Friday, April 29, 2022

மதங்கீஸ்வரர் கோயில் , காஞ்சிபுரம்

                        பல்லவ தேசத்தின் தலைநகரான காஞ்சி , பாரத தேசத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும் .  கலை , கல்வி , சமயம் என பலவற்றில் சிறந்து  விளங்கிய இவ்வூர் , சமண காஞ்சி , பௌத்த காஞ்சி , சிவகாஞ்சி , விஷ்ணு காஞ்சி என பிரிவுகளைக் கொண்ட நகரமாக திகழ்ந்தது . தற்போதும் பல பழமையான கோயில்களை கொண்ட நகரமாக  திகழ்கிறது .

                            காஞ்சி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்த மதங்கீஸ்வரர் என்னும் 1400 வருட பழமையான கோயிலைப் பற்றி காண்போம் . நகரின் நான்கு பிரிவுகளில் ஒன்றான சிவகாஞ்சியில் இக்கோயில் அமைந்துள்ளது . மணற்கற்களாலும் , கருங்கற்களாலும் கட்டப்பட்ட இக்கோயில் , மேற்குப் பார்த்து அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் . மதங்கி முனிவர்  இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வழிபட்டு ஐம்புலன்களை அடக்கி ஆளும் ஆற்றலை பெற்றார் என்பது தல வரலாறு  . காஞ்சிபுராணம் குறிப்பிடும் 108 சிவாலயங்களில் இவ்வாலயமும் ஒன்று . இராஜ சிம்ம பல்லவன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம்  நந்திவர்மன் காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது .

                                          


                     இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய  லிங்கமும் அதன் பின்னே உள்ள சுவற்றில் சோமஸ்கந்தர் உருவமும் , லிங்கத்தின் முன்னே நந்தியும் காணப்படுகிறது . முகமண்டபத்தை நான்கு சிங்க தூண்கள்  தாங்கி நிற்கின்றன . கருவறையின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கிறார்கள் . வலதுபுறம் உள்ள துவார பாலகர் மழுவுடையார் ஆவார் . இவர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . இடதுகரம் கீழ்நோக்கிவாறு சூலத்தின் மேல்  உள்ளதாகவும் அதே சமயம் அவரது கீழ் வலது கரம் இடுப்பில் உள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளது. இவரது மேல் வலது , மேல் இடது கரங்கள் மேலே நோக்கியவாறு உள்ளது . சூலத்தில் பாம்பு உறைந்திருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது .  பெரிய கண்கள் , பறக்கும் கூந்தல் மற்றும் கோர முகத்துடன் மூர்க்கத்தனமாக காட்சிதருகிறார் . 

                                                           


                                        


                                               இடதுபுறம் உள்ள துவாரபாலகர்  திரிசூலநாதர் ஆவார் .இவர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . கீழே உள்ள வலதுகை சூலத்தின்  மீதும் அதே சமயம் இடது கை சரியாக தெரியவில்லை .   அவரது மேல் இரு கைகளில் சில ஆயுதங்கள் உள்ளன .மற்றவை சரியாக அறியமுடியவில்லை .

                                                        


 இராவண அனுக்கிரக மூர்த்தி : 

                                               அர்த்தமண்டபத்தின் தெற்கு நோக்கிய சுவரில் இராவண அனுக்கிரக மூர்த்தி சிற்பம் உள்ளது . பத்து தலைகளுடன் இருபது கரங்களுடனும் இராவணன் கைலாச மலையை தூக்கி கொண்டிருப்பதை போலவும் , மலையின் மேல் சிவன் உமாதேவியுடன் அமர்ந்திருக்கும் நிலையிலும் காணப்படுகிறது . பறந்துபோன சிவகணங்கள் இராவணனை நோக்கி வருவது போல அமைந்துள்ளது . 

                                                     


கஜசம்ஹாரமூர்த்தி :

                              அர்த்தமண்டபத்தின் தெற்கு நோக்கிய சுவரில் பலகையில் கஜசம்ஹாரமூர்த்தி . சிவன் ஆறு கரங்களுடன் , உரிக்கப்பட்ட யானை தோலை பிடித்தவாறு மிகவும் உக்கிரமாக காட்சியளிக்கிறார். இதனைப் உமாதேவி மிரட்சியுடன் காண்பதாக காட்டப்பட்டுள்ளது .

                                                     


ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி :

                            அர்த்தமண்டபத்தின் வடக்கு நோக்கிய சுவரில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிற்பம் உள்ளது . நடனமாடும் சிவன் எட்டு கரங்களுடன் வலது காலை மேலே உயர்த்தி இருப்பார் . அவருடன் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உருவமும் காணப்படுகின்றன . அவர்களில் ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறார் மற்றொருவர் நடனமாடுகிறார் . 

                                                     


 கங்காதர மூர்த்தி : 

                          மற்றொரு பலகையில் கங்காதர மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . தனது கீழ் இடது கையால் உமாவை தழுவுகிறார் , அதேசமயம் அவரது மேல் வலது கை அருகே கங்கை காட்டப்பட்டுள்ளது .  சிவனின் மேல் வலது புறத்தில் நாய் காணப்படுகிறது . கங்காதரர் சிறப்பத்தில் நாய் உருவம் காட்டப்பட்டுள்ளது தனி சிறப்பாகும் .

                                                              



                                                       வெளிப்புற சுவற்றில் பல சிற்பங்கள் உள்ளன . வெளிசுவற்றின் நான்கு மூலைகளிலும் பாயும் சிங்கத்தின் மீது  வீரன் அமர்ந்து இருப்பது போலவும் உள்ளது . உபபீடத்தின் முனைகளில் யானை தாங்குவது போல அமைந்துள்ளது இதை கஜபந்தம் என்பர் .பல்லவர்களின் எஞ்சியிருக்கும் எட்டு பல்லவக் கோயில்களில் இதுவும் ஒன்று . பல்லவர்களின் கலைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இக்கோயில் உள்ளது .