Friday, October 16, 2020

படிக்கிணறு, ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம்

 ஊற்றுக்குழி என்ற பெயரே ஊத்துக்குளி ஆனது . கால்நடைகளுக்கு தண்ணீர் குடிக்க ஊற்றுக்கள் தோண்டிய குழி . கால்நடைகள் அதிகமாக இருப்பதாலேயே , ஊத்துக்குளி பால்வளப் பொருட்களுக்கு பெயர் பெற்றதால் "ஊத்துக்குளி வெண்ணெய்" என்ற சொல்லாடல் பிரசித்தம். இவ்வூர் பண்டைய குறுப்பு நாட்டில் உள்ளது . உற்றலூர் என்றும் கூறுவர் . 


ஊத்துக்குளியில் இருந்து கைத்தமலை கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் பழம் பெருமை வாய்ந்த கிணறு உள்ளது . இது கி.பி 16ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது . சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது . 


இக்கிணறு சதுர வடிவமாக  "படிக்கிணறு" ( step - well ) என்னும் வகையைச் சேர்ந்தது . இதன் நான்கு பக்கங்களிலும் படிகள் இருந்தாலும் , ஒரே ஒரு வழி மட்டும் உள்ளது . இக்கிணற்றின் விளிம்புகளில் சிற்பங்கள் உள்ளன . சதுர வடிவத்தில் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திகளும் , நுழை வாயிலில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன . இவை தவிர தரையிலிருந்து கிணற்றுக்குள் நுழையும் பகுதியில் இரண்டு யானை சிற்பங்கள் உள்ளன . கிணற்றின் உள்பகுதியில் வேலைப்பாடுகள்  அமைந்த இரண்டு தூண்களும் உள்ளன . இந்த தூண் தோரணம் , கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்க்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கி கொண்டுள்ளன .


 கிணற்றின் உட்புறச்சுவரில் மனித முகம் , மீன் உருவம் , ஆமை உருவம் ,  குரங்கு உருவம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன . இப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது . இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க கிணற்றை போற்றி பாதுகாக்கவேண்டும் .







No comments:

Post a Comment