Thursday, September 14, 2023

Tomb of Safdurjung , delhi

 டில்லி நகரின் வரலாற்று பெருமைக்கு மிகப்பெரிய பங்களிப்பாற்றியவர்கள் முகலாயர்கள் . அவர்களின் ஆட்சியின்போது அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் பெருமையுடன் வீற்றிருக்கின்றன .

அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசு முடிவை நோக்கி சென்றது . முகலாயர்களின் (முகலாயர்களின் ஆட்சி காலம் சுமார் 167 வருடங்கள் ) வீழ்ச்சியின் போது அவர்கள் கட்டிய கடைசி கல்லறை தோட்டம் தான் சஃப்தர்ஜங் கல்லறை (Tomb of safdarjung ) . இந்த முகலாய நினைவுச்சின்னம் 1754 இல் முகலாய அரசவையில் புகழ்பெற்ற நபராக இருந்த நவாப் சஃப்தர்ஜங்கிற்காக (சஃப்தார் ஜங்) கட்டப்பட்டது.
அவுரங்கசீன் மரணத்திற்கு பிறகு ஒரு வலுவான சர்வாதிகாரத்துடன் கூடிய ஒருவரால் தான் பேரரசை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது .அவுரங்கசீப்ற்கு பல வாரிசுகள் இருந்த போதிலும் முகமது ஷா அரியணை ஏறியது பேரரசின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளித்தது . முகமது ஷாவின் பிரதம அமைச்சராக விளங்கியவர் தான் சஃப்தார் ஜங் .

சஃப்தர் ஜங் , பாரசீகத்தை பூர்விகமாக கொண்டவர் .அவரது முழுப் பெயர் அபுல் மன்சூர் மிர்சா முகமது கான் (1708- 1754). அவர் அவத்தின் (Awadh ) இரண்டாவது வைஸ்ராயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதும் புத்திசாலித்தனதுடனும் , சமயோசிதமாக செயல்படும் அரசியல்வாதியான சஃப்தர்ஜங், ஒரு திறமையான நிர்வாகியாக தனது திறமையை நிரூபித்தார் . அதனால் முகமது ஷா அவரை பிரதம அமைச்சராக தில்லிக்கு மாற்றியதுடன் , " சஃப்தார் ஜங் " என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார் . சஃப்தர் ஜங் , பேரரசின் வீழ்ச்சியடைத்த சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முகமது ஷா விற்கு மிகவும் உதவினார் . அந்த காலகட்டத்தில் முகலாய அவையில் இருந்த துருக்கி இஸ்லாமியருக்கும் பெர்சிய இஸ்லாமியர்களுக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்தது . இதை சன்னி - ஷியா மோதல் என்பர் . இந்த அரசியல் சூழ்ச்சியில் சஃப்தார் ஜங்கின் அதிகாரங்கள் பறிபோயின . அவர் 1753 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 1753 இல் அவர் ஊருக்குத் திரும்பினார். அதன் பின் சஃப்தார் ஜங் அதிக காலம் வாழவில்லை
அக்டோபர் 5, 1754 ஆண்டு மறைந்தார் . அவரின் மறைவுக்கு பின் அவரது மகன் ( Nawab Shujaud Daula ) தௌலா தன் தந்தைக்கு கல்லறை அமைக்க முகலாய அரசிடம் அனுமதி பெற்று கட்டப்பட்ட இந்த கல்லறை , முகலாய கட்டிடக்கலை பாணியை சித்தரிக்கும் கடைசி நினைவுச்சின்னம் .

சஃப்தர்ஜங்கின் கல்லறை, முகலாய வம்சத்தின் வீழ்ச்சி நிலையில் கட்டப்பட்டாலும் அதன் கட்டிடக்கலையில் முகலாயர்களின் கலாச்சார அம்சங்களையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. மற்ற அனைத்து முகலாய நினைவுச்சின்னங்களும் அவர்கள் காலத்தில் இருந்த செழிப்பை பிரதிபலிக்கின்றன . இந்த நினைவுச்சின்னம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட கட்டிடக்கலையின் அதிசயங்களாக கருதப்படுகின்றன.
இக்கல்லறை அழகான இரண்டு அடுக்கு நுழைவாயிலுடன் காணப்படுகிறது . பிரதான நுழைவாயிலின் வலது புறத்தில் மூன்று குவிமாடம் கொண்ட மசூதி காணப்படுகிறது . இக்கல்லறை தாஜ்மஹாலின் சமாதியை ஓரளவு ஒத்திருக்கிறது . நுழைவாயிலுக்கு அடுத்து தாஜ்மஹல் போன்று பூங்கா அமைப்புடன் கொண்ட ஒரு நீளமான குளம் காணப்படுகிறது . நுழைவாயிலுக்கும் கல்லறைக்கும் இடையே காணப்படும் குளம் , கல்லறையை சுற்றியுள்ள நான்கு புறமும் உள்ளது . அடுத்து கல்லறையின் கட்டிட அமைப்பு ஒரு சிறிய மேடை மீது கட்டப்பட்டுள்ளது .
கல்லறைக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன . அதன் நான்கு மூலைகளிலும் உள்ள எண்கோன கோபுரங்கள் அழகாக கட்டப்பட்டுள்ளன . இக்கட்டிடம் அனைத்தும் சிவப்பு மணற் கற்கள் மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளன . முகலாயர்களின் கட்டிடகலைக்கு மற்றுமொரு சான்றாக இது விளங்குகிறது .