Monday, December 14, 2020

பன்னவாடி , மேட்டூர்அணை

மேட்டூர் பகுதியில் உள்ள பன்னவாடியில் பாயும் காவேரி ஆற்றின் இடதுபுறத்தில் தர்மபுரி மாவட்ட நாகமரை, நெருப்பூர்,  பென்னாகரம் ஆகிய ஊர்களும்  வலது பகுதியில் சேலம் மாவட்ட மேட்டூர், கொளத்தூர், பன்னவாடி உள்ளிட்ட கிராமங்களும் இருந்து வருகின்றன. இந்த இரண்டு மாவட்டத்தின் எல்லைகளையும் காவேரி ஆற்றை கடந்தால் எளிமையாக செல்லமுடியும். அதனால் ஆற்றை கடக்க விசை படகுகள் பயன்படுத்தபடுகிறது . அணையின் நீர் மட்டத்தை பொறுத்து சவாரியின் தூரம் மற்றும் கடினம் அமைகிறது . நீர் இல்லாத சமயத்தில் கூட ஆற்றை நடந்து கடக்க பணம் செலுத்த வேண்டும் .








கங்கர்கள்கோயில் , நரசமங்களா ராமேஸ்வராகோயில்

கர்நாடக மாநிலம் , சாம்ராஜ் நகருக்கு அருகில் உள்ளது நரசமங்களா என்னும் சிற்றூர் . இங்கு உள்ள  "ராமேஸ்வரா கோயில்" 9ம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பழமையான  கோயில் ஆகும் . கங்கர்கள் 9ம் நூற்றாண்டில் தலைக்காட்டை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கர்கள் கோயிலில் இக்கோயில் மிகப்பழைமையானது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தமிழக கோவில் கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது  . மிக அகலமான கருவறையும் அதைவிட சற்றே குறுகலான அர்த்தமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறை மேல் அமைந்துள்ள விமானத்தில் மிக அழகான சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மிக அழகிய வேலைபாடுடன் நான்கு அடி உயர  சப்தமாதர் சிலைகள் உள்ளன . ( அறை பூட்டி இருந்ததால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை ) . இக்கோயிலின் உள்ளே விதானத்தில் ஒரு சதுரப்பலகையில் நடுவில் நடராஜரும் அதனைச் சுற்றி எண்திசை பாலகர்களும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. கங்கர்களுக்கே உரிய தனித்துவமான தூண்கள் உள்ளன. இதில் ஒரு தூணின் மேல்பகுதியில் கங்கமன்னர் அவர் மனைவியுடன் அமர்த்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது .

கோவிலின் வெளிப்புற வளாகத்தில் பழமையான கன்னட மற்றும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன .  ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளான் இக்கோயிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு உள்ளது . இக்கோயின் அமைப்பு புள்ளமங்கை கோயில் மற்றும் சீனிவாசநல்லூர் கோயிலை ஒத்து காணப்படுகிறது .