Friday, October 16, 2020

மாடு உரசும் கல்

 பண்டைய தமிழ் மக்கள் கோவிலுக்கு கொடை அளிப்பது, ஏரி குளங்கள் வெட்டுவது போன்ற அறச்செயல்களைப் போல, ஆடு மாடுகளின் இயற்கை உணர்வுகளை திருப்தி படுத்துவதும்  அறச்செயல்களாக கருதினர்.  அவற்றில் ஒன்று தான் ஆதீண்டு கல் அல்லது ஆதிண்டுக்குற்றி நடுதல் . ஆதீண்டுக்குற்றி (ஆ+தீண்டும்+குற்றி) .

கிராமப்புறத்தின் மந்தைகளில் மாடு உரசும் கல் நடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆடு, மாடுகளின் உடம்பில் பூச்சிகளும் கொசுக்களும் தொடர்ந்து கடித்துக் கொண்டிருப்பதிலிருந்து தப்பிக்கவும்  , பலவிதமான தாவரங்களை உண்ணும் போது உடம்பில் திணவெடுக்கும், அந்தத் திணவைப் போக்கிக் கொள்ள நடப்பட்ட கல்தான் ஆதீண்டு குற்றி . அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும்.  மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்கு பக்கத்திலும் உயரமான கல்  நட்டு வைத்தனர்.

 மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு  திணவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன.

கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே நிரம்பியிருப்பதால் ஆடு, மாடுகள் தங்களது உடலை உரசி ஆசுவாசப்படுத்த முடியாத சூழல் காரணத்தாலும் , மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதாலும் , இந்த ஏற்பாட்டை செய்தனர்.

இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருக்காது . இந்த கல்லை "தன்மத்தறி"  "நடுதறி"   "ஆவுரிஞ்சி "

"ஆவுரிஞ்சு தறி"   "ஆதீண்டுகல்" "மாடுஉரசல்" என்று பல பெயர்களில் கூறுகின்றனர் . 

பல்லுயிரை நேசித்த விவசாயப் பண்பாட்டின் வெளிப்பாடு இது . ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது.

இடம் : சொக்கநாதர் கோயில் ,

                 பட்லூர் , பவானி.





 கொங்கு தேச நந்திகள் 


கொங்கு நாட்டில் உள்ள நந்திகள் காலத்திற்கு ஏற்ப  ஒன்றுகொன்று மாறுபட்டு உள்ளது . அவற்றின் கழுத்தில் உள்ள மணிகளின் வேலைப்பாடு அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளன  . அவற்றில் சில...


1) கி. பி 12 ம் நூற்றாண்டு , 

இடம் : கலைமகள் பள்ளி , ஈரோடு .


2) கி . பி 13 ம் நூற்றாண்டு , பாண்டியர் காலம் 

இடம் : கலைமகள் பள்ளி , ஈரோடு.


3) ஆதியூர் , 

இடம் : ஆதியுரீஸ்வரர் கோயில் . 


4) கத்தாங்கண்ணி ,

இடம் : நிர்மாணீஸ்வரர் கோயில் .


#konguhistory 13






படிக்கிணறு, ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம்

 ஊற்றுக்குழி என்ற பெயரே ஊத்துக்குளி ஆனது . கால்நடைகளுக்கு தண்ணீர் குடிக்க ஊற்றுக்கள் தோண்டிய குழி . கால்நடைகள் அதிகமாக இருப்பதாலேயே , ஊத்துக்குளி பால்வளப் பொருட்களுக்கு பெயர் பெற்றதால் "ஊத்துக்குளி வெண்ணெய்" என்ற சொல்லாடல் பிரசித்தம். இவ்வூர் பண்டைய குறுப்பு நாட்டில் உள்ளது . உற்றலூர் என்றும் கூறுவர் . 


ஊத்துக்குளியில் இருந்து கைத்தமலை கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் பழம் பெருமை வாய்ந்த கிணறு உள்ளது . இது கி.பி 16ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது . சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது . 


இக்கிணறு சதுர வடிவமாக  "படிக்கிணறு" ( step - well ) என்னும் வகையைச் சேர்ந்தது . இதன் நான்கு பக்கங்களிலும் படிகள் இருந்தாலும் , ஒரே ஒரு வழி மட்டும் உள்ளது . இக்கிணற்றின் விளிம்புகளில் சிற்பங்கள் உள்ளன . சதுர வடிவத்தில் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திகளும் , நுழை வாயிலில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன . இவை தவிர தரையிலிருந்து கிணற்றுக்குள் நுழையும் பகுதியில் இரண்டு யானை சிற்பங்கள் உள்ளன . கிணற்றின் உள்பகுதியில் வேலைப்பாடுகள்  அமைந்த இரண்டு தூண்களும் உள்ளன . இந்த தூண் தோரணம் , கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்க்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கி கொண்டுள்ளன .


 கிணற்றின் உட்புறச்சுவரில் மனித முகம் , மீன் உருவம் , ஆமை உருவம் ,  குரங்கு உருவம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன . இப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது . இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க கிணற்றை போற்றி பாதுகாக்கவேண்டும் .







