Thursday, September 14, 2023

Tomb of Safdurjung , delhi

 டில்லி நகரின் வரலாற்று பெருமைக்கு மிகப்பெரிய பங்களிப்பாற்றியவர்கள் முகலாயர்கள் . அவர்களின் ஆட்சியின்போது அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் பெருமையுடன் வீற்றிருக்கின்றன .

அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசு முடிவை நோக்கி சென்றது . முகலாயர்களின் (முகலாயர்களின் ஆட்சி காலம் சுமார் 167 வருடங்கள் ) வீழ்ச்சியின் போது அவர்கள் கட்டிய கடைசி கல்லறை தோட்டம் தான் சஃப்தர்ஜங் கல்லறை (Tomb of safdarjung ) . இந்த முகலாய நினைவுச்சின்னம் 1754 இல் முகலாய அரசவையில் புகழ்பெற்ற நபராக இருந்த நவாப் சஃப்தர்ஜங்கிற்காக (சஃப்தார் ஜங்) கட்டப்பட்டது.
அவுரங்கசீன் மரணத்திற்கு பிறகு ஒரு வலுவான சர்வாதிகாரத்துடன் கூடிய ஒருவரால் தான் பேரரசை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது .அவுரங்கசீப்ற்கு பல வாரிசுகள் இருந்த போதிலும் முகமது ஷா அரியணை ஏறியது பேரரசின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளித்தது . முகமது ஷாவின் பிரதம அமைச்சராக விளங்கியவர் தான் சஃப்தார் ஜங் .

சஃப்தர் ஜங் , பாரசீகத்தை பூர்விகமாக கொண்டவர் .அவரது முழுப் பெயர் அபுல் மன்சூர் மிர்சா முகமது கான் (1708- 1754). அவர் அவத்தின் (Awadh ) இரண்டாவது வைஸ்ராயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதும் புத்திசாலித்தனதுடனும் , சமயோசிதமாக செயல்படும் அரசியல்வாதியான சஃப்தர்ஜங், ஒரு திறமையான நிர்வாகியாக தனது திறமையை நிரூபித்தார் . அதனால் முகமது ஷா அவரை பிரதம அமைச்சராக தில்லிக்கு மாற்றியதுடன் , " சஃப்தார் ஜங் " என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார் . சஃப்தர் ஜங் , பேரரசின் வீழ்ச்சியடைத்த சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முகமது ஷா விற்கு மிகவும் உதவினார் . அந்த காலகட்டத்தில் முகலாய அவையில் இருந்த துருக்கி இஸ்லாமியருக்கும் பெர்சிய இஸ்லாமியர்களுக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்தது . இதை சன்னி - ஷியா மோதல் என்பர் . இந்த அரசியல் சூழ்ச்சியில் சஃப்தார் ஜங்கின் அதிகாரங்கள் பறிபோயின . அவர் 1753 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 1753 இல் அவர் ஊருக்குத் திரும்பினார். அதன் பின் சஃப்தார் ஜங் அதிக காலம் வாழவில்லை
அக்டோபர் 5, 1754 ஆண்டு மறைந்தார் . அவரின் மறைவுக்கு பின் அவரது மகன் ( Nawab Shujaud Daula ) தௌலா தன் தந்தைக்கு கல்லறை அமைக்க முகலாய அரசிடம் அனுமதி பெற்று கட்டப்பட்ட இந்த கல்லறை , முகலாய கட்டிடக்கலை பாணியை சித்தரிக்கும் கடைசி நினைவுச்சின்னம் .

சஃப்தர்ஜங்கின் கல்லறை, முகலாய வம்சத்தின் வீழ்ச்சி நிலையில் கட்டப்பட்டாலும் அதன் கட்டிடக்கலையில் முகலாயர்களின் கலாச்சார அம்சங்களையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. மற்ற அனைத்து முகலாய நினைவுச்சின்னங்களும் அவர்கள் காலத்தில் இருந்த செழிப்பை பிரதிபலிக்கின்றன . இந்த நினைவுச்சின்னம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட கட்டிடக்கலையின் அதிசயங்களாக கருதப்படுகின்றன.
இக்கல்லறை அழகான இரண்டு அடுக்கு நுழைவாயிலுடன் காணப்படுகிறது . பிரதான நுழைவாயிலின் வலது புறத்தில் மூன்று குவிமாடம் கொண்ட மசூதி காணப்படுகிறது . இக்கல்லறை தாஜ்மஹாலின் சமாதியை ஓரளவு ஒத்திருக்கிறது . நுழைவாயிலுக்கு அடுத்து தாஜ்மஹல் போன்று பூங்கா அமைப்புடன் கொண்ட ஒரு நீளமான குளம் காணப்படுகிறது . நுழைவாயிலுக்கும் கல்லறைக்கும் இடையே காணப்படும் குளம் , கல்லறையை சுற்றியுள்ள நான்கு புறமும் உள்ளது . அடுத்து கல்லறையின் கட்டிட அமைப்பு ஒரு சிறிய மேடை மீது கட்டப்பட்டுள்ளது .
கல்லறைக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன . அதன் நான்கு மூலைகளிலும் உள்ள எண்கோன கோபுரங்கள் அழகாக கட்டப்பட்டுள்ளன . இக்கட்டிடம் அனைத்தும் சிவப்பு மணற் கற்கள் மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளன . முகலாயர்களின் கட்டிடகலைக்கு மற்றுமொரு சான்றாக இது விளங்குகிறது .

                                                                














Friday, April 21, 2023

JANTAR MANDIR , DELHI

 Jantarmandir

இந்தியாவில் உள்ள பல வரலாற்று சின்னங்களில் இது ஒரு விந்தையான அதிசய கட்டிடம் . நமது தலைநகரான புது டெல்லியில் அமைந்திருக்கும் ஜன்தர்மந்தர் எனப்படும் இக்கட்டிடம் நம் முன்னோர்களின் வானிலை அறிவை நாம் அறிந்து கொள்ள சான்றாக விளங்குகிறது. கருவிகள் இல்லாமல் கட்டிடத்தையே கருவியாய் அமைத்து வானிலை ஆராய்ச்சிக்காக நமது அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் நாம் காணும் ஜன்தர்ந்தர் .

முகலாயப் பேரரசின் வழிவந்த முகமது ஷா மற்ற இஸ்லாமிய மன்னர்கள் போலவே ஜட்ஜ் ZIJ என்னும் இஸ்லாமிய வானிலை நாட்காட்டியை பின்பற்றினார் . Zij என்பது இஸ்லாமிய வானியல் புத்தகமாகும், இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகளின் வானியல் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வானிலை புத்தகம் ஆகும் . ஜெய்பூரைச் சேர்ந்த மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் 1699-1743 ( ஜெய்ப்பூர் நகரை உருவாக்கியவர் ) என்பவர் போர்த்திறமையில் மட்டும் அல்லாமல் வானிலையிலும் மற்றும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார் . அவர் இந்த ஜிஜ் நாட்காட்டி வானிலையோடு பொருந்தவில்லை என்பதை கணக்கீடு செய்து அதனை மன்னருக்கு தெரியப்படுத்தினார் . வானிலை கணக்கீட்டை மறு ஆய்வு செய்ய ஆர்வம் காட்டினார் . முகமது ஷாவின் அனுமதியோடு ராஜா ஜெய்சிங் , ஜன்தா மந்தர் என்னும் கட்டிடத்தை வானிலை முறைப்படி முதலில் டெல்லியில் அமைய செய்தார் .
 
இந்தியாவின் முதல் ஜன்தர் மந்தர் டெல்லியில் கட்டப்பட்டது . ஜெய்ப்பூர் , உஜ்ஜைன் , வாரணாசி , மற்றும் மதுராவிலும் அமைக்கப்பட்டன . 1724 - 1734 ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் உள்ளன . அவை
1) Samrat yantra
2) Mishra yantra
3) Jaiprakash yantra
4 )Ram yantra

1 ) Samrat yantra
இது ஒரு முக்கியமான கருவி சூரியனின் நிழல் விழுவதைக் கொண்டு நேரத்தை கண்டறிய முடியும் கருவி . இதன் உயரம் சுமார் 20.43m .பூமியின் பாதைக்கு இணையாக சுவரை சாய்த்து இரண்டு அரை வட்டமாக கட்டப்பட்டுள்ளது .

2) Mishra yantra
இது மட்டும் ஜெய்சிங் ராஜாவின் மகன் மாதோ சிங் கட்டியதாக சொல்லப்படுகிறது . வருடத்தின் நீண்ட நாள் மற்றும் குறுகிய நாட்களை கணக்கிடவும் உலகின் பல்வேறு நகரங்களின் நேரத்தையும் அறிய முடியும் .


