Wednesday, February 22, 2023

திருப்பருத்திக்குன்றம் , காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் , தமிழகத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள பழமையான நகரமாகும் . " கோவில் நகரம் " என புகழப்படுவதற்கு ஏற்ப பல வரலாற்று சிறப்புமிக்க அழகிய கட்டிடக்கலையுடன் கூடிய கோயில்களை தன்னகத்தை கொண்டுள்ளது . இந்தியாவின் புனித நகரங்களில் சிறந்ததாக திகழ்கிறது . கி . பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . அதனாலேயே "பல்லவர் கட்சி" என்று அழைக்கப்பட்டது . பல்லவ பேரரசர் சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் , ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறினான் . ஆனாலும் அவர்கள் எல்லா மதத்தையும் ஆதரித்தனர் என்பதற்கு சான்றாக பல்லவர்களின் தொண்டை நாட்டில் சைவம் , வைணவம் , பௌத்தம் மற்றும் சமணக் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன . இங்கு சிவகாஞ்சி , விஷ்ணு காஞ்சி , பௌத்த காஞ்சி , சமண காஞ்சி என நான்கு மண்டலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது . இதில் சமண காஞ்சி பற்றி அறிந்து கொள்ளும் முன் சமண மதம் தோன்றியது பற்றி சிறிது அறிந்து கொள்வோம் .

வர்த்தமான மகாவீரர் (கி.மு 599) வைஷாலிக்கு அருகில் உள்ள குந்தாகிராமத்தில் பிறந்தார் . அவர் துறவறம் மேற்கொண்ட பதின்மூன்றாவது ஆண்டில் மிக உயர்ந்த அறிவைப் பெற்றார் . ஜைன / சமண மதம் எளிமையான வாழ்க்கை மற்றும் அகிம்சை (அகிம்சை) பற்றியது. ஜைன மதம் என்பது 24 தீர்த்தங்கரர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாகும், ரிஷபநாதர் முதல் தீர்த்தங்கரர் , பார்ஷ்வநாதர் இறுதி அல்லது இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் . அவர்களில் கடைசி மற்றும் மிக முக்கியமானவர் மகாவீரர் ஆவார். மகத ஆட்சியாளர்களான பிம்பிசாரும் , அஜாதசத்ருவும் மகாவீரரின் போதனைகளால் மிகவும் கவரப்பட்டனர். ஜைன மதத்தின் மூன்று கொள்கைகள் சரியான நம்பிக்கை, சரியான அறிவு மற்றும் சரியான செயல். 
                                 வட இந்தியாவில், தன நந்தா, சத்ரகுப்த மௌரியா மற்றும் காரவேலா போன்ற ஆட்சியாளர்களால் இம்மதம் ஆதரிக்கப்பட்டது. அவர்களுடன் சமண மதத்தை பின்பற்றுபவர்கள் பலர் கர்நாடகாவில் குடியேறினர். அவர்கள் வழியே சமணம் தமிழகம் வந்தடைந்தது . காலப்போக்கில், தமிழகத்தில் சமண மதம் ஒரு முக்கிய நம்பிக்கையாக மாறியது . சமணத்தின் செல்வாக்கை தமிழக நிலப்பரப்பு முழுவதும் இன்றும் காண முடியும். இந்தியாவில் திகம்பர் சமணர்களுக்கென உள்ள நான்கு முக்கிய ஸ்தலங்களில் காஞ்சியில் உள்ள திருப்பருத்திகுன்றமும் ஒன்றாகும். மற்ற மூன்றும் டெல்லி, கோலாப்பூர் மற்றும் பெனுகொண்டாவில் உள்ளன. இனி திருப்பருத்திக்குன்றம் பற்றி காண்போம் .
                      காஞ்சி அருகே பாலாற்றங்கரையில் உள்ளது திருப்பருத்திகுன்றம் , இது முன்னாளில் காஞ்சி மாநகரின் சமணக்காஞ்சி என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும் . " பொற்குன்றம் " என்ற பெயரே " பருத்தி குன்றம் " ஆயிற்று என்றும் , அருணகிரி என்னும் வடமொழிப் பெயரும் இதற்கு வழங்கியதாக கூறப்படுகிறது . இதில் அருணன் என்பதும் பரிதி என்பதும் சூரியனை குறிப்பதாகும் . பரிதிக்குன்றம் என்பதே பருத்திக் குன்றம் ஆயிற்று என்று கூறப்படுகிறது . இச்சிறப்பு வாய்ந்த ஊரில் தற்போது திரைலோகிய நாதர் கோயில் மற்றும் சந்திர பிரபா கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன .
கி.பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லவ மன்னன் சிம்ம விஷணுவால் கட்டப்பட்ட இக்கோயில் முதலில் செங்கல் கற்றலியாக இருந்ததாகவும் பின் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது .
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள பள்ளன் கோயில் என்னும் இடத்தில் கிடைக்கப்பட்ட செப்பேட்டில் ( பள்ளன் கோயில் செப்பேடு ) இக்கோயிலை பற்றிய குறிப்பு வருகிறது . பள்ளன் கோயில் செப்பேட்டின் தமிழ் பகுதியில் " அமண் சேர்க்கை பருத்தி குன்றில் வஜ்ர நந்தி குரவர்க்கு வெண்குன்ற கோட்டத்து பெருநகர நாட்டு " என்பதன் மூலம் அந்த ஊர் பற்றிய குறிப்பை அறியலாம் . சிம்ம வர்மன் ( கி.பி 540) தன் ஆறாம் ஆட்சி ஆண்டில் வெண்குன்றம் பகுதியில் வாழ்ந்த வஞ்சிர நந்தி என்ற சமணத் துறவிக்கு நிலதானம் வழங்கிய செய்தியை இச்செப்பேடு தெரிவிக்கிறது . இதனைக் கொண்டும் இக்கோயிலின் பழமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது .

சந்திரபிரபா கோயில் :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கட்டிடக்கலையின் அடிப்படையில் கூறப்படுகிறது . பல்லவர்களின் அடையாளமாக விளங்கும் சிங்கத் தூண்கள் அதிகமாக உள்ளன . கருவறை , அர்த்தமண்டபம் , சிறிய முகம் மண்டபம் மற்றும் ஒரு சிறிய பிரகாரம் உள்ளன. சமணத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திர பிரபா தியான கோலத்தில் காணப்படுகிறார் . அவரின் உருவம் வெள்ளை நிற சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டுள்ளது . அவரின் இரண்டு பக்கங்களிளும் இரண்டு சாமரம் தாங்கிகள் காணப்படுகிறார்கள் . இவை 18 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் .


திரைலோக்கிய நாதர் கோயில் :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் மூன்று சன்னதிகள் அமைந்துள்ளன . இவற்றில் முதன்மையான சன்னதி மகாவீரருக்கானது . இப்பகுதி "வர்த்தமானேஸ்வர் " என்றும் அழைக்கப்படுகிறது . மற்ற இரண்டு சன்னதிகளில் மகாவீரருக்கு வடக்கில் புஷ்ப தந்தர் சன்னதியும் , தெற்கில் தரும தேவி சன்னதியும் அமைந்துள்ளது. கருவறையின் தற்போதைய அமைப்பும் அர்த்தமண்டபம் , முகம் மண்டப அமைப்பும் சோழர் காலத்தை சேர்ந்தவை . பனிரெண்டாம் நூற்றாண்டில் முற்பகுதியில் ஒன்றாம் குலோதுங்க சோழரால் கருவறை புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . கருவறை செங்கற்கலால் கட்டப்பட்டும் எஞ்சியவை கருங்கல் கட்டிடமாகவும் அமைந்துள்ளது . கருவறையின் பின்பகுதி அரைவட்ட தூங்கானை மாடக் கோயிலாக காணப்படுகிறது

.திரிகூடபஸ்தி:
திரிகூடபஸ்தி பிரிவில் மூன்று சன்னதியில் உள்ளன . அவற்றில் பத்மபிரபர் , வாசு புஜ்யர் , மற்றும் பார்சுவநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன . இவற்றில் இரண்டு சன்னதிகள் கிழக்கு நோக்கியவாறு அவற்றின் அர்த்தமண்டபமும் , முகமண்டபமும் தனித்தனியாக உள்ளன . கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிற இவற்றின் பாசநாதர் கருவறை சிறிதாகவும் மற்ற கருவறைகள் பெரிதாகவும் அமைந்துள்ளது . இவையும் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .


சங்கீத மண்டபம் :
கிபி 1387 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக அமையும் வகையில் அகலமான மகா மண்டபம் ஒன்று விஜயநகர மன்னர் புக்கனது அமைச்சர் இருகப்பா என்பவரால் கட்டப்பட்டு இருக்கிறது இதனை சங்கீத மண்டபம் என்றழைப்பர் . வாமன முனிவரின் (மல்லிஷேணர்) என்ற சமண முனிவர் சமஸ்கிருதம் , பிராகிருதம் , தமிழ் மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார் . இவரின் சீடரான புஷ்பசேன முனிவரிடம் , விஜய நகர அரசரான மூன்றாம் புக்கரிடம் படத்தலைவரும் மந்திரியுமான விளங்கிய இருகப்பர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . குருவின் ஆணைக் இணங்க திருப்பருத்திக்குன்றத்தில் சங்கீத மண்டபம் கட்டினார் . 61 அடி நீளம் கொண்ட இம்மாண்டபத்தில் ஒரு தூணில் உள்ள உருவம் இவர் உருவம் என்று கூறப்படுகிறது . இவை புதிய விஜயநகர பாணியில் கட்டப்பட்டு இருந்தாலும் இங்கு காணப்படும் ஓவியம் சிறப்பு மிக்கது .

 
குரா மரம் :
இக்கோயிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிக்கு பின்னால் பழமையான மற்றும் புனிதமான குரா மரம் ஒன்று காணப்படுகிறது . "தென்பருத்திக் குன்ற மர்ந்த கொங்கார் தருமக் குரா " என்னும் புகழப்படுகிற இம்மரத்தின் அடியில் முனிவர்கள் மூவர் அமர்ந்து நெடுந்தவம் செய்தனர் என்றும் அதனால் இம்மரம் தெய்வத்தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது . இம்மரம் நன்றாக செழிப்பாக வளர்ந்தால் அரசும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது .

சுவர் ஓவியங்கள் :
சங்கீத மண்டபத்தில் சுவர்கள் மற்றும் கூறைகளில் காணப்படும் அழகிய சுவரோவியங்கள் கோயிலின் முக்கிய சிறப்பம்சமாகும் . இந்த ஓவியங்கள் விஜயநகர் காலத்தில் வரையப்பட்டது . பின்பு மங்கிப்போன சில ஓவியங்களை மீண்டும் செப்பனிடப்பட்டு தற்போது நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது . ஸ்ரீ சேனாவின் கதை மற்றும் அவரின் மறுபிறப்புகள் , ரிஷபத்தின் முழு வரலாறு , வர்த்தமானர் வரலாறு , நேமிநாத புராணம் ,கிருஷ்ணனின் கதை , அம்பிகையின் புராணக்கதை போன்ற சமண மதத்தின் பல்வேறு புராணங்களை சித்திருக்கின்ற ஓவியங்கள் இருக்கின்றன .

கல்வெட்டுக்கள்
1) கி.பி 1199 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கனின் 21 ஆம் ஆட்சியாண்டில் வழங்கப்பட நிலக்கொடை பற்றிய குறிப்பு கோயிலின் முன்னுள்ள மண்டபத் வாசலின் கீழே குறிப்பிட்டுள்ளது . தற்போது காஞ்சிபுரத்திற்கு மேற்கே உள்ள அம்பி என்ற ஊர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் " எயிற்கோட்டத்து அம்பை " என்று அழைக்கப்பட்டுள்ளது . இவ் ஊரில் 20 வேலி நிலத்தினை கோயிலுக்கு பள்ளிச்சந்த இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது . பள்ளிச் சந்த என்பது கோயிலுக்கு வழங்கப்படும் வரியில்லாத நிலம் ஆகும் . மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பார் தமது குருவாகிய சந்திர கீர்த்தி தேவனின் நலத்திற்காக 20 வேலி நிலம் வழங்கிட மன்னனிடம் வேண்டினான் . அவனின் வேண்டுகோளை ஏற்று வழங்கப்பட்ட நிலம் பற்றிய குறிப்பு இக்கல்வெட்டில் உள்ளது .
2) கி.பி 1200 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 22ம் ஆட்சியாண்டில் கோயிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம் புணரமைக்கப்பட்ட செய்தி கோயிலின் கருவறை முன் உள்ள சுவற்றில் காணப்படுகிறது . மேலும் இவ்வூர் மகாசபையார் 25 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு நிலம் ஒன்றினை இறை நீக்கிய செய்தி உள்ளது .

3 )கிபி 1234 ஆம் ஆண்டு மூன்றாம் ராஜராஜனின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்ட கொடை பற்றி கல்வெட்டு சாந்தி மண்டபத்தின் மேற் சுவரில் உள்ளது . தியாக சமுத்திரப் பட்டையார் என்னும் வீமரைசர் என்பவர் , இக்கோயின் இறைவன் செம்போற் குன்றாழ்வார் வழிபாட்டிற்காக வேண்டி காலியூர்க் கோட்டத்து விற்பேட்டு நாட்டு காண்ணிப்பாக்கம் என்னும் ஊரில் நெடுநாள் பயிர் விளையாமல் இருந்த நிலத்தினை பள்ளிச் சந்தமாக கொடையடைத்துள்ளார் .

