Tuesday, September 3, 2019

பாறைஓவியம் ,கரிக்கையூர், கோத்தகிரி

தொல்பழங்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொன்மையான அடையாளங்களாக பாறை ஓவியங்களை கூறலாம்.  இவை தனிமனிதனின் எச்சங்களாக இல்லாமல் ஓர் குழு அல்லது இனத்தின் பண்பாடு மற்றும் வாழ்க்கையை குறிப்பது போலவே அமைந்துள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஓவியங்கள் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் , வேட்டையாடுதல் , கால்நடை வளர்த்தல் போன்றவற்றை சார்ந்தே உள்ளன . பாறை ஓவியங்கள் பொதுவாக வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்பட்டாலும் சிவப்பு , வெள்ளை  நிறங்களிலேயே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன . 

 கோத்தகிரி அடுத்து உள்ள சோலூர் மட்டம் அருகில் உள்ள கரிக்ககையூரில் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ளன . இந்தியாவில் உள்ள பெரிய பாறை ஓவியத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று . இங்கு ஒரு பெரிய குகை அமைப்பில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன . இங்கிருந்து பார்த்தால் சுமார் 10 - 20 கிலோமீட்டர் தூரத்தை பார்க்க முடிகிறது . இங்கு இருந்து பார்த்தால் பவானி சாகர் அணையின் நீர் தெரிகிறது .  இங்கு  200க்கு மேற்பட்ட வெவ்வேறு காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன . இவை செந்நிறம் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது . இவை சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது .

 இங்கு பல விலங்குகளின் ஓவியங்கள் , போர் காட்சி , நடனக்காட்சி , மனித உறவுகளை மையப்படுத்திய ஓவியங்கள் என பல ஓவியங்கள் உள்ளன . சில விலங்குகளை பக்கவாட்டிலும்,  சில விலங்குகளை நேர்கோட்டில் வரைந்துள்ளனர் . கற்கால மனிதனின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் இவ்வோவியங்கள் மூலம் நாம் அறிய  முடிகிறது .












சமணர் கோயில், சுல்தான்பத்தேரி, sultanbattery, jaintemples

சுல்தான் பத்தேரி , வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டாவிலிருந்து 24 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது . கல்வெட்டுகளில்  சுல்தான் பத்தேரி  " கணபதி வட்டம்"என அழைக்கப்படுகிறது.  திப்பு சுல்தான் இந்த ஊரை கைப்பற்றி இப்பகுதியை ஆயுதக் கிடங்காகவும் வெடிமருந்துகளை சேமிப்பதற்காகவும் பயன்படுத்தினார் . அதனால் இவ்வூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் "சுல்தான் பத்தேரி" (sultan battery) என்று பெயர் மருவியதாக கூறப்படுகிறது .

 பொதுவாக கேரளாவில் மிகக் குறைவான சமணக் கோயில்களே உள்ளன . அவற்றுள் சுல்தான் பத்தேரி ஊரில் அமைந்துள்ள பழமையான சமணக்கோயில் கிபி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது  .
அதைச் சுற்றியும் 12 பாரம்பரிய சமண வீதிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
கோயிலின் கட்டிடக்கலை  விஜயநகர் கட்டடக்கலை பாணியில் உள்ளது . கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை.  இங்கு உள்ள தூண்களில் சர்பபந்தா , தீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளன. இது தற்போது மத்திய தொல்பொருள்   துறையின் கீழ் உள்ளது .







எடக்கல் குகை கீரல் ஓவியங்கள், edakkalcaves , petroglyps

கேரளா மாநிலம் , வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எடக்கல் . இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது . மேலே செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய நல்ல பாதை அமைப்பு உள்ளது. "எடக்கல்" என்பதற்கு "இடையில் ஒரு கல்" என்பது பொருள் . இடைக்கல் என்பது இடக்கல் என்றாகி பின்பு எடக்கல் என்று மறுவியுள்ளது.
இயற்கையாக அமைந்த இக்குகையில் வாழ்ந்த தொல்பழங்கால மனிதன் தன் வாழ்க்கை முறையையும், தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளான் . பாறைகளில் வண்ணங்களில் ஓவியங்கள் வரைவதற்கு முன் ஆதி மனிதன் பாறைகளில் ஓவியங்களை செதுக்கி தன் சுவடுகளை பதித்து உள்ளான் . கற்கருவிகளால்
கற்கால மனிதர்கள் செதுக்கியதே "கீறல் ஓவியங்கள்' (petroglyps ) ஆகும் . இத்தகைய ஓவியங்கள் உலகெங்கும் காணப்படுகிறது . இந்தியாவில் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இங்கு உள்ள மலையில் இரண்டு குகைகள் காணப்படுகின்றன அவை ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது.மேல் குகை , இரண்டு பெரிய பாறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . மேல் குகையின் நேர்கீழே அடுக்குமாடி போன்ற அமைப்பில் கீழ்க்குகை அமைந்துள்ளது .சுமை காரணமாக சரிந்து போகக்கூடும் என்பதால்,
மேல் குகையில் ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை . கீழ் குகை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது .இங்கு பெட்ரோகிளிஃப்கள் இல்லை .
1890ம் ஆண்டு இந்த எடக்கல் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காவல்துறை அதிகாரியான Fred Fawcett என்பவர் ஆவார்.
இங்கு உள்ள கீறல் சிற்பங்களில் மனித மற்றும் விலங்கு புள்ளிவிவரங்கள், மனிதர்களால் பயன்படுத்தப்படும் கருவிகள் ,
சடங்கு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளன. அனைத்து மனித வடிவங்களும் தலைக்கவசம் அணிந்திருப்பதைக் காணலாம். யானைகள், வேட்டைக்காரர்கள் மற்றும் மான்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இவை தவிர சக்கரங்களுடன் வண்டிகள் பல காணப்படுகிறது . இவை சுமார் 8000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது.
மேலும் இங்கு ஒரு தமிழ்-பிராமி கல்வெட்டும் உள்ளது . இந்த இடத்தை கேரளா அரசாங்கம் நல்ல முறையில் பாதுகாத்து வருகிறது .
 











Halealur , Arkeswara temple


சோழர்களின் வரலாற்றில் "தக்கோலப் போர் " மிக முக்கியமான போராகும் . பராந்தக சோழனின் மகனும் , ராஜராஜ சோழனின் பெரிய பாட்டனாரும் ஆன இராஜாதித்த சோழரின் வீரத்தை பறைசாற்றும் போர் தக்கோலப் போர் .
அரக்கோணத்திற்கு அருகே உள்ள தக்கோலம் என்னும் இடத்தில் கி .பி . 949 ஆம் ஆண்டு இராஷ்டிர கூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவருக்கும் , இராஜாதித்த சோழருக்கும் கடுமையான போர் நடந்தது . கன்னர தேவருக்கு துணையாக போர்புரிந்த கங்க அரசன் இரண்டாம் பூதுகன் , இராஜாதித்தர் யானை மீது இருக்கும்போதே குத்திக் கொன்றார் . இராஜாதித்தர் யானை மீதே இறந்தார் , அதனால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று போற்றப்பட்டார் . இப்போரில் சோழர்கள் படை தோற்றது .
சோழர்களை எதிர்த்து பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக விதமாக இரண்டாம் பூதுகன் கர்நாடக மாநிலத்தில் உள்ள (Hale alur) ஹளே ஆளூர் என்னுமிடத்தில் உள்ள ( Arkeswara temple ) அரகேஸ்வரர் கோயில் என்னும் கோயிலை கட்டினார் . கோயிலின் முன் உள்ள நந்தி மண்டப தூண்களில் தக்கோலப் போரின் காட்சிகளை வடித்துள்ளனர் .
நந்தி மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் தக்கோலப் போரில் நடந்த நிகழ்வுகளான, இராசாதித்தன் யானை மேலே வீழ்த்தப்பட்ட காட்சிகளை வடித்துள்ளனர் . மேலும் கோயிலை சுற்றி சப்தமாதா சிலைகளும் நடுகற்களும் மற்றும் சில சிற்பங்களும் அழகுடன் காட்சி தருகின்றன .

















சித்திரசாவடி, நரசிங்கபட்டி, மதுரை

மதுரை , நரசிங்கபட்டியில் உள்ளது "சித்திரசாவடி" என்னும் இடம் . "சாவடி" என்பது வழிப்போக்கர்களும், உள்ளூர் ஆண்களும்  தங்கவும், பேசவும் பயன்படுத்தப்படும் இடம் . சித்திரங்கள் நிறைந்த சாவடி என்பதால் "சித்திரசாவடி" என்று பெயர் ஏற்பட்டது  . இங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயண ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன .பெரும்பாலும் ஓவியங்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் தான் காணப்படுகின்றன . ஆனால் இங்கு சாவடியில்  ஓவியங்கள் காணப்படுவது வியப்பை அளிக்கின்றன .

மீனாட்சி அம்மன் கோயில் மற்றும்
அழகர்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் காணப்படும்  ஓவியங்களை ஒத்த ஓவியங்கள் இங்கு உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவ்வோவியங்களின் வண்ணங்களும் காட்சிகளும் நம்மைக் கவர்கின்றன . 
சிவப்பு , பச்சை , நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன .
இன்றைய அனிமேஷன் முறையில் தொடர்க்காட்சி  ஓவியங்களாக காணப்படுகிறது .நான்கு புறமும் உள்ள சுவர்களில் காணப்படும் இவ்வோவியங்கள் பார்வையாளர்களின் பார்வை தூரத்தில் உள்ளதே இதன் சிறப்பு ஆகும் . 

தென்னிந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சுவர் ஓவியங்கள் உள்ளன . இந்த ஓவியங்கள் புராண கதைகளை மட்டும் விலக்காமல் அந்தந்த காலகட்டத்தின் வாழ்வியலையும் சமூகத்தையும் வெளிப்படுத்துகிறது . 
தற்போது இங்கு பாதி மேற்கூரைகள் பெயர்ந்து , ஓவியங்கள்யாவும்  அழியும் தருவாயில் உள்ளன .