ஈரோடும் காந்தியும்

 ஈரோடும் காந்தியும் 

 காந்தியடிகள் முதல் முறையாக 1920ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று திருச்சியில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் வழியில் ஈரோடுக்கு வந்தார் . இரண்டாவது முறையாக 25.9.1921 வந்தார். அன்று ஈ . வெ. ரா. பெரியார் இல்லத்தில் தங்கினார் . அதி காலை  3.25 மணி அளவில் ராட்டையில் நூல் நூற்பது எப்படி என்று  எல்லோருக்கும் பயிற்சி கொடுத்ததாக தகவல் உள்ளது .

அதற்கு அடுத்து 1925 ,1934 ம் ஆண்டு என இரு முறை ஈரோடு வந்துள்ளார். 

முதல் மூன்று வருகைகளிலும் காந்தியை வரவேற்ற பெரியார் 1934 ம் ஆண்டு காந்திஜி ஈரோடு வந்த போது சுய மரியாதை போராட்டத்தின் காரணமாக கருப்புக்கொடி காட்டினார். 

ஈரோடு பொதுமக்கள் ஐந்து இடங்களில் காந்திஜிக்கு சிலை வைத்து மரியாதை செய்து உள்ளனர். இதில் வ.உ. சி பூங்காவில் உள்ள இரண்டு சிலைகள் காந்தியடிகள் வாழ்நாளிலேயே வைக்கப்பட்டன . 

ஈரோடு அருகே உள்ள செந்தாம்பாளையம் கிராமத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோ‌யில் கட்டி மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோரது சிலை வைக்கப்பட்டுள்ளது



இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் கொடை, ஈரோடு :erode

 இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் கொடை :


ஊர்ப்பொது நற்காரியங்களுக்காக அரசர்களோ, தலைவர்களோ கொடை அளிப்பது வழக்கம். அவ்வாறு நற்காரியங்களுக்கு அளிக்கும் கொடையை சந்திர சூரியன் இருக்கும் வரை நிலைத்து இருக்க வேண்டும் என்று , கல்வெட்டு அல்லது செப்பேடு வாயிலாக வெட்டி வைப்பர் . 


கொடை கொடுத்த நோக்கம் காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்று  கல்வெட்டு வாசங்களின் இறுதியில்

"இந்த தன்மம் காப்பார் காலெந்தலை மேலென"

 இதை இந்த கொடையைக் காப்பவர் கால்கள் தலைமேல் என்றும் , காலில் விழுந்து வணங்குவேன் என்னும் பொருளிலும் கூறி இருப்பர் .

மேலும்

" இத்தன்மத்திற்கு அகிதம் செய்வோர் கெங்கைக் கரையிலெ காராம்பசுவை கொன்ற பாவத்திலே போக கிடவார்"

இந்த கொடை அல்லது தர்மத்தை அழிப்பவர்கள் கங்கை கரையில் காரம்பசுவை கொன்ற பாவத்துக்கு ஒப்பாவர்கள் என்று கூறியிருப்பர் . 


கங்கை என்பது இந்துக்களுக்கு புனித நதி, பசு என்பது அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு ஒப்பான ஒரு விலங்கு. ஆகவே பசுவை கொல்வதே பாவம் அதிலும் கங்கை கரையில் கொள்வது மஹா பாவமாக கருதி இப்படி ஒரு சாபத்தை சொல்லி இருப்பர். 


இவ்வாறு சொல்வதன் மூலம் அந்த தர்மம் காக்கப்படும் என்பதற்காக இவ்வாறு சொல்வதுண்டு. இதே போல முஸ்லீம்களின் தர்ஹா ஒன்றிற்கு அளிக்கப்பட்ட கொடைக்கான  ஒரு கல்வெட்டில் 

"மெக்காவில் பன்றியைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்" என்று உள்ளது. இந்துக்களுக்கு பசு புனிதம் அதனால் கொல்வது பாவம், முஸ்லீம்களுக்கு பன்றி வெறுக்கத்தக்க விலங்கு அதனால் அதனைக் கொல்வது முஸ்லீம்கள் பாவமாகக் கருதினர். இப்படி ஒரு வித்தியாசமான வாசகம் உள்ள கல்வெட்டு ஒன்றினைக் காண்போம்.


மைசூர் உடையார் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் ( 1734 - 1766 ) காலத்தில் ஈரோடு பகுதி அவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .ஈரோடு காவேரிக்கரையில் உள்ள தர்காவின் பெயர் சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீீத் . கோட்டை அதிகாரிகளான ஐந்து இந்து அதிகாரிகளும் இந்த தர்காவிற்கு வரும் அரதேசி , பரதேசி , பக்கிரிகள் ஆகியோருக்கு நாள் தோறும் கொடை அளிக்கவும் ஆடை கொடுக்கவும் 5 மா நிலம் நன்செய் பூமியைக் கொடையாக கொடுத்தனர் . நாள் 12.6.1761.


அந்நிலம் வைராபாளையம் கரையை சேர்ந்த பீளமேடு பகுதியில் தோப்பு அருகில் உள்ளது . அது காலிங்கராயன் வாய்க்கால் பாயும் நன் செய் நிலம் . சந்திர சூரியர் உள்ள வரை இக்கொடை நிலைக்க வேண்டும் என்று கொடுத்துள்ளதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.


இதன் மூலம் முஸ்லீம்களுக்கு மெக்காவிலே பன்றியைக் கொல்வது பாவமாக பாவித்து கல்வெட்டில் கூறியுள்ளது வியக்கத்தக்கது

(கல்வெட்டு பாடம் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது)


(இதே போல வேறு கல்வெட்டு இருப்பின் நண்பர்கள் கூறி உதவவும்)