Sunday, December 6, 2020
Sri lakshmi narasimhar temple , Marehalli
Saumyakesava perumal temple , Nagamangala , Mandya district
நாகமங்களா , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும் . இவ்வூரின் மையப்பகுதியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த "சௌமியகேசவ" கோயில் அமைந்துள்ளது . நாகமங்களா , கங்கர் காலத்தில் கல்கனி நாடு என்று அழைக்கப்பட்டது .
ஹொய்சால மன்னரான பிட்டிதேவன் முதலில் சமணராக இருந்து , பின்னர் ராமானுஜரால் வைணவத்தின் மீது பற்று கொண்டு வைணவராக மாறி தன் பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டார் . இவர் காலத்தில் கர்நாடகாவில் வைணவம் தழைத்து இருந்தது . இவர் வழி வந்த இவரது பேரனான இரண்டாம் வீர வல்லாளன் (1173) , நாகமங்களாவில் வைணவ கோயில் கட்டினார் . இக்கோயில் " வீர வல்லாள சதுர்வேதி பட்டாரநகர" என்று முதலில் அழைக்கபட்டது . காலப்போக்கில் இப்பெயர் மருவி சௌமிய கேசவ கோயில் என்று அழைக்கப்பட்டது. மற்ற ஹொய்சாளர் கோயில்களை போல் அல்லாமல் கலைப் பணியில் இக்கோயில் முழுமையடையாமல் இருக்கிறது . கருவறையின் முன்பு உள்ள தூண்களில் , நான்கு தூண்கள் வட்ட வடிவத்திலும் , இரண்டு தூண்கள் மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. பல கோணங்களில் அமைந்த மேடையின் மீது கோயில் கட்டப்பட்டுள்ளது . மேடையின் மேற்பகுதி வலம் வரும் பாதையாக பயன்படுகிறது . பின் வெளிப்புறத்தில் மற்ற கோயில்களில் காணப்படும் ஹொய்சாலர்களின் சிறப்பு சிற்பங்கள் இங்கு இல்லை .
ஹொய்சாளர்களை தொடர்ந்து இப்பகுதியை ஆண்ட விஜயநகர பேரரசு முகமண்டம் அமைத்து இக்கோயிலை விரிவுபடுத்தினர். கல்வெட்டுகளில் மூலவரை சென்னக்கேசவா என்று குறிப்பிடப்பட்டுகிறது . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தின் முக்கியமான வைணவத் தலம் ஆகும் .
ஜான் சல்லிவன் , கோத்தகிரி
நீலகிரியில் உள்ள கோத்தகிரி "இந்தியாவின் சுவிஸர்லாந்த்" என்று அழைக்கப்படுகிறது . இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிஸர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது . உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் . இவரே நீலகிரியின் தந்தை என போற்றப்படுகிறார் .
1819 ஆம் ஆண்டு கோத்தகிரி , கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை கலெக்டராக இருந்தவர் ஜான் சல்லிவன் .15 ஜூன் 1788 ஆண்டு லண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்திய கம்பெனியின் ரைட்டராக சேர்ந்து பின் 1816ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர்ராக பணியாற்றினார் . பின் 1815 - 1930 வரை கோவை கலெக்டராக பணியாற்றினார் . இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும் , அடர்ந்த வனப்பகுதியாளும் இங்கு வாழ்ந்த மக்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர் . இந்த பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சல்லிவன் அவர்களை மிகவும் கவர்ந்ததால் திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் கேம்ப் ஆபீஸ் அமைத்தார் . இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம். இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது. ஊட்டியுள்ள மிகப்பெரிய ஏரியும் இவரால் உருவாக்கப்பட்டது . மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.
இவரின் வருகைக்குப் பிறகே ஊட்டியில் தேநீர் மற்றும் கேரட் , பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன . கோத்தகிரியின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம் . நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு .
Saturday, December 5, 2020
இராமநாதபுரம் அரண்மனை
ஈரோடு அந்தியூர் தேவர்மலை நடுகல்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியும் ஒன்றாகும் . அங்கு உள்ள மலையில் தேவர் மலை என்ற மலைக்கிராமம் அமைந்து உள்ளது . அந்த சிறு கிராமத்தில் பந்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் பந்தீஸ்வர் மற்றும் வீரபத்திரருக்கு சிறப்பான வழிபாட்டு நடக்கிறது . இக்கோயிலில் உள்ள ஒரு சிறிய பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது .
இந்த கோவிலுக்கு வெளியே மூன்று நிலையில் நடுகல் ஒன்று உள்ளது. மூன்றுநிலை நடுகல்லில் கீழிருந்து முதல் நிலையில் நடுவில் வாளுடன் வீரன் ஒருவன் உள்ளார். அவரது இருபுறமும் இரு மனைவியர்கள் உள்ளனர், கையில் மதுக்குடுவையுடன் இருப்பதானால் சதியேறியதாகக் கருதலாம். இரண்டாம் நிலையில் சொர்க்கம் செல்லும் காட்சியும் மூன்றாம் நிலையில் நந்தியுடன் லிங்கமும் அதற்கு பூசை செய்பரும் காட்டப்பட்டுள்ளனர்.
எனவே இதனை நாம் வீரனுடன் உயிர்நீத்த சதிக்கல்லாக கருதலாம். மூன்றுநிலையும் கைலாசமும் உள்ளதால் இதனை லிங்காயத்து இன மக்களின் நடுகல்லாக கருத வாய்ப்புள்ளது.
பரஞ்சேர்வழி / பரஞ்சேர்பள்ளி
கொங்கு நாட்டின் உட்பிரிவு நாடுகளில் ஒன்றான காங்கயநாட்டில் உள்ளது பரஞ்சேர்வழி. இவ்வூர் பரஞ்சேர் பள்ளி (பரஞ்சேர்+பள்ளி)என்று சமணம் தொடர்புடையதாகவும், இப்பெயர் மருவி தற்போது பரஞ்சேர்வழி (பரம்+சேர்+வழி) சைவம் தொடர்புடையதாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
சமணர்கள் முதலில் கொங்கு நாடு வந்ததை "பொன்னாடதேசம்" வந்து பின் மற்ற பகுதிகளுக்குச் சென்றதாக குறிப்பிடுகின்றனர் . கொங்குதேசம் முழுவதிலும் சமணம் பரவியிருந்தமைக்கு பல உதாரணங்கள் உண்டு. பரஞ்சேர்பள்ளி என்ற ஊரின் பெயரைக் கொண்டு இங்கு சமணப்பள்ளி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்கு சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று உள்ளது.
இந்த சமண தீர்த்தங்கரரின் சிற்பமானது அம்மன் கோயிலுக்கு அருகில் சாலை ஓரத்தில் உள்ளது . இந்த அழகிய தீர்த்தங்கரர் தலைக்கு மேலாக முக்குடையுடனும் , இருபுறமும் கரண்ட மகுடத்துடன் கவரி வீசும் ஆடவர்களுடன் காட்சி தருகிறார் . இந்த சிலை 10 ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருதுகின்றனர் .
மேலும் இந்த ஊரில் சிறப்பான மத்யபுரீஸ்வர் என்றழைக்கப்படும் சிவாலயம் ஒன்று உள்ளது . கி.பி 1261ம் ஆண்டு கொங்கு சோழரான இரண்டாம் விக்கிரம சோழன் கல்வெட்டு ஒன்று கோவில் கிணற்றுக்கு அருகே உள்ள கல்லில் பதிக்கப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில் சமூகம் மற்றும் திருவிழா பற்றி ஆய்வு செய்ய பல செய்திகள் உள்ளன . கரைநாடு , அடிக்கீழ்தளம் பதினெண் பூமி மாகேஸ்வரர்களும் சேர்ந்து ஊர் மன்றுபிச்சை அளித்த செய்தியும் உள்ளது . பரஞ்சேர்பள்ளி இறைவனுக்கு பரஞ்சேரபள்ளிபிடாகையைக் கொடையாக அளித்த செய்தும் உள்ளது .
ஆக கொங்குநாட்டில் இவ்வூர் இருவேறு மதங்களை ஒன்றினைத்து சிறப்புற விளங்கியதை அறிய முடிகிறது.