Tuesday, September 3, 2019

சமத்தூர் ஜமீன்

#கொங்குநாடு #பொள்ளாச்சி
#சமத்தூர் #ஜமீன்

விஜயநகர வீழ்ச்சிக்கிப் பின்னர் ஆங்காங்கே தன்னாட்சி அதிகாரம் செலுத்திய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களுக்கு கீழ் வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது சில பாளையக்காரர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஜமீன்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பாளையக்காரர்கள் சிலர் ஜமீன்களாக மாற்றப்பட்டன . அவ்வாறு மாற்றப்பட்ட ஜமீன்களில் ஒன்றுதான் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சமத்தூர் ஜமீன்.  இனி சமத்தூர் வாணவராயர் ஜமீன் பற்றி காண்போம் .

வேங்கட மலையை சார்ந்த பெரும்பாணப்பாடித் தலைவர்களான பாணர்கள் - "வாணர் " என்னும் மருவி வாணரையராக வாணவராயராக - வாணகோவரையராக - வாணாதிராயராக , மாவலிவாணராக தம் விவேகத்தாலும் வீரப் பண்பாலும் கங்கர் , பல்லவர் , பாண்டியர் , சோழர் , போசளர் , விசயநகர நாயக்கர் ஆட்சியில் தமிழகம் எங்கும் பரவிப் பேரரசர்கட்கு உற்றுழி உதவும் நண்பர்களாய் , சிற்றரசர் , சாமந்தராய் உயர் அலுவலராக விளங்கி இன்றும் வரலாற்று ஆவணங்களில் வாழ்கின்றனர் . சங்ககாலக் குடிகள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரைந்து போக வாணர் குடிமட்டும் இன்றும் வாணவராயராய் ஓங்கி உயர்ந்து நிற்கிறது என்பது கு . அருணாச்சலக் கவுண்டர் அவர்கள் கருத்து .

பொள்ளாச்சி நகருக்கு தெற்கே வால்பாறை செல்லும் சாலையில் உள்ளது ஜமீன்சமத்தூர் . தமிழகம் முழுவதும் பவனி வந்து மிகுபுகழ் கொண்ட வாணவராயர் மரபினர் சமத்தூரில் மதிப்பிற்குரிய உயர் குடியினராக வாழ்த்து வருகின்றனர் .

இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர்  பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும்  கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர் . சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர் . அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில் , அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும் . புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம்  அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் . புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும் . இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை .

விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம்.
 தமிழகத்திலேயே பெரிய சந்தையாக கருதப்படுவது பொள்ளாச்சி சந்தையாகும் . இச்சந்தையின் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பவர்களில் ஒருவர் சமத்தூர் வாணவராயர் ஆவார் . இச்சந்தை கூடும் இடத்தின் பாதி நிலப்பரப்பை சமத்தூர் ஜமீன் கொடையாக கொடுத்து உள்ளனர் .  பெரியவர்கள் , துறவிகளிடம் மிக மரியாதை காட்டும் இயல்பினர் .

 பழனி முருகன் கோயிலில் தினமும் நடைபெறும் " பாதபீட " வழிபாட்டிற்குரிய இறைவனின் பாதபீடம் இவர்கள் செய்து அளித்த திருகொடையே . மலை மீது செல்லும் படிக்கட்டுகளில் ஒரு பகுதியும் , பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும் , மூலவர் வழிபாட்டில் பயன்படும் சில பூஜை பாத்திரங்களும் இவர்கள் கொடையாகும் . திருப்பதி , திருச்செந்தூர் , திருமுருகன் பூண்டி , சிதம்பரம் , அவிநாசி கோயில்களில் எல்லாம் சமத்தூர் அரண்மனை பூசை தொடர்பு உண்டு . இவர்களின் முன்னோர்கள் சேலம் ஆத்தூரில் பௌத்த மதத்திற்கும் அரும்பணியாற்றியுள்ளனர் . இவ்வாறு இறைபணியிலும் இவர்களின் கொடையை கூறலாம்.

மழையின்மை , இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் மக்களால் வரி செலுத்த முடியாத போது தங்கள் கைப் பணத்தை போட்டு அரசுக்கு வரி செலுத்தும் அன்பு உள்ளம் கொண்டவர்கள் . அரண்மனை பத்தாயம் எனப்படும் தானியக் களஞ்சியத்தில் எப்போதும் தானியம் நிறைந்து இருக்கும் . ஊரில் பற்றாக்குறை ஏற்பட்டால் தேவையான அளவு தானியத்தை அளந்து வழங்குவர் "சமத்தூருக்கு அன்னதானம் அழகு" என்ற பழமொழியே உண்டு . இவ்வாறு மக்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல்களாகவே இன்றளவிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கார்த்திகை தீபம் அன்று அரண்மனையில் விளக்கு ஏற்றிய பின்னரே ஊர் முழுவதும் விளக்கு ஏற்றப்படும் . பொங்கல் அன்றும் அரண்மனைப் பானை பட்டி நோக்கி போன பின்னரே மக்கள் தங்கள் பொங்கல் பானையுடன் புறப்படுவர் . இவை மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுவதாகும்.

இன்றுவரை சமத்தூர் ஜமீன் பட்டம் பரம்பரையாக மரபுரிமைப்படி வருகிறது . இன்றும் அரண்மனை நன்கு பராமரிக்கக்கப்பட்டு வருகிறது . அரண்மனையில்
வானவராயர்களின் சின்னமான வரையாடு உருவச்சின்னம் , வாள்கள் , பல்லாக்கு ,  குருவாள் , கைகடகம் , ஜமீன்தாரின் அழகிய மாட்டு வாகனங்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் வழங்கிய ஜமீன் பட்டயம் முதலியன இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் . இன்றும் விருந்தோம்பல் இங்கு சிறப்புற்று இருக்கிறது .

அக்காலத்தில் இருந்து ஜமீன்களில் மக்கள் போற்றும் ஜமீனாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.

#konguhistory 46









2 comments:

  1. நான் பாணர் வாணர் சமுகத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை படுகிறோம்

    ReplyDelete
  2. நான் பவள குலம் என்பதில் பெருமை கொள்கிறேன்

    ReplyDelete