3) Jaiprakash yantra
ராஜா ஜெய் சிங் (light of jai ) பெயரையே இதற்கு சூட்டப்பட்டுள்ளது . இந்த யந்திராவைக் கொண்டு கிரகணம் வருவதை அறிந்து கொள்ளலாம் . இரவு பகல் இரு வேளைகளிலும் இதை பயன்படுத்தலாம் . இதன் வடிவம் அரைக்கோன வடிவமாகும் . குழியான மேற்பரப்புகள் அவற்றின்மீது சில அடையாளங்களுடன் காணப்படுகிறது . இதன் வடிவம் நட்சத்திரம் மற்றும் கோள்களையும் குறிக்கிறது .

4 )Ram yantra
மஹாராஜா ஜெய் சிங்கின் தாத்தா ராம் சிங்கின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது . உருளை வடிவமாக காணப்படும் இதை கொண்டு சூரிய நிழலை வைத்துக் கோள்கள் மற்றும நட்சத்திரங்களின் இருப்பிடத்தை அறிய முடிகிறது .


வானிலை ரீதியாக சரியான நாட்காட்டியை உருவாக்க முயன்ற மன்னரால் உருவாக்க பட்ட இக்கட்டிடம் போன்று உலகில் வேறு நாடுகளில் எங்கும் இல்லை . இவை ராஜா ஜெய் சிங் காலத்தில் அதாவது 18ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பயன்பாட்டை இழந்தது . தற்போது இவற்றை சுற்றி பல உயரமான கட்டிடங்கள் உருவாக்கியதால் இவை சரியான கணக்கீடுகளை காட்டுமா என்பது ஐயமே . இது அறிவியல் சார்ந்த அறிவு பெற்றவர்கள் மிகவும் விரும்பும் இடமாகும் .












Tuesday, March 21, 2023

Agrasen ki Baoli, Delhi

 Agrasen ki Baoli

நமது தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிக அழகான பண்டைய கால படிகிணறு தான் அக்ரசென் கி பவுளி (Agrasen ki Baoli ) . வறட்சி காலத்தில் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அன்றைய மன்னரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த படிக்கிணறு .

            மன்னர்கள் காலத்தில் கோயில்களிலும் மசூதிகளிலும் நீர் மேலாண்மை ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தது . கிணறுகளும் குளங்களும் குடிநீர், குளியல் ஆகியவற்றைத் தவிர்த்து, வெறுமனே நீரைச் சேமித்து வைப்பதற்காகவும் இத்தகைய கிணறுகள் மற்றும் குளங்கள் கட்டப்பட்டிருந்தன. சில கிணறுகளின் மேலே யாத்ரீகர்கள், வழிப்போக்கர்கள், தேசாந்திரிகள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.

              வரலாற்று சிறப்பு மிக்க இக்கிணறு மகாபாரத காலத்தில் தோன்றியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது . இக்கிணறு Agrasen / Ugrasen என்னும் மன்னரால் கட்டப்பட்டதென்றும் அவருக்கு பின் வந்த அவரின் வழி தோன்றாளாக நம்பப்படும் அகர்வால் (Agarwal ) என்னும் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் புணரமைத்து இந்த அழகிய கிணற்றை உருவாக்கியதாக கூறப்படுகிறது .

                கி.பி 14ஆம் நூற்றாண்டில் டில்லியை ஆட்சி செய்த துக்ளக் மன்னர்கள் யமுனை ஆற்றின் நீரை டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இணைக்க ஏராளமான கால்வாய் கட்டினர். அந்த கால கட்டத்தில் கிணற்றை சுற்றி படிகளுடன் கட்டப்பட்ட கட்டிடம் தான் நாம் இப்போது காண்பது என்ற கருத்தும் நிலவுகிறது . இப்படிகிணறு சுமார் 60 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது . 100க்கும் மேற்பட்ட படிகளில் கீழே இறங்கி சென்றால் தான் இக்கிணற்றை அடையமுடியும் . கிணற்றை சுற்றி அழகிய மூன்று நிலைகளில் கல் சுவர்களும் அவற்றில் சிறிய அறை போன்ற வடிவமும் காணப்படுகிறது . படிகளில் இறங்கினால் கொஞ்சம் குளிர்ச்சியை நாம் உணர முடிகிறது . இக்கிணற்றை வைத்து நிறைய பேய் கதைகள் உலவுகின்றன . எனினும் இந்த இடம் பல திரைப்படங்களில் நாம் கண்டது தான் . முக்கியமாக pk என்ற ஹிந்தி படத்தில் நாம் பார்த்தது நினைவு வருகிறது . இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தை காண நிறைய வெளிநாட்டு சுற்று பயணிகள் வருகின்றனர் . நாம் நீர் மேலாண்மையில் சிறந்து இருந்ததற்கு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது .











