Tuesday, September 3, 2019

பரமத்தி கோட்டை

#பரமத்தி #கோட்டை

நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பரமத்தி. இந்த ஊருக்கு வெளியே புறவழிச்சாலையிலிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ளது பரமத்தி கோட்டை.

பரமத்தி கோட்டை முழுவதும் மண்ணால் ஆன 1000அடி கொண்ட சதுர வடிவிலான கோட்டை ஆகும். இதன் சுவர் அதன் கட்டுமான காலத்தில் சுமார் 30 அடி உயரம் இருந்திருக்க வேண்டும். பிரம்மாண்டமான இந்த மண்கோட்டையைச் சுற்றிலும் நன்கு ஆழமான அகழியாலும் ஒருபுறம் திருமணிமுத்தாற்றாலும் அரணாக சூழப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக கோட்டை சுவற்றின் நான்கு மூலைகளிலும் உயரமான கண்காணிப்பு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சுவற்றைவிட மிக உயரமான மண்மேடுகள் நான்கு  மூலைகளிலும் காணப்படுகின்றன.

கோட்டையின் நுழைவாயில் தென்கிழக்கு திசையில் உள்ளது. அதனை அறிவிக்கும் விதமாக மிக உயரமான கற்தூண்கள் இரண்டு காணப்படுகின்றன. நுழைவாயிலிலிருந்து நூறு அடி தொலைவில் ஒரு பெரிய கல்லில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் ஒன்று கிடந்த நிலையில் உள்ளது.  கோட்டையில் நடுவே ஒரு கோட்டையண்ணன் கோவிலும் கோட்டைக்கு வெளியே ஒரு அழகு நாச்சியம்மன் கோவிலும் உள்ளது.இவை தவிர  தற்போது கோட்டையில் வேறு எந்தவொரு தடயங்களும் இல்லை.

இக்கோட்டையைப் பற்றி ஒரு சுவாரஷ்யமான செவிவழிச் செய்தியும் உண்டு. அதாவது கிபி1310 ல் வடக்கிருந்து மாலிக்கபூரின் படைகள் இவ்வழியாக மதுரைக்குச் சென்றதாகவும், அப்படைகள் சென்ற அதிர்வினாலேயே இக்கோட்டை இடிந்து தரைமட்டமானது என்பதுதான் அது. கேட்க சுவாரஷ்யமாக இருந்தாலும் நம்மவர்கள்  அவ்வளவு மோசமான  கட்டுமானங்கள் எழுப்பியிருக்க வாய்ப்பில்லை.
( அதிர்வினால் விழ அது சென்னை விமான நிலைய மேற்கூரையா என்ன?😉)

கோட்டையண்ணன் கோவில் பற்றிய செய்தி சற்றே சுவாரஷ்யமானது. இது பற்றி அடுத்து தொடர்ந்து காண்போம்.

#konguhistory 30





No comments:

Post a Comment