4 ) கி.பி 1236ம் ஆண்டு மூன்றாம் ராஜாஜனின் 20ம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட கொடை பற்றிய கல்வெட்டு கோயிலின் பொருட்கள் பாதுகாக்கும் அறையின் வடக்கு சுவரில் உள்ளது .
தியாகசமுத்திரப் பட்டையார் என்கிற வீமரைசர் மூன்றாம் ராஜராஜன் காலத்தில் இப்பகுதியின் அதிகாரியாக திகழ்ந்த போது இக்கோயிலில் பொருட்கள் வைக்கும் அறையை கட்டுவித்தான் . மேலும் இவருக்கு தாம்பூலம் மடித்து கொடுக்கிற (அடைக்காயமிது இடுகிற) வீம வடுகன் என்னும் பிராமணன், நென்மேலி என்னும் ஊரில் தனக்கு கூலியாக கிடைத்த நெல்லினை இந்நாயனாருக்கு காலை திருப்பள்ளி எழுச்சி செய்து படைக்கப்படும் திருவமுதுக்காக அளித்துள்ளான்.

5) கி.பி 1243 - 79 பிற்கால பல்லவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை "தமிழ்ப்பல்லவர் கோன் " என்று கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது . மூன்று முனிவர்கள் பயன்படுத்திய கல்லைக் கொண்டு குரா மரத்தின் மேடை அமைத்த செய்தி உள்ளது .
6) கி.பி 13ம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டில் கோயிலில் வாழ்ந்த மூன்று முனிவர்களுக்கு 'குரா' என்னும் மரம் குன்றாமல் நிழல் தந்தது போன்று மன்னனின் செங்கோல் ஆட்சி சிறப்புடன் நடைபெற வழிகாட்டியது இம்மரம் என்பதனையும் கூறுகிறது .
7 ) கி.பி 13ம் நூற்றாண்டில் காடவர் ஆட்சியில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை அழகிய பல்லவன் என்று அழைக்கப்பட்ட செய்தியும் அவன் அமைத்துக் கொடுத்த திருமதில் பற்றிய செய்தியும் உள்ளது .

8) கிபி 1362 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசுர் அரிகரராஜன் குமாரன் புக்க ராஜன் அவர்களின் நலன் வேண்டி தண்டநாயக்கரின் மகன் அமைச்சர் இருகப்பர் என்பவர் திரிலோக நாதர் கோயிலுக்கு பூசை , சாலை , திருப்பணி போன்றவற்றிற்காக மகேந்திரமங்கலம் என்னும் ஊரினை தானமாக வழங்கியுள்ள செய்தி மடப்பள்ளி வடக்கு சுவரில் கிரந்த கலந்த தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது .
9) கி.பி 14 ஆம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் இரண்டாம் புக்கனின் அமைச்சராகிய இருகப்பரின் சமூயகுருவான புஷ்ப சேனரது விருப்பத்திற்கு இணங்க
சங்கீத மண்டபத்தினை கட்டிய செய்தி உள்ளது .

11) கி .பி 1517 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயல்நாட்டு நகரம் காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றத்து திரைலோக்கிய நாதர் கோயில் ஸ்ரீ பண்டாரத்திலிருந்து குருக்கள் அனந்த வீரிய வாமண முனிவர் மற்றும் பொற்குன்றங் கிழார் தேவாதி தேவர் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் சேவகப் பெருமாள் மகன் அரியபுத்திரரிடம் 120 பணம் பெற்றுக்கொண்டு மனை மற்றும் நிலத்தால் வந்த பங்கினை விற்று கொடுத்துள்ளனர் என்று செய்தி கோயிலின் வலது சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது .

12 ) கி.பி1517 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்தில் முசிறுப்பாக்கம் என்ற திருமலை தேவிபுர அக்கிரகாரத்தை மக்களின் நலன் வேண்டி கோயிலுக்கு உரிய கோதுகை என்னும் ஊரினை கொடுத்து அதற்கு மாற்றாக உவச்சேரி என்ற பெறப்பட்ட செய்தி காணப்படுகிறது .

13 ) கிபி 15 -16 ம் நூற்றாண்டில் ஜின காஞ்சியில் உள்ள திரைலோக்கிய நாத சுவாமி பூசைக்காக 2000 குழிநிலம் விடப்பட்ட செய்தி உள்ளது .





















No comments:

Post a Comment