித்து துணை நின்ற அரசர்களில் முதன்மையானவர் அசோகர் .

                       கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆட்சிசெய்த அசோகச் சக்கரவர்த்தி பௌத்தத்தை பெரிதும் ஆதரித்தார். அவர் ஆட்சிக் காலத்தில் இம்மதம் மெல்ல தமிழ்நாட்டை அடைந்தது .  தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பௌத்தம், சுமார் 700 நூற்றாண்டுகள் சிறப்புற்று இருந்தது.  தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ மன்னர்களும் பௌத்த மதத்தை ஆதரித்தனர்.  ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் காஞ்சியில் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கியதற்கு பௌத்த காஞ்சியே சான்று ஆகும் . குறிப்பாக சீனப் பயணி யுவாங் சுவாங் காஞ்சிபுரம் பகுதியின் பௌத்த விகாரங்களை பற்றி தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார். பௌத்தம் தமிழகத்தில் நிலை பெற வணிகர்களும் காரணமாக இருந்தனர் .பௌத்தத்திற்கு வர்த்தக மையங்களுக்கும் இடையே வலுவான தொடர்பு இருந்தது . இதனாலேயே கடலோர பகுதிகள் மற்றும் வணிகப் பெருவழிகளில்  பௌத்த எச்சங்கள் மிகுதியாக கிடைக்கின்றன. 

          தமிழகத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டின் போது பக்தி இயக்கம் தோன்றியது பௌத்தத்திற்கு கடும் சவாலாக இருந்தது. சைவத்தின் எழுச்சியால்  பௌத்தத்தின் செல்வாக்கு சரிந்தது . அரசுகளும் சைவத்தை ஆதரித்தது. இதனால் பௌத்தம் மெல்ல தன் செல்வாக்கை இழக்க தொடங்கியது . எனினும் சோழ பேரரசர் இராஜ ராஜன் காலத்தில்  நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரங்கள் இருந்ததற்கும் அதற்கு செய்யப்பட்ட நிதியுதவி பற்றியும் சான்றுகள் கிடைக்கின்றன. கி.பி எட்டாம் நூற்றாண்டிற்கு பின் தமிழகத்தில் பௌத்தம் மெல்ல வீழ்ந்ததால் இங்கு கிடைக்கும் எச்சங்கள் பெரும்பான்மையானவை  சிதைந்த நிலைகளில் இருக்கிறது.  எனினும் தமிழகத்தின் தனித்துவமான உயரமான புத்தரை பற்றி இங்கு காண்போம் . 

                       தமிழகத்தில் பெரும்பான்மையான  புத்தரின் உருவங்கள் தனி சிற்பங்களாக காணக் கிடைக்கிறது . புத்தரின் உருவமானது நின்ற நிலையிலோ , அமர்ந்த நிலையிலோ, கிடந்த நிலையிலோ அமைக்கப்பட்டுள்ளன. இப்போது நாம் பெரம்பலூர் - சேலம் இடையே கம்பீரமாக அமர்ந்து இருக்கும் புத்தர் உருவங்களைப் பற்றி இனி காண்போம் .

                             முதலாவது  தமிழகத்தின் மிகப் பெரிய சிலை, ஆனால் இருப்பது 100 ஆண்டுகள் பழமையான சிறிய கோயிலில். புத்தர் அமர்ந்த நிலையில் காணப்பட்டாலும் உயர்மோ சுமார் 7 அடி . தலைமுடி சுருளாகவும், அகன்ற தோள்களில் துறவற அங்கி அணிந்த நிலையில் கண்கள் பாதி மூடியவாறு காணப்படுகிறார். காதுகள் நீளமாகவும் கழுத்துப் பகுதியில் மூன்று கோடுகளுடன் , வலது கையை இடது கையின் மேல் வைத்து உள்ளங்கைகளை மேலே பார்த்தவாறு அமைக்கப்பட்ட இச்சிலையில் வலது கையின் பெருவிரல் மற்றும் மூக்கின் நுனி சிதைவுற்று காணப்படுகிறது .சிலை உள்ள கோயிலின் வாயில் புத்தர் சிலையை விட சிறியதாக இருக்கிறது. இக்கோயிலின் விமானத்தில் நான்கு புறமும் நான்கு உருவங்கள் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி உள்ள கோயிலின் முன்பக்கத்தில் புத்தர் உருவமும், தெற்கு பக்கத்தில் கண்ணனின் உருவமும், மேற்கு பக்கத்தில்  திருமாலின் உருவமும், வடக்கில் கிருஷ்ணர் உருவமும் வைக்கப்பட்டுள்ளன. புத்தரை திருமாலின் அவதாரமாக கருதி இவ்வாறு கட்டப்பட்டு இருக்கலாம் .

                                                             


                                                       


                                                 

                                                         



                        இரண்டாவதாக நாம் காணும் புத்தர்  2013 ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தில் அமர்ந்திருந்தார். வயல்களுக்கு நடுவே இருந்த இப்பழங்கால சிலையை மீட்டெடுத்து தியான மண்டபத்தில் வைத்திருக்கின்றனர். இதில் புத்தர் பத்மாசனத்தில் (பத்ம என்றால் தாமரை )தாமரை மேல் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். சுமார் 5 அடி உயரமுடனும், தலைமுடி சுருளாகவும், தோள்களில் துறவற அங்கி அணிந்த நிலையில் கண்கள் பாதி மூடியவாறு காணப்படுகிறார். காதுகள் நீளமாகவும் கழுத்துப் பகுதியில் மூன்று கோடுகளுடன் காணப்படுகிறார். வலது கையை இடது கையின் மேல் வைத்து உள்ளங்கைகள் மேலே நோக்கியவாறு உள்ளது .

                                                    










                    பௌத்தம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்ததற்கான சான்றாக விளங்கும் இச்சிலைகள் போன்று பல சிலைகள் தமிழுகமெங்கும் விரவி கிடைக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இறந்த ஒரு மனிதனின் வாழ்வும், போதனைகளும் இன்றைக்கும் நமக்கு தொடர்புடையதாய் இருப்பது ஆச்சரியமே.