புரானா கிலா / PURANA QILA , டெல்லி

 புரானா கிலா / PURANA QILA 

 இந்தியாவில் உள்ள பழமையான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது . புரானாகிலா என்றால் (புராணா ) பழமையான கோட்டை என்று பொருள் . முகலாய பேரரசர் பாபரின் மகனான ஹுமாயுனால் உருவாக்கப்பட்டது தான் இக்கோட்டை . பாபருக்கு பின் ஆட்சிக்கு வந்த ஹுமாயுன் டெல்லியில் தின்பனா (Din Panah ) என்ற நகரை உருவாக்கி அதில் ஒரு பெரிய கோட்டையை கட்டினார் . இக்கோட்டை இறை நம்பிக்கையின் அடையாளமாக திகழ வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது . இறை நம்பிக்கை உள்ளவர்களின் புகலிடமாக இக்கோட்டை இருக்கும் என்ற எண்ணத்திலும் , இஸ்லாம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் எந்த பிரிவை சேர்ந்தவராக இருப்பினும் இங்கு வந்து தங்கி ஆராய்ச்சிகள் செய்ய , அமைதியான இடத்தை உருவாக்கி கொடுக்க வேண்டுமென்று எண்ணி வடிவமைத்தார் .


ஹுமாயூன் 1533 ஆம் ஆண்டில் இக்கோட்டையை கட்டி முடித்தார் இக்கோட்டைக்கு மிகப்பெரிய மூன்று நுழைவாயில்கள் உள்ளன . கோட்டையை சுற்றி உள்ள பெரிய சுவர்களும் நுழைவாயிலும் ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதற்கிடையில் 1540 ஆம் ஆண்டில் கிழக்கு இந்தியாலிருந்து வந்த ஆப்கானிஸ்தான் வம்சாவழித் தலைவரான ஷெர்ஷா சூர் (Sher sha sur ) , தில்லி மற்றும் இந்திய பேரரசை கைப்பற்றுவதற்காக டெல்லி மீது போர் தொடுத்தார் . இதில் ஷெர்ஷா வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியதுடன் ஹுமாயூனை டெல்லியில் இருந்து வெளியேற்றினார் .
ஷெர்ஷா வின் இயற்பெயர் ஃபரிட் கான் . ஒருமுறை சிங்கம் ( ஷேர் ) ஒன்றுடன் நேருக்குநேர் மோதி அதனைக் கொன்றதால் "ஷேர்" கான் என்று அழைக்கப்பட்டார் . பின்பு டில்லியின் "ஷா" வாகப் பதவியேற்றதல் "ஷேர் கான்" என்பது "ஷேர் ஷா" என்றானது . இவரே "சூர்" (Sur ) என்ற அரசு வம்சத்தை நிறுவினார் . ஷேர்ஷா சூர் இந்த கோட்டைக்கு "ஷேர்ஷா கர்" என மறு பெயரிட்டார் . இக்கோட்டையின் உள்ளே பல கட்டிடங்களை புணரமைத்ததுடன் புதிதாக சிலவற்றை கட்டினார் . சூர்யின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும் இக்காலகட்டத்தில் டில்லி சிறப்புற்று இருந்தது .
திடீரென்று நடந்த வெடி விபத்தில் ஷேர் ஷா சூர் இறந்தவுன் ஷேர் ஷாவின் மகன் இஸ்லாம் ஷா பதவியேற்றார். அரசு பதவி சண்டையில் சகோதர்கள் மாற்றி மாற்றி கொல்லப்பட்டனர் . இதனால் ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி மீண்டும் ஹுமாயூன் ஆட்சியை பிடித்தார் . ஆட்சியை பிடித்த கையோடு ஹுமையூன் தான் ஆசையாக கட்டிய கோட்டையை புணரமைத்து மீண்டும் பயன்படுத்த தொடங்கினார் . இனி கோட்டையை பற்றி காண்போம் .
கோட்டையின் சுற்று சுவர்கள் சுமார் 1.5 km நீளமும் 20m உயரத்துடன் மூன்று நுழைவாயில்களுடனும் கட்டப்பட்டுள்ளது . அவை
 
1)Bada Darwaza ( மேற்கு வாயில் )
2) Humayun Darwaza ( தெற்கு வாயில் )
3) Talaaqi Darwaza (வடக்கு வாயில் )

1)Bada Darwaza :
                          படா தர்வாசா : மேற்கில் அமைத்துள்ள இந்த நுழைவாயில் தான் இன்று கோட்டைக்குள் மக்கள் செல்ல பயன்படுத்தப்படும் ஒரே நுழைவாயில் . Bada என்றால் பெரிய , darwaza என்றால் வாயில் என்ற பொருளில் ( பெரிய வாயில்) அமைந்துள்ளது நுழைவாயில்கள் மூன்றும் சிறு சிறு வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன . மூன்று வாயில்களும் பிரம்மாண்டமானவை , மூன்று அடுக்குகளுடன் மூன்று தளங்களைக் கொண்டு அமைத்துள்ளது . ஒவ்வொரு தளத்திலும் தாழ்வான படிக்கட்டுகள் காணப்படுகிறது . வெவ்வேறு கட்டிடக்கலையில் பாணியில் இவை அமைந்துள்ளது . சில அறிஞர்கள் ஹுமாயுன் மூன்று வாயில்களை கட்டியதாகவும் கூறுகின்றனர் , சிலர் இரண்டு வாயில்களை முகலாயப் பேரரசு கட்டினார் என்றும் ஒரு வாயிலை அதாவது தெற்கு வாயிலை ஷேர் ஷா கட்டினார் என்றும் கூறுகின்றனர் .







2) Humayun Darwaza :
                                 ஹுமாயுன் தாரவாசா : தெற்கு வாயிலாக அமைந்துள்ள இவ்வாயில் இஸ்லாமிய கட்டிட கலை வளர்ச்சியை நாம் அறிந்துகொள்ள முடியும் .
       




3) Talaaqi Darwaza
                             படா தர்வாசா நுழைவாயில் வழியே கோட்டைக்குள் நுழைந்தவுடன் இடதுபுறமாக உள்ளது இவ்வாயில் . கோட்டைக்கு வடக்கு வாயிலாக அமைந்துள்ள இவ்வாயில் 1553 - 1554 ல் கட்டப்பட்டது . தற்போது இவ்வாயிலை " தடை செய்யப்பட்ட வாயில் " என்று அழைக்கிறார்கள் . எதனால் இப்பெயர் ஏற்பட்டது என்று அறிய முடியவில்லை . ஆனால் மக்களிடையே ஒரு கதை உலாவுகிறது . அதாவது ஒரு ராணி தன் கணவன் ( ராஜா) போரில் தோற்றத்தை அறிந்து இக்கதவை பூட்டியதாகவும் , வெற்றி பெற்று திரும்பினால் மட்டுமே திறப்பேன் என சபதம் செய்ததாகவும் கூறப்படுகிறது . ராஜா மீண்டும் போர் புரிந்து அந்த போரில் இறந்ததால் இந்தக் கதவை திறக்கப்படவே இல்லை என்ற அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள் .



இனி கோட்டையின் உள்ளே உள்ள கட்டிடங்களைப் பற்றி காண்போம் .
1) Qila i kohna Masjid
2) Sher Mandal
3) Baoli
4)Hammam

1) Qila i kohna Masjid
                                டெல்லியில் உள்ள மிகச் சிறந்த மசூதிகளில் ஒன்றாகும் . சூர் வம்சத்தின் தலைவரான ஷெர்ஷா ஹுமாயுனை வென்ற பிறகு 1541ல் இந்த மசூதியை கட்டினார். ( Bada Darwaza )படா தர்வாசா நுழைவாயிலுக்கு நேர் எதிரே அமைத்துள்ளது . மிக அழங்காரமாக காணப்படும் இக்கட்டிடம் சிவப்பு மற்றும் மஞ்சள் மணல் கற்கள் கொண்டும் , கருப்பு வெள்ளை பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது . இதன் மேற்கூரை diminutive dome மாடல் வகையில் சுமார் 16.5 m உயரம் அமைந்துள்ளது . இம்மசூதி ஐந்து நுழைவாயில்களை கொண்டுள்ளது . பெரிய பிராத்தனை கூடம் நிறைய அழங்காரத்துடன் கட்டப்பட்டுள்ளது . மசூதியின் நான்கு மூலைகளும் எண்கோண வடிவில் உள்ளது .









