ராஜஸ்தான் உதய்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகடா (Nagda ) என்னும் ஊரில் மிக அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய சாஸ் பஹு (Sas - Bahu ) கோயில் அமைந்துள்ளது . நாகதரா (Nagahrada ) என்னும் பெயரே மறுவி நகடா ஆனதாக கருதப்படுகிறது . சிலத்தியவின் ( Siladitya ) தந்தையான நாகத்யாரால் ( Nagaditya ) நிறுவப்பட்டது இவ்வூர் . கிபி 646ம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வூர் சிறப்புற்று விளங்கியதோடு , மேவாரின் தலைநகராகவும் இருந்திருக்கிறது .
இவ்ஊரில் இக்கோயிலை சாஸ் பஹு என்றும் , மாமியார் - மருமகள் கோயில் என்றும் அழைக்கிறார்கள் கி.பி 11 நூற்றாண்டில் கச்ச்வாஹா வம்சத்து (Kachchhwaha ) மகிபாலன் என்னும் மன்னனின் மனைவி விஷ்ணு பக்தை அவளின் வழிபாட்டிற்காக மன்னர் விஷ்ணு கோயிலை கட்டியதாகவும் , மன்னனின் மருமகள் அதாவது இளவரசனின் மனைவி சிவபக்தை அவரின் வழிபாட்டிற்காக சிவாலயத்தை கட்டியதாகவும் அதனால் இக்கோயிலை மாமியார் - மருமகள் கோயில் என பெயர் பெற்றதாகவும் கருதப்படுகிறது . முதலில் விஷ்ணு கோயிலை கட்டியதால் சாஸ் என்பது கோயிலின் பெயரில் முதலில் வருகிறது . சாஸ்பாகு என்ற பெயரே சகஸ்ரபாகு என்னும் பெயரில் இருந்து மறுவியதாகவும் ஆயிரம் கைகள் உடைய இறைவன் என்ற பொருளில் அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது . பத்தடி உயரம் உள்ள மேடையில் முழு கோயிலும் அமைந்துள்ளது . பெரிய கோயிலுக்கு அருகே மற்றொரு சிறிய கோயிலும் அதைச் சுற்றி சிறுசிறு கோயில்களும் காணப்படுகின்றன . அவற்றில் சில கோயில்களுக்கு மேடை மட்டுமே உள்ளன இருப்பினும் பெரிய கோயிலின் சுற்றுச்சுவர் முழுவதும் ஆடல் மகளிரும் , பல கதைகளை விளக்கும் சிற்பங்களும் , யானையின் உருவங்கள் என பலதும் பொறிக்கப்பட்டுள்ளது . முகமதியர் படையெடுப்பின் போது கோயில் முழுதும் சிதைக்கப்பட்டு மூலவர் சிலை காணாமல் போனதாக கருதப்படுகிறது . கோயில் முழுவதும் நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அலங்காரத்துடன் அமைந்துள்ளது . இக்கோயிலில் தற்போது வழிபாடு ஏதும் நடப்பதில்லை , இக்கோயில் மத்திய அரசு தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது .