Saturday, December 26, 2020

ஈரோடு ஈங்கூர் அல்லலீஸ்வரர்

                 கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடுமேற்கரை பூந்துறை நாடு . இந்நாட்டின் ஆறாவது ஊர் ஈங்கூர் ஆகும் . "ஈஞ்சனூர்"  "ஈங்கையூர்" என்பதே மருவி ஈங்கூர் ஆயிற்று . 

                        இவ்வூர் ஈரோடு - சென்னிமலை செல்லும் வழியில் பெருந்துறை அருகில் உள்ளது . இங்கு அருள்மிகு வடிவுள்ள மங்கை  உடனமர் அல்லலீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் உள்ளன . 

                     ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயிலில் புலிகுத்தி கல் மற்றும் சில நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன . அல்லலீஸ்வரர் கோயில் மிகவும் பழமையான கோயில் . இக்கோயிலில் கி .பி 1694 ம் ஆண்டு மைசூர் உடையார்  சிக்கராய உடையார் காலத்தில் , நஞ்சராயர் என்பார் கொங்கு நாட்டில் அதிகாரம் செய்யும் போது இவ்வூரினர் இக்கோயிலுக்கு குளம் அளித்ததாக கல்வெட்டுக் குறிப்பு உள்ளது . இக்கல்வெட்டு தற்போது காணப்படவில்லை . 


ஈங்கூர் குட்டை தோட்டத்தில் ஒரு அழகிய அய்யனார் சிற்பம் கல்வெட்டுக் குறிப்புடன் இருந்தது. 

             ஈங்கூரை சேர்ந்த காவலன் குரும்பில்லரில் போத்தன் செய்யானான குலோத்துங்க பல்லவரையன் என்ற வேட்டுவ தலைவர் அய்யனார் சிற்பத்தை எடுப்பிதாக இக்கல்வெட்டு கூறுகிறது . இந்த கல்வெட்டு அருகில் யோக பட்டையுடன் அமர்ந்த நிலையில் ஐயனார் உள்ளார் . ஆண்களும் பெண்களும் ஐயனாரை வணங்குகின்றனர் . வேட்டைக்கு செல்லும் வேடர்கள் நாயுடன் காட்சி தருகின்றனர் . வேடர்களின் உடை  அலங்காரம் , அணிகலன்கள் , வேட்டை கருவி ஆகியவை அழகாக காட்டப்படுள்ளது . இக்கல்வெட்டு இச்சிற்பமும் தற்போது ஈரோடு கலைமகள் பள்ளி கலைக்கூடத்தில் உள்ளது .












No comments:

Post a Comment