Tuesday, September 3, 2019

ஈரோடு பவானி

 ஈரோடு பவானி அம்மனுக்கு ஆங்கிலேய கலெக்டர் வில்லியம் கேரோ கொடையளித்த தந்தத்திலான கட்டில் :

கி . பி.1799 , மைசூர் போரில் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பிறகு ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகள் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி வசம் வந்தது . அவர்கள் நிர்வாக வசதிக்காக ஈரோடு கோவை பகுதிகளை நொய்யல் கிழக்கு மாவட்டம் , நொய்யல் வடக்கு மாவட்டம் என்று பிரித்தனர் . நொய்யல் வடக்கு மாவட்டத்திற்கு பவானி தலைநகர் ஆனது .
காவேரி ஆறு , பவானி ஆறு மற்றும் அமிர்த நதி மூன்றும் கூடும் இடத்தில் உள்ளது பவானி நகரம் . இங்குள்ள சங்கமேஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது .
இம்மாவட்டத்திற்க்கு வில்லியம் கேரோ என்பவர் ஆட்சித் தலைவராக இருந்தார் . அப்போது அவர் பவானியில் முகாம் செய்து பயணியர் மாளிகையில் படுத்து உறங்கிய போது ஒரு நாள் மழைக்கால இரவில் ஒரு சிறுமி சென்று அவரை மாளிகையில் இருந்து வெளியே அழைத்து வந்தார் . அவர் வெளியே வந்தவுடன் அவர் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது . தன்னை பேராபத்தில் இருந்து காத்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடிய போது அச்சிறுமி மறைந்து விடுகிறாள் . அம்மன் கோயில் குருக்கள் கேரோ உயிர் காத்தது பவானி அம்மன் வேதநாயகி என்று கூற , கேரோ அம்மனை தரிசிக்க எண்ணினார் . அந்நாட்களில் இந்துக்கள் அல்லாதவரை கோயிலுக்குள் அனுமதிக்காத காரணத்தால் கேரோ அவர்கள் கோயில் சுவற்றில் மூன்று துவாரம் அமைத்து அம்மனை வழிபட்டார் . இந்த துவாரம் இன்னமும் மதில் சுவற்றில் உள்ளது . அது மட்டும் இன்றி அவர் கையெழுத்து இட்ட " தந்தக் கட்டில் " ஒன்றை அம்மனுக்கு காணிக்கை வழங்கினார் . அக்கட்டில் அம்மன் பள்ளியறையில் உள்ளது என்று அறிவிப்பு பலகையில் இருந்தாலும் , நம் கண்ணுக்கு புலப்படவில்லை .
(தற்போது அது கோவிலில் இருக்கிறதா? அல்லது களவாடப்பட்டுவிட்டதா? என்பது அறநிலையத்துறைக்கே வெளிச்சம்)

No comments:

Post a Comment