Saturday, March 15, 2025

புத்துருவகலா இலங்கை Buduruwagala

இலங்கையின் உயரமான புத்தர் சிலை வெல்லேவயாவில் Wellewaya இருந்து 4Km தொலைவில் உள்ள Buduruwagala என்னும் இடத்தில் அமைந்துள்ளது . இயற்கையாக அமைந்த பெரிய பாறையில் பிரம்மாண்டமான ஏழு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பெரிய பாறையின் அமைப்பே யானை மண்டியிட்டு படுத்து இருப்பது போல் உள்ளது. இவை மகாயான பௌத்த மரபின் எச்சங்களாக கருதப்படுகிறது .

இந்த இடத்தின் பெயரான Buduruwagala என்பதில் புதூ (budu  ) என்பது புத்தர் என்றும் , உரு (uruwa ) என்பது உருவம் என்றும், கலா (gala ) என்பது கல்  என்ற அர்த்தத்திலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது . இது கி . பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் ,  பல்லவ சிற்பங்களை ஒத்து இருப்பதாகவும் சில அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . இலங்கையில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் மகாயன பௌத்தம் பரவியதாக சொல்லப்படுகிறது . இங்குள்ள ஏழு சிற்பங்களுக்கு நடுவில் பெரிய புத்தர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . புத்தரின் சிற்பத்திற்கு இரண்டு புறமும் தலா மூன்று சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன .  சுமார் 52 அடி உயரம் நிற்கும் புத்தரின் சிற்பத்தில் வலது கை மேல் நோக்கியவாறு உள்ளங்கை முன்னோக்கிவாறு அபயமுத்திரையில் பக்தர்களை ஆசிர்வதிப்பது போலவும் இடது கை அங்கியை பிடித்தவாறும் காட்டப்பட்டுள்ளது . இச்சிற்பத்தில் தற்போது தெரியும் சுண்ணாம்பு கலவையை காணும்போது முன்பு சிலையின் மேல் ஏதாவது வண்ணப்பூச்சு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .

புத்தருக்கு வலது பக்கத்தில் இருக்கும் மூன்று சிலைகளில் நடுவில் இருப்பது சுமார் 7 அடி உயரம் கொண்ட bodhisattva Avalokitheshvara அவலோகிதெஸ்வர . கைகளில் கடக ஹஸ்த முத்திரையும் தலையலங்காரத்தில் புத்தரின் உருவமும் கொண்டு இருப்பதால் இவரை bodhisattva Avalokitheshvara என்று நம்மால் இனம் காண முடிகிறது . உடலின் மேற்பாகம் ஆடை இல்லாமலும் கீழ் பாகத்திற்கு மட்டும் சிறிய வேட்டி போன்ற உடை அணிந்து காணப்படுகிறது . இவ்வுருவத்திலும் சுண்ணாம்புக்ககலவை மற்றும் வண்ணக்கலவையின் எச்சங்களை காண முடிகிறது .

அடுத்து புத்தருக்கும் போதிசத்தவ அவலோகிதேஷ்வரர்கும் இடையே 5 அடியில் பெண்ணின் உருவம் காட்டப்படுள்ளது . இவர் மகாயான பௌத்தத்தில் ஒரு பெண் போதிசத்வாவாகத் கருதப்படுகிறார் .

அழகான வளைந்த இடுப்புடன் வலது கையில்  கடக ஹாஸ்த முத்திரை இடது கையில் தாமரை தண்டை பிடித்தவாறு காட்சி தருகிறார் . சில சமயங்களில் இவரை அவலோதேஸ்வரருக்கு  துணைவி என்று குறிப்பிடுகின்றனர் . வஜ்ராயன பௌத்த மரபில் இவர் அனைத்து புத்தர்களின் தாயாகவும் , ஒரு புத்தராகவும் வணங்கப்படுகிறார் . இவரை பின்பற்றுபவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளித்து அவர்கள் ஞானம் வழிநடத்துபவராக கருதப்படுகிறார் .

அடுத்து அவலோகிதேஸ்வரருக்கு வலது பக்கத்தில் இருப்பவர் இளவரசர் சுதானா என்று கூறப்படுகிறது . சுமார் 6 மீ உயரமும் இடது கையில் கடஹ முத்திரையும் வலது கை கீழே தொங்கியவாறு  , உடம்பின் கீழ் பகுதியில் ஆடை அணிந்துவாறு காட்சி தருகிறார் . இவரின் கால் பகுதி சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது .

அடுத்து புத்தரின் இடதுபுறம் மூன்று உருவங்களில் நடுவில் இருப்பவர் Maitreya Bodhisattva மைதிரெய போதிசத்வா என்று நம்பப்படுகிறது. இவரின் உருவ அமைப்பு அவலோகிதேஸ்வரர் போன்றே உள்ளது . சுமார் 7மீ உயரத்தில் உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லாமல் அணிகலன்கள் மட்டும் அணிந்துவாறு உடலின் கீழ்ப் பகுதியில் ஆடை அணிந்த நிலையில் அணிகலன்களுடன், தலை பகுதி அலங்காரம் செய்யப்பட்டு இரு கைகளிலும் கடஹ முத்திரை காட்டப்பட்ட நிலையில் முகத்தில் அமைதியுடன் காட்சி தருகிறார் .

மைத்ரேய போதிசத்வாவின் வலது புறத்தில் , கையில் கடக முத்திரையுடன் காணப்படும் இவர் மஞ்சு‌ஶ்ரீ போதிசத்வாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . இரண்டு கைகளிலும் கடஹ முத்திரையுடன் தலை அலங்காரத்துடன் காணப்பட்டாலும் மீதி பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

மைத்ரேய போதிசத்வாவின் இடது புறத்தில் வஜ்ரபானி போதிசத்வா காணப்படுகிறார். சுமார் 6 மீ உயரமும் தலை அலங்காரத்துடனும் காதுகளில் மற்றும் கழுத்திலும் அணிகலண்களுடன் கைகளில் வளையல்களுடனும் காட்சி தருகிறார் .

இலங்கையில் காணப்படும் பல புத்த சிற்பங்களில் இது மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது .