Wednesday, February 16, 2022

மாபெரும் சபைதனில் : உதயச்சந்திரன்

மாபெரும் சபைதனில்
ஆசிரியர் : உதயச்சந்திரன்

ஈரோடு மாவட்டம் புத்தக திருவிழா நிகழ்வில் இவர் ஆற்றிய உரையை கேட்டு வியந்து இருக்கின்றேன் . தற்போது அவரின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பும் அமைந்தது இனிமை .
 நாற்பது தனித்தனி கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கடந்து சென்ற முக்கிய வரலாற்று , விளையாட்டு , இயற்க்கை பேரழிவு , அறிவியல் ,ஓவியம் என பல நிகழ்வுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் தரும் புத்தகம் . திரு . உதயச்சந்திரன் அவர்கள் தான்  இதுவரை அரசாங்க பணியாற்றிய இடங்களில் நடந்த சிறு சம்பவங்களையும் அதனுடன் தொடர்புடைய வரலாற்று செய்திகளையும்  இணைத்து தந்துள்ளார் .

சர் . தாமஸ் மன்றோ கலெக்டராக பணியாற்றியபோது  மக்களிடம் பெற்ற செல்வாக்கு எத்தகையது என்பதையும் ,இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த இரயில் பற்றியும் , சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்கள் அவற்றின் அழகியலையும் , ஜான் சல்லியனின் நீலகிரி பயணத்தையும் , பென்னி குயிக் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது . அசோகனின் கல்வெட்டு சொல்லும் செய்தி , கீழடி தமிழரின் பெருமை என்பதையும்  அகழ்வாய்வின் அவசியத்தையும் , மகாத்மா பேசிய தமிழ் பற்றியும் , மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் பயன்படுத்திய சொல் ஆயுதம் பற்றியும் , தமிழில் முதன் முதலில் வந்த அச்சு நூல் எது ? என பல வரலாற்று பொக்கிஷங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது . திரு உதயச்சந்திரன் அவர்களுடன்  புதிய பாட நூல் உருவாக்கத்தில் பணியாற்றியர்கள் பற்றியும் , தான் நடத்திய தேர்தல் , ஜல்லிக்கட்டு பற்றியும் , அமெரிக்காவில் தான் சந்தித்த நண்பர்களிடம் காணப்படும் நம் மண்ணின் நினைவுகளையும் , தான் உயரக் காரணமாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் தன் தாய் பற்றியும் சொல்லும் கட்டுரைகளில் மனம் நெகிழ்கிறது .  மண்டேலாவின் விளையாட்டு ஆர்வம் , ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் குழந்தைகளில் காணப்படும் கற்றல் குறைபாடு என உலக அறிவியல்  செய்திகளையும் விவரிக்கிறது இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் குறிப்பிடும் சபைக்குறிப்பு முக்கியமான ஒன்று . ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் கவனமாக செயல்பட வேண்டும், எங்கு இரக்கப்படவேண்டும் , எங்கு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக  காட்டுகிறார் . 

இப்புத்தகத்தில் அவரின் தமிழ் வார்த்தைகளின் கோர்வை மிக நேர்த்தியாக உள்ளது . ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார் . இவர் தொல்லியல் துறையில் பணியாற்றியபோது இவரின் முனைப்பால் தொல்லியல் ஆர்வலர்களுக்கு  நடத்திய ஐந்து நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது .  அப்போது இவரின் ஆளுமையை கண்டு வியந்துள்ளேன் .  புத்தகத்தின் தலைப்பு இவருக்கே பொருத்தமாக உள்ளது .



Thursday, February 10, 2022

வரலாற்றில் அரிக்கமேடு : புலவர் ந . வேங்கடேசன்

      புதுச்சேரிக்கு அருகே வங்கக்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பழமையான மறைந்து போன நகரம் அரிக்கமேடு .  அரியாங்குப்பம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மேடு தான் அரிக்கமேடு .

      1937 ஆம் ஆண்டு அரிக்கமேட்டைச் சேர்ந்த சிறுவர்கள் மேற்புறத்தில் கிடைத்த பொருட்களை பிரஞ்சுப் பேராசிரியர் மூவோ துப்ராய் அவர்களிடம் கொடுத்தனர் . அவர் மேலும் இவ்விடத்தை ஆராய்ந்ததில் கிடைத்த கல்லொன்றில் ரோமானியப் பேரரசன் அகஸ்டஸின்  தலை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது . பின்னர் மார்ட்டின் லிவர் என்பவர்  இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார் .

  பின்னர் தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது இரண்டு கைப்பிடி கூர்முனை உடைய அம்போரா எனப்படும் மது ஜாடிகள் , ரோம் விளக்குகள் ,  கண்ணாடிப் பாத்திரங்கள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது . இந்நகரம் மாபெரும் வணிகத் தளமாக விளங்கி இருக்கும் என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.

                பழங்காலத்தில் இப்பகுதி உலக சந்தையை பெற்றுத்தந்த பெருநகரமாக இருந்துள்ளது . முக்கிய தொழிலாக  மஸ்லின் துணிகளுக்கு சாயமிடும் தொழில் இருந்திருக்கிறது . மஸ்லின் துணியை சாயம் தயாரிக்கவும்  சாயமிடவும் உதவும் குளம் கண்டுபிடிக்கப்பட்டது . கிமு 23 முதல் கிபி 14 வரை பழக்கத்தில் இருந்த ரோம பேரரசின் நாணயங்கள் இங்கே கிடைக்கின்றன .

             யவனர்கள் உடனான இவ்விடத்தின் தொடர்பு பற்றி மிக விளக்கமாக விவரிக்கிறது இந்நூல் . அரிக்கமேடு எவ்வாறு வணிகத்தில் சிறப்புற்று இருந்தது என்பதையும் , இங்கு ஆய்வு செய்தவர்களை பற்றியும் , அகழாய்வு செய்து எடுத்த பொருட்கள் பற்றியும் மேலும் இங்கே அகழாய்வு செய்வத்தின் அவசியத்தைப் பற்றியும் கூறுகிறது இந்நூல் .  பழங்கால நகரத்தை பற்றியும் , அகழாய்வு இடங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள்   இந்நூலை அவசியம் படிக்க வேண்டும் நன்றி



ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் : ஆசிரியர் முகில்

                      1889 ம் ஆண்டு ஏப்ரல் 20 , மாலை 6:30 ஆஸ்திரிய நாட்டில் உள்ள Gasthof  Zum Pommer என்ற சிற்றூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் , நமது நாயகன் ஹிட்லர் . பிறந்த போது இன்னும் இரண்டு மாதங்களே குழந்தை உயிருடன் இருக்கும்  என்று கணித்த மருத்துவச்சியின் வார்த்தையை பொய்யாக்கிய அக்குழந்தை ,  வளர்ந்ததும் உலகத்தையே மிரட்டியது . படிப்பும் வராமல் , நோஞ்சான் உடம்புடன் , ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தையும் அடைய முடியாமல் தவித்தவர் , எவ்வாறு உலகமே அஞ்சும் சர்வதிகாரியாக மாறிய வரலாறு இப்புத்தகம் . ஹிட்லர் என்றாலே கொடுங்கோல் மனிதன் என்று நம் மனதில் தோன்றும் எண்ணம் . இந்த எண்ணம்  சரியா தவறா என்று நாம் அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .

    தந்தையின் அதீத கண்டிப்புடன் , தாயின் பேரன்புடனும் தொடங்கியது ஹிட்லரின் இளமைப் பருவம் . பருவ வயது வந்தவுடன் காதல் வயப்படுதல் , கவிதை எழுதுதல் , ஓவியம் வரைதல் , புத்தகம் படித்தல் என்று  சாமானிய மக்களின் வாழ்க்கையே வாழ்ந்தார் . இளைஞர்ரானதும்  வேலை கிடைக்காமல் , நிரந்தர  முகவரி இல்லாமலும்  தாயையும் இழந்து தனிமையில் தவித்த ஹிட்லருக்கு , புத்தகம் படிப்பது ஓவியம் வரைவது என்பது மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது .  பிறப்பால் ஜெர்மரான ஹிட்லர் , முதலாம் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வியால் மனம் துவண்டார் . அதற்கு காரணமான நாடுகளையும் யூதர்களை பழிவாங்க துடித்தார் . ஜெர்மனி மீது கொண்ட நாட்டுப்பற்றால் ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க  பேச்சாளராக ஆரம்பித்த அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக வளர்ந்து அதிபர் ஆனார் . 

      அதிபரானதும் ஹிட்லரின் மற்றொரு முகம் தெரிய ஆரம்பித்தது . " தானே அதிபர் , தானே சர்வாதிகாரி , தானே முப்படைத் தளபதி , தானே கடவுள் என்று அதிரடியாக செயல்பட்ட வரை கண்டு உலகமே நடுங்கியது . அதிபராகி அவர் நடத்திய தேர்தல் எல்லாம் வேற லெவல் . யூதர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை ஜெர்மனி மக்களின் மனதில் ஆழமாக விதைக்க உக்கிரமாக செயல்பட்டார் . அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்று , பத்திரிகையின் சுதந்தரத்தை முழுவதுமாக தடை செய்தார் . குறைந்த விலையில் ரேடியோ வழங்கி அதில் தம் புகழ் பாட வைத்து மக்கள் சிந்தனை முழுவதும் நிறைந்தார் .

                            உலக நாடுகளிடம் நல்லவன் என்ற முகமூடி அணிந்து ஒலிம்பிக் போட்டியை நடத்தி உலக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார் . உலகில் சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர் என்று கொண்டாட வைத்தார் .

 யூதர்களை ஜெர்மனி விட்டே துரத்த நினைத்தவர் , காலம் செல்ல செல்ல உலகை விட்டே அனுப்ப முடிவு எடுத்தார் . மண்ணாசையும்  பழிவாங்கும் எண்ணமும் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது .  ஹிட்லருக்கு மட்டுமா மண்ணாசை ? பிரான்சு பிரிட்டன் , சோவியத் யூனியன் , ஜப்பான் , இத்தாலி என பல நாடுகள் உலகை ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டனர் . 

  1918 இல் முதல் உலகப் போரில் பிரான்சு ஜெர்மனியை  அவமானப்படுத்தியதற்கு  பழிதீர்க்க எண்ணினார் ஹிட்லர் . முதல் உலகப் போரில் ஜெர்மனி பிரான்ஸிடம் தோற்று சரணடைந்த போது , பிரான்சு கான்பீன் என்ற இடத்தில் , ஒரு காலி ரயில் பெட்டியில் வைத்து ஜெர்மனியிடம் கையெழுத்து வாங்கியது . இதற்கு பலி தீர்க்க 1940 ஆம் ஆண்டு பிரான்சை வென்ற ஹிட்லர் அதே இடத்தில் முதல் உலகப் போர் சரணாகதி ஒப்பந்தத்தை விட மோசமான ஒப்பந்தத்தில் பிரான்சை கையெழுத்திட வைத்தார். இப்படி பழிதீர்க்கும் படலத்தை அழகே அரங்கேற்றினார் . இப்படி அடுக்கடுகான வெற்றியால் ஹிட்லர் மிக மோசமான  முடிவுகளையும் எடுக்க  ஆரம்பித்தார் . அதுவே சோவியத்துடனான போர் .

                    சோவியத் யூனியன் ஸ்டாலின்கிராடு மீதான போரில் ஜெர்மனிக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன . உணவு பற்றாக்குறை , அதீத குளிர் போன்ற பல காரணங்களால் ஜெர்மனி வீரர்கள் அவதிப்பட்டனர் . தளபதிகள் படையை திரும்ப அழைக்க அறிவுறுத்தினர் . அவர்களின் ஆலோசனையை  நிராகரித்ததுடன் வீரர்களின் கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் அவர்களின் நிலை கண்டும் மனம் இரங்காத ஹிட்லர் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்தார் . குண்டடிபட்டு இறந்தவர்களை விட குளிர்  , பசி நோயால் இறந்தவர்கள் அதிகம் . அதனால் சோவியத் படையினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு வேகமாக முன்னேறினர் . ஜெர்மனியின் கிழக்கே சோவியத் படையினரும்  மேற்கே நேசப் படைகளும் கைப்பற்றியது . பிரான்ஸ்யை ஹிட்லரின் பிடியில் இருந்து விடுவிடுத்தும் அடுத்த இலக்கு இலக்கு ஜெர்மனி தான் என்ற நிலையே இருந்தது , அதிலும் முக்கியமாக ஹிட்லரின் உன்னத உயிருக்கு தேதி குறிக்கப்பட்டது . முதலாம் உலகபோரில் ஜெர்மனி சரணடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தை மீண்டும் ஜெர்மனிக்கு ஏற்படுத்த ஹிட்லர் அனுமதிக்கவில்லை .


 1945 , ஏப்ரல் 20 ஹிட்லரின் 56வது பிறந்தநாள் , தலைவர் உயிருக்கு ஆபத்து அதனால் முக்கியமானவர்கள் அவரை தலைமறைவு ஆக சொல்லி வேண்டினர் . "இறுதி வரை பெர்லினில் இருந்தே போராடுவேன்" என்று அவர்கள் கோரிக்கையை மறுத்து விட்டார் . என் உயிரை எடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று  உறுதியாக கூறிய ஹிட்லர் , எதிரிகளின் கையில் தனது உடலின் சாம்பல் கூட சிக்க கூடாது என்று தனது மரணத்தை திட்டமிட்டார் . தன்னுடன் மரணத்திலும் சேர்த்து வர எண்ணிய  ஈவாவை ஏப்ரல் 28  சட்டப்படி திருமணம் செய்து கொண்டார் . இறுதியாய் எழுதிய தன்னுடைய மரண சாசனத்தில் ஜெர்மனி மக்களுக்கும் வீரர்களுக்கும் நன்றி சொன்னதுடன் தன் சொத்தை நாட்டிற்க்கே அளிக்குமாறு எழுதியுள்ளார் . தன் இறுதி நொடியில் கூட  யூதர்களிடம் அவர் கொண்ட வெறுப்பு மாறவே இல்லை . யூதர்களிடம் கருணை காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கையாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் . 1945 ஏப்ரல் 30  தனது மரணத்தை தானே ஏற்படுத்திக்கொண்டார் .                         யூதர்கள் எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டார்கள் என்பதைப் பற்றி தனியே  23ம் அத்தியாயத்தில் ஆசிரியர் கூறியுள்ளார் . அதை படிக்க தனி மனஆற்றல் வேண்டும் . கொடூர படுகொலைகளும் ,மனிதத் தன்மையற்ற செயல்களும் நம்மை மிரள வைக்கிறது . Concentration camp என்ற சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் மட்டுமின்றி ஹிட்லரை எதிர்ப்பவர்களும் இடம்பிடித்தனர் . இவர்களைக் கொண்டு உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான வேலைகள் செய்ய வைப்பது , விஷ வாயு கூடங்களில் அடைப்பது , ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைக்கு எலிக்கு பதிலாக இவர்களை பயன்படுத்துவது , நிற்க வைத்து சுட்டு தள்ளுவது என பலவிதமான கொடூரங்கள் நடத்தப்பட்டன . இதை செய்த நாஜிகள் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு . சுமார் 50 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .

                               மனித கொலைக்காட்சிகளை விரும்பி பார்க்கும் ஹிட்லருக்கு விலங்குகளை வேட்டையாடுவது , வதைப்பது என்பது ஆகாத செயல் . நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் . அதேபோல் சாப்பிடும் விஷயத்தில் அவர் சுத்த சைவம் . சாக்கலேட் , ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப்பிரியம் . இப்படி பல வினோத குணங்களை கொண்டவராக இருந்துள்ளார் . 

                             

அவர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியில் விபசாரம்   நடக்காமல் பார்த்துக்கொண்டார் . ஜெர்மனி பெண்கள் மத்தியில் இவர் ஹீரோவாக வலம் வந்தார் . அதனாலேயே இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது . அரசியலில் ஈடுபட்டத்தில் இருந்து இவர் மேல் பல கொலைமுயற்சிகள் நடந்தன . எல்லாவற்றிலும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார் . 

  இவர் விதைத்த விதையான யூதர்கள் வெறுப்பு இவர் இறப்புக்கு பின்னும் ஜெர்மனியர்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தது . சர்வதிகாரியாக வலம் வந்த ஹிட்லர் பற்றி முழுமையாக தெரித்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .

           ஆசிரியர் முகில் அவர்களின் எழுத்துக்களில் வரலாற்றை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது . ஒரு மனிதனின் முழு வரலாற்றை கொஞ்சமும் போராடிக்காமல் , கற்பனையை சேர்க்காமல் எழுதி இருப்பது அருமை . இவர் புத்தகத்தை எல்லாம் பள்ளியில் படிக்கும் போதே கிடைத்து இருந்தால் ஒருவேளை நானும் வரலாற்று ஆய்வாளராக வலம் வந்து இருப்பேன் . வரலாற்று பிரியர்கள் அனைவருக்கும் இவரின் வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் என்று கேட்டிக்கொள்கிறேன் .