Friday, February 12, 2021

கர்நாடக நடுகற்கள்

பழங்காலத்தில் வீரச்செயல்கள் செய்தவர்களின் நினைவாக நடுகல்  வைத்து வணங்குவது வழக்கம் . இவ்வழக்கம் கர்நாடகா மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே இருந்துள்ளது .  அங்கும் எண்ணற்ற நடுகற்கள் காணப்படுகின்றன . அவை தமிழக நடுகற்களை ஒத்தே காணப்படுகின்றன . 


படம்-1 

ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல் போரில் இறந்த வீரனுக்காக சதியேறிய மனைவிக்கான சதிக்கல் . இது மூன்று நிலை நடுகல் .  முதல் நிலையில் ஒரு வீரன் கையில் அம்பும் அவனை எதிர்க்கும் மற்றொரு வீரன் கையில் வில்லும் காட்டப்பட்டுள்ளது .  அவர்களுக்குக் கீழே  ஆநிரைகள் காட்டப்பட்டுள்ளது . கூடவே பெண் உருவமும் உள்ளது .  இரண்டாம் நிலையில் சதி ஏறிய பெண்ணை தேவலோக அழைத்துச் செல்லும் காட்சி . இறுதி நிலையில் அப்பெண் இறைவனடி சேர்ந்த காட்சி காட்டப்பட்டுள்ளது . 



படம் 2 :

  அரசர் அல்லது தலைவருக்கான நடுகல். இருவரும் ஒரே போரில் இறந்துள்ளனர். ஒருவரின் மனைவியும் உடன் சதியேறியுள்ளார்.   இது நான்கு நிலை நடுகல் . முதல் நிலையில் இரு அரசர்கள் அல்லது தலைவர்களை பல்லக்கில் அழைத்து செல்வது போல கட்டப்பட்டுள்ளன .  இரண்டாம் நிலையில் இரு அரசர்களும் குதிரையில் அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவர்களுடன்  யானைப் படையும் மற்றும் வீரர்களும் காட்டப்பட்டுள்ளது .  மூன்றாம் நிலையில் இரண்டு அரசர்களும் ,  ஒருவரின் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும்  காட்சி . கடைசி நிலையில் மூவரும் சிவலோகம் அடைந்த காட்சி காட்டப்பட்டுள்ளது .



படம் 3 :

அரசர் அல்லது தலைவருக்கானது கூடவே மனைவியும் சதியேறியுள்ளார்.

 இது மூன்று நிலை நடுகல் . முதல் நிலையில் அரசர் குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவருடன் மூன்று வீரர்கள் கேடயத்துடன்  காட்டப்பட்டுள்ளனர் .  இரண்டாம் நிலையில் அரசரும் அவர் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும் செல்லும் காட்சி . மூன்றாம் நிலையில் அரசரும் அவர் மனைவியும் சிவலோகப் பதவி அடைந்து  காட்சி .



படம் 4:

 தலைவர் அல்லது அரசர்களுக்கு இடையேயான சண்டை காட்சி .  இறந்த வீரன் மேல் நின்று இரு அரசர்களும் போர்புரியும் காட்சி . இம்மாதிரி போர் புரிவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.


தமிழ் முருகன் - அறிவுமதி

                                                                     தமிழ் முருகன்

                                                                                              அறிவுமதி 

சங்ககால பாடல்களில் முருகனுக்கு மத அடையாளம் ஏதும் காட்டாமல்  இன அடையாளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது . அதனாலேயே முருகன் "தமிழ் கடவுள்" எனப்படுகிறான் . அதேபோல் முருகன் சிறந்த போர் வீரர் என்றும் மலையும் கடலும் சார்ந்த நாட்டை ஆண்டுவந்ததாகவும் சங்ககால பாடல் வரிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் . தலைவனாக விளங்கிய முருகன் யானை மீது அமர்ந்து போரிட்டதை விளக்க சங்கப் பாடல் வரிகளை  மேற்கோள் காட்டியதுடன் பழமையான  கோயில்களில் உள்ள  முருகன் யானை மீது அமர்ந்து இருக்கும் படங்களைக் கொண்டும் விளக்கியிருக்கிறார் .


  நெய்தல் நிலமான திருச்செந்தூரிலும் குடி கொண்டு இருக்கிறார் . ஆழிப்பேரலையில் மூழ்கிய குமரிக் கண்டத்தை முருகனின் ஆட்சி செய்தான் என்றும் , கொற்றவையின் மகன் முருகன் என்றும் , முருகனுக்கு ஆடு பலி கொடுக்கப்பட்டதாகவும் சங்கப் பாடல் வரிகளைக்  கொண்டு விளக்குகிறார் . முருகனை  கந்தனாக மாற்றி இன்று பெருங்கடவுள்களில் ஒருவனாக ஆக்கப்பட்டதை விளக்குகிறார் ஆசிரியர் . தன் குழந்தைகளுக்கு முருகன் என்று பெயர் வைத்து மகிழ்ந்த சமூகம் இன்று மாறி விட்டதை  நமக்கு விளக்குகிறது இந்த புத்தகம் . நாட்டை ஆண்ட மன்னன் தமிழினம் காக்க போராடிய மன்னன் என்று இன்று எவ்வாறு ஆக்கப்பட்டு உள்ளார் என்பதை புரிந்து கொள்ள உதவும் நூல் இது .