2) Sher Mandal
                         இக்கட்டிடம் ஷெர்ஷாவால் தொடங்கப்பட்டது எனவே தான் இந்த கட்டிடத்தின் பெயர் ஷெர்ஷா மெண்டல் . ஆனால் ஆரம்ப கட்டத்தில் இக்கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கும்போதே ஷேர் ஷா இறந்து விட்ட காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது . சில ஆண்டுகளுக்குப் பின் இக்கோட்டையை கைப்பற்றிய ஹுமாயூன் மீதமுள்ள பகுதிகளை கட்டி முடித்தார் . எண்கோண வடிவில் இரண்டு மாடியை கொண்டு அமைத்துள்ள இக்கட்டிடம் ஷேர் ஷா காலத்தில் பொழுதுபோக்கு கூடமாக விளங்கியது என்றும் ஹுமாயூன் இதை புணரமைத்து தனக்கு மிகவும் பிடித்த நூலகமாக மாற்றினார் என்றும் எனவே முதலில் திட்டமிட்டதை விட உயரம் குறைவாக இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது . இது சிவப்பு மணகற்களால் கட்டப்பட்டுள்ளது .
1556 ஜனவரி 24 ஆம் ஆண்டு மாலைப் பொழுதில் இக்கட்டிடத்தில் அமர்ந்து இருந்த ஹுமாயூன் தொழுகைக்கான அழைப்பு மணியை கேட்ட உடன் விரைத்து எழுந்து படிகளில் வேகமாக கிழே இறங்கும் போது நிலைதடுமாறி படிகளில் கீழே விழுந்தது அவர் மரணத்துக்கு வழி வகுத்தது . எனினும் ஹுமாயூன் இருந்தவரை அவருக்கு பிடித்த இடங்களில் இதுவும் ஒன்றாக திகழ்ந்தது . தற்போது மேலே செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை .





3) Baoli
            கோட்டையுள்ளே உள்ள Qila i kohna Masjid க்கும் Sher Mandal இரண்டிற்கும் இடையில் அமைந்துள்ளது . இது ஒரு படிக்கிணறு StepWell . அன்றைய நீர் மேலாண்மையை அறிந்து கொள்ள உதாரணமாக திகழ்கிறது . மழை நீரால் சில நேரங்களில் படிகளில் நீர் நிறைந்து நிற்கும் . இக்கிணற்றை சுற்றிய சுவர்கள் டெல்லி குட்டர்ஸ் quartzite கற்களால் கட்டப்பட்டுள்ளது .

4)Hammam
                   Sher Mandal க்கு மேற்கில் அமைந்துள்ளது ஹம்மம் . இது ஒரு குளியல் அறை போன்ற ஒன்று . சதுரமாக சற்று தாழ்வான கட்டிடம் செங்கற்களால் மூடப்பட்டுள்ளது . இதை சுற்றி மண் குழாய்கள் ( terracotta ) பதிக்கப்பட்டுள்ளன .





 
Archeological museum
                                  புராண கிலா மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும் .இங்கு பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பல கலைப்பொருட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன . புராண கிலாவின் ஒரு பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைந்துள்ளது
அருங்காட்சியகத்தில் உள்ள கண்காட்சியில் காலவரிசைப்படி பொருட்கள் காணப்படுகின்றன . மௌரிய (கிமு 300-200) பேரரசில் தொடங்கும் டெல்லியின் வரலாறு, சுங்கா( Sunga 200 BC - 100 BC ), Saka - Kushan period 100BC - 300 AD ) குஷானா, குப்தா, ராஜ்புத், சுல்தான் மற்றும் சூர் , முகலாயர் வரை தொடர்கிறது .
இவற்றில் நிறைய டெரகோட்டா மண் பாண்டங்கள் (பானைகள், தட்டுகள், ஓடுகள்) ஆகியவற்றுடன் சீனப் பீஙகான்ங்கள் , சில கண்ணாடி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . தவ்வை , புத்தர் மற்றும் பல சிலைகளும் செம்பு பட்டயமும் , பல வரைபடங்களும் , யானை தந்தத்தால் செய்த பொருட்கள் ,
புரானா கிலா தொல்பொருள் தளத்தில் பணியின் புகைப்படங்கள் , என பலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் நாம் காணலாம் . இக் காட்சியகம் கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்து இருப்பது சிறப்பு .






முகலாய பேரரசர் பாபரின் மகனும் இந்தியாவின் மிகச் சிறந்த பேரரசரான அக்பரை நமக்கு பெற்று தந்தவருமான ஹுமாயூன் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை காண்பதுடன் அவர் இறந்த இடத்தையும் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று .