Wednesday, February 16, 2022

மாபெரும் சபைதனில் : உதயச்சந்திரன்

மாபெரும் சபைதனில்
ஆசிரியர் : உதயச்சந்திரன்

ஈரோடு மாவட்டம் புத்தக திருவிழா நிகழ்வில் இவர் ஆற்றிய உரையை கேட்டு வியந்து இருக்கின்றேன் . தற்போது அவரின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பும் அமைந்தது இனிமை .
 நாற்பது தனித்தனி கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கடந்து சென்ற முக்கிய வரலாற்று , விளையாட்டு , இயற்க்கை பேரழிவு , அறிவியல் ,ஓவியம் என பல நிகழ்வுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் தரும் புத்தகம் . திரு . உதயச்சந்திரன் அவர்கள் தான்  இதுவரை அரசாங்க பணியாற்றிய இடங்களில் நடந்த சிறு சம்பவங்களையும் அதனுடன் தொடர்புடைய வரலாற்று செய்திகளையும்  இணைத்து தந்துள்ளார் .

சர் . தாமஸ் மன்றோ கலெக்டராக பணியாற்றியபோது  மக்களிடம் பெற்ற செல்வாக்கு எத்தகையது என்பதையும் ,இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த இரயில் பற்றியும் , சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்கள் அவற்றின் அழகியலையும் , ஜான் சல்லியனின் நீலகிரி பயணத்தையும் , பென்னி குயிக் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது . அசோகனின் கல்வெட்டு சொல்லும் செய்தி , கீழடி தமிழரின் பெருமை என்பதையும்  அகழ்வாய்வின் அவசியத்தையும் , மகாத்மா பேசிய தமிழ் பற்றியும் , மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் பயன்படுத்திய சொல் ஆயுதம் பற்றியும் , தமிழில் முதன் முதலில் வந்த அச்சு நூல் எது ? என பல வரலாற்று பொக்கிஷங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது . திரு உதயச்சந்திரன் அவர்களுடன்  புதிய பாட நூல் உருவாக்கத்தில் பணியாற்றியர்கள் பற்றியும் , தான் நடத்திய தேர்தல் , ஜல்லிக்கட்டு பற்றியும் , அமெரிக்காவில் தான் சந்தித்த நண்பர்களிடம் காணப்படும் நம் மண்ணின் நினைவுகளையும் , தான் உயரக் காரணமாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் தன் தாய் பற்றியும் சொல்லும் கட்டுரைகளில் மனம் நெகிழ்கிறது .  மண்டேலாவின் விளையாட்டு ஆர்வம் , ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் குழந்தைகளில் காணப்படும் கற்றல் குறைபாடு என உலக அறிவியல்  செய்திகளையும் விவரிக்கிறது இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் குறிப்பிடும் சபைக்குறிப்பு முக்கியமான ஒன்று . ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் கவனமாக செயல்பட வேண்டும், எங்கு இரக்கப்படவேண்டும் , எங்கு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக  காட்டுகிறார் . 

இப்புத்தகத்தில் அவரின் தமிழ் வார்த்தைகளின் கோர்வை மிக நேர்த்தியாக உள்ளது . ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார் . இவர் தொல்லியல் துறையில் பணியாற்றியபோது இவரின் முனைப்பால் தொல்லியல் ஆர்வலர்களுக்கு  நடத்திய ஐந்து நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது .  அப்போது இவரின் ஆளுமையை கண்டு வியந்துள்ளேன் .  புத்தகத்தின் தலைப்பு இவருக்கே பொருத்தமாக உள்ளது .