Thursday, February 11, 2021

படை வீடு - தமிழ் மகன்

                                                  படை வீடு - தமிழ் மகன்

இது ஒரு வரலாறும் புனைவும் கலந்த வரலாற்று நாவல் . பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான சம்புவராயர்கள் பற்றிய கதை . சோழர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசாக இருந்த சம்புவராயர்கள் , சோழப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பின்  தனி ராஜ்ஜியமாக உருவாகிறார்கள் .  சுமார் 100 ஆண்டுகள் இவர்களின் ஆட்சி இருந்து இருக்கிறது . 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசுவின் உருவாக்கத்தில் இவர்கள் வீழ்ச்சி அடைகிறார்கள்.  இவர்கள் தனி அரசாக இருந்த காலகட்டத்தில் நடந்தவை பற்றிய கற்பனை நாவல் இது .

இந்நூலில்  சுல்தானியர்கள் மதுரை படையெடுப்பின் போது சம்புவராயர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பற்றிய கதை .

மதுரையில் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த வாரிசு போரால் சுல்தானியர்களின் (மாலிக் கபூர்) கவனம் தென்தமிழகத்தின் மீது திருப்பியது .  சுல்தானியர்கள் இங்குள்ள கோயிலின் விலைமதிப்பில்லா நகைகளை கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர் . சுல்தானியரின் நெறிமுறை இல்லாத போர் முறையால் நம் மன்னர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை . சுல்தானியர்கள் பாண்டிய நாட்டுக்கு கொங்குநாட்டுக்கு சத்தியமங்கலம் வழியாக வந்ததாக கூறி இருக்கிறார் ஆசிரியர்  . ஆனால் அதற்கு தக்க சான்றுகள் தரவில்லை .

சம்புவராயர்கள்  சுல்தானியர் மீது போர்  தொடுக்காமல் , அவர்களாக போருக்கு வந்தால் போர் புரியலாம் என்று இருந்ததாக ஆசிரியர் கூறியுள்ளார் . சுல்தானியரின் படையெடுப்பு பகுதியில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டு , தஞ்சம் அடைந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க "அஞ்சினான் புகலிடம்" அமைத்து  இருந்ததாக கல்வெட்டு சான்று கொண்டு விளக்கியுள்ளார் . இந்த நூலில் சம்புவராயர்கள் பல கல்வெட்டுச் செய்திகளை கொண்டு கதையை நகர்த்தி உள்ள ஆசிரியர் படை வீடு , ஆறகளூர் விருஞ்சிபுரம் சிதம்பரம் என பல பகுதிகள் அப்போது எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் .  

அக்காலத்தில் இருந்த வலங்கை இடங்கை சாதி பிரிவுகளை பற்றி நிறைய தகவல்கள் தருகிறார் ..

இது வரலாற்று நாவல் என்றாலும் கதையின்  வேகமும்  சுவாரஸ்யமும் குறைவாகவே உள்ளது . வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட  சம்புவராயர்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது .


கர்நாடகா மாண்டியமாவட்டம் பன்னூர்

ராஜராஜசோழன்கல்வெட்டுகள்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள தொடர்பு  தொன்மையானது. தஞ்சையை ஆண்ட சோழர்கள்  கர்நாடக பகுதியின் மீது படையெடுத்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர் . சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் அங்கு ஆட்சி செய்துள்ளனர் .  அங்கு சோழர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் , கன்னடம் என இரு மொழிகளிலும் காணப்படுகின்றது . 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள பன்னூர் என்னும் ஊர் முதலில் வன்னியூரான  ஜானார்த்தன சதுர்வேதி மங்கலம்  என்றும்  , பின்பு  விஜயநகர பேரரசு காலத்தில்  வாகினிபுரம்  என்றும் அழைக்கப்பட்டுள்ளது . 

   மைசூரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் ஹனுமந்தீஸ்வரா  என்னும் கோயில் உள்ளது . இக்கோயில்  இப்பகுதியின் மிகப்பழமையான கோயில் ஆகும் . இப்பகுதி முதலில் கங்கர் வசம் இருந்தது போது   ஸ்ரீ புருசா என்னும் கங்கமன்னரால்  இங்கு ஒரு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது . மூலவர் பகுதி மட்டும் கட்டப்பட்டு இருந்த இக்கோயில் , ராஜராஜ சோழரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள கன்னட கல்வெட்டில் ராஜராஜ சோழரது மெய்க்கீரத்தி ஆன "திருமகள் போல்" என்று ஆரம்பிக்கும் மெய்கீர்த்தி ஏழு வரிவரை உள்ளது . இவற்றுடன் ராஜராஜசோழன் இக்கோயிலின் திருமுற்றம் கட்டுவதற்காக நிலம் கொடையாக கொடுத்த செய்தியும் உள்ளது .   மகாஜன சபையோருக்கும் தத்தனூர் வணிகர்களுக்கும் கோயில் கட்ட நிலம் கொடையாக கொடுத்த செய்தி  தமிழில் உள்ளது .  விஷ்ணுவர்தன் கொடை  கொடுத்த செய்தி கன்னட மொழியில் உள்ளது . அக்கல்வெட்டில் "வடகரை நாட்டு வன்னியூரான ஜனார்த்தன சதுர்வேதிமங்கலம்" என்று இவ்வூர் குறிப்பிடுகிறது . இங்கு கங்கர்கள் , சோழர்கள் , ஹொய்சளர்கள் , விஜயநகர பேரரசு , மைசூர் உடையார்கள் ஆகியோரின் கல்வெட்டுக்கள் உள்ளன . தற்போது இக்கோயில் மிகவும் பராமரிப்பு இல்லாமலும் கல்வெட்டுகள் அனைத்தும் புதைந்த நிலையில் சிதைக்கப்பட்ட நிலையிலும்  உள்ளன . இக்கோயிலின் கல்வெட்டு செய்திகளை  மைசூர் ஆவணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் .













கொடுமணல் கோவில்கள்

 வரலாற்று சிறப்புமிக்க கொடுமண லின் தொன்மை மற்றும் வணிக சிறப்புகளை காண்பதற்கு முன் கொடுமணலில் உள்ள கோயில்கள் மற்றும் அதன் சிறப்புகளைக் காண்போம் . 

        ஒரு பழைய பாடல் ஒன்று கொடுமணலை " ஆலயஞ்செறி கொடுமணல்" என்று கூறுகிறது . நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் கொடுமணலுக்கு உரிய கோயில்கள் மிகுதியாக உள்ளன . 

சிவன் கோயில் :

      நொய்யல் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உள்ள சிவன் கோயில் பற்றி காண்போம். 

வீரசோழபுர நாடு என்ற பெயருக்கு ஏற்ப இங்கு உள்ள சிவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர் . மக்கள் அக்னீஸ்வரர் என்று அழைக்கின்றனர் . இக்கோயிலுக்கு கொங்கு சோழர்கள் திருப்பணி செய்துள்ளனர் . இக்கோயிலில் கல்வெட்டுகள் சிதைந்து விட்டன . இந்த அக்னீஸ்வரர் தற்போது தங்கம்மான் கோயில் அருகே புதிய திருக்கோயிலில் வீற்றிருக்கிறார் . 


பெருமாள் கோயில்:

      பொதுவாக கொங்கு நாட்டில் பெருமாள் கோயில்களை " மேலைத் திருப்பதி"  என அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . இங்குள்ள பெருமாளுக்கு வீர நாராயண பெருமாள் மற்றும் அல்லாளப் பெருமாள் என்றும் பெயர்கள் உள்ளன . இக்கோயிலும் நொய்யல் அணையில் மூழ்கி உள்ள காரணத்தால் இங்கிருந்த பெருமாள் உள்ளிட்ட சிலைகளை தற்போது ஊருக்குள் வைத்து வழிபடுகிறார்கள் . 


மதுரகாளியம்மன் :

                   நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்து உள்ள இக்கோயிலும் அணையில் மூழ்கி உள்ளது . இங்கிருந்த மதுரகாளியம்மன் சிலை தற்போது கொடுமணலில் அத்தனூரம்மன் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது . இந்த அம்மன் சிலை மிக அழகாக அமைந்துள்ளது . 


அத்தனூரம்மன் :

            இக்கோயில் நொய்யல் அருகில் கொடுமணலில் கிழக்கே அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும் . 


தங்கம்மன் கோயில்:

        நொய்யல் ஆற்றின் தென்கரையில் ஆற்றின் அருகே அமைந்து உள்ளது இக்கோயில் . கொடுமணலின் பெருமைக்கும் வரலாற்று சிறப்புக்கும் தங்கம்மன் தான் மூலகாரணமாக விளங்குவதாக நம்பப்படுகிறது.













மலையப்பாளையம் கவுந்தபாடி ஈரோடு

 தொறுபூசல்/ ஊர்பூசல் நடுகல்..

அரசு மேல்நிலைப் பள்ளி ,





கல்குதிரை பாச்சல் ராசிபுரம்

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பாச்சல் என்னும் ஊரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் முன் உள்ள கல்குதிரை .

அழகிய வெளிப்பாடுடன் கூடிய ஒரே கல்லால் ஆன கல்குதிரை .