Friday, February 12, 2021

கர்நாடக நடுகற்கள்

பழங்காலத்தில் வீரச்செயல்கள் செய்தவர்களின் நினைவாக நடுகல்  வைத்து வணங்குவது வழக்கம் . இவ்வழக்கம் கர்நாடகா மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே இருந்துள்ளது .  அங்கும் எண்ணற்ற நடுகற்கள் காணப்படுகின்றன . அவை தமிழக நடுகற்களை ஒத்தே காணப்படுகின்றன . 


படம்-1 

ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல் போரில் இறந்த வீரனுக்காக சதியேறிய மனைவிக்கான சதிக்கல் . இது மூன்று நிலை நடுகல் .  முதல் நிலையில் ஒரு வீரன் கையில் அம்பும் அவனை எதிர்க்கும் மற்றொரு வீரன் கையில் வில்லும் காட்டப்பட்டுள்ளது .  அவர்களுக்குக் கீழே  ஆநிரைகள் காட்டப்பட்டுள்ளது . கூடவே பெண் உருவமும் உள்ளது .  இரண்டாம் நிலையில் சதி ஏறிய பெண்ணை தேவலோக அழைத்துச் செல்லும் காட்சி . இறுதி நிலையில் அப்பெண் இறைவனடி சேர்ந்த காட்சி காட்டப்பட்டுள்ளது . 



படம் 2 :

  அரசர் அல்லது தலைவருக்கான நடுகல். இருவரும் ஒரே போரில் இறந்துள்ளனர். ஒருவரின் மனைவியும் உடன் சதியேறியுள்ளார்.   இது நான்கு நிலை நடுகல் . முதல் நிலையில் இரு அரசர்கள் அல்லது தலைவர்களை பல்லக்கில் அழைத்து செல்வது போல கட்டப்பட்டுள்ளன .  இரண்டாம் நிலையில் இரு அரசர்களும் குதிரையில் அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவர்களுடன்  யானைப் படையும் மற்றும் வீரர்களும் காட்டப்பட்டுள்ளது .  மூன்றாம் நிலையில் இரண்டு அரசர்களும் ,  ஒருவரின் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும்  காட்சி . கடைசி நிலையில் மூவரும் சிவலோகம் அடைந்த காட்சி காட்டப்பட்டுள்ளது .



படம் 3 :

அரசர் அல்லது தலைவருக்கானது கூடவே மனைவியும் சதியேறியுள்ளார்.

 இது மூன்று நிலை நடுகல் . முதல் நிலையில் அரசர் குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவருடன் மூன்று வீரர்கள் கேடயத்துடன்  காட்டப்பட்டுள்ளனர் .  இரண்டாம் நிலையில் அரசரும் அவர் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும் செல்லும் காட்சி . மூன்றாம் நிலையில் அரசரும் அவர் மனைவியும் சிவலோகப் பதவி அடைந்து  காட்சி .



படம் 4:

 தலைவர் அல்லது அரசர்களுக்கு இடையேயான சண்டை காட்சி .  இறந்த வீரன் மேல் நின்று இரு அரசர்களும் போர்புரியும் காட்சி . இம்மாதிரி போர் புரிவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.


தமிழ் முருகன் - அறிவுமதி

                                                                     தமிழ் முருகன்

                                                                                              அறிவுமதி 

சங்ககால பாடல்களில் முருகனுக்கு மத அடையாளம் ஏதும் காட்டாமல்  இன அடையாளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது . அதனாலேயே முருகன் "தமிழ் கடவுள்" எனப்படுகிறான் . அதேபோல் முருகன் சிறந்த போர் வீரர் என்றும் மலையும் கடலும் சார்ந்த நாட்டை ஆண்டுவந்ததாகவும் சங்ககால பாடல் வரிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் . தலைவனாக விளங்கிய முருகன் யானை மீது அமர்ந்து போரிட்டதை விளக்க சங்கப் பாடல் வரிகளை  மேற்கோள் காட்டியதுடன் பழமையான  கோயில்களில் உள்ள  முருகன் யானை மீது அமர்ந்து இருக்கும் படங்களைக் கொண்டும் விளக்கியிருக்கிறார் .


  நெய்தல் நிலமான திருச்செந்தூரிலும் குடி கொண்டு இருக்கிறார் . ஆழிப்பேரலையில் மூழ்கிய குமரிக் கண்டத்தை முருகனின் ஆட்சி செய்தான் என்றும் , கொற்றவையின் மகன் முருகன் என்றும் , முருகனுக்கு ஆடு பலி கொடுக்கப்பட்டதாகவும் சங்கப் பாடல் வரிகளைக்  கொண்டு விளக்குகிறார் . முருகனை  கந்தனாக மாற்றி இன்று பெருங்கடவுள்களில் ஒருவனாக ஆக்கப்பட்டதை விளக்குகிறார் ஆசிரியர் . தன் குழந்தைகளுக்கு முருகன் என்று பெயர் வைத்து மகிழ்ந்த சமூகம் இன்று மாறி விட்டதை  நமக்கு விளக்குகிறது இந்த புத்தகம் . நாட்டை ஆண்ட மன்னன் தமிழினம் காக்க போராடிய மன்னன் என்று இன்று எவ்வாறு ஆக்கப்பட்டு உள்ளார் என்பதை புரிந்து கொள்ள உதவும் நூல் இது .