Friday, October 16, 2020

இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் கொடை, ஈரோடு :erode

 இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் கொடை :


ஊர்ப்பொது நற்காரியங்களுக்காக அரசர்களோ, தலைவர்களோ கொடை அளிப்பது வழக்கம். அவ்வாறு நற்காரியங்களுக்கு அளிக்கும் கொடையை சந்திர சூரியன் இருக்கும் வரை நிலைத்து இருக்க வேண்டும் என்று , கல்வெட்டு அல்லது செப்பேடு வாயிலாக வெட்டி வைப்பர் . 


கொடை கொடுத்த நோக்கம் காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்று  கல்வெட்டு வாசங்களின் இறுதியில்

"இந்த தன்மம் காப்பார் காலெந்தலை மேலென"

 இதை இந்த கொடையைக் காப்பவர் கால்கள் தலைமேல் என்றும் , காலில் விழுந்து வணங்குவேன் என்னும் பொருளிலும் கூறி இருப்பர் .

மேலும்

" இத்தன்மத்திற்கு அகிதம் செய்வோர் கெங்கைக் கரையிலெ காராம்பசுவை கொன்ற பாவத்திலே போக கிடவார்"

இந்த கொடை அல்லது தர்மத்தை அழிப்பவர்கள் கங்கை கரையில் காரம்பசுவை கொன்ற பாவத்துக்கு ஒப்பாவர்கள் என்று கூறியிருப்பர் . 


கங்கை என்பது இந்துக்களுக்கு புனித நதி, பசு என்பது அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு ஒப்பான ஒரு விலங்கு. ஆகவே பசுவை கொல்வதே பாவம் அதிலும் கங்கை கரையில் கொள்வது மஹா பாவமாக கருதி இப்படி ஒரு சாபத்தை சொல்லி இருப்பர். 


இவ்வாறு சொல்வதன் மூலம் அந்த தர்மம் காக்கப்படும் என்பதற்காக இவ்வாறு சொல்வதுண்டு. இதே போல முஸ்லீம்களின் தர்ஹா ஒன்றிற்கு அளிக்கப்பட்ட கொடைக்கான  ஒரு கல்வெட்டில் 

"மெக்காவில் பன்றியைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்" என்று உள்ளது. இந்துக்களுக்கு பசு புனிதம் அதனால் கொல்வது பாவம், முஸ்லீம்களுக்கு பன்றி வெறுக்கத்தக்க விலங்கு அதனால் அதனைக் கொல்வது முஸ்லீம்கள் பாவமாகக் கருதினர். இப்படி ஒரு வித்தியாசமான வாசகம் உள்ள கல்வெட்டு ஒன்றினைக் காண்போம்.


மைசூர் உடையார் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் ( 1734 - 1766 ) காலத்தில் ஈரோடு பகுதி அவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .ஈரோடு காவேரிக்கரையில் உள்ள தர்காவின் பெயர் சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீீத் . கோட்டை அதிகாரிகளான ஐந்து இந்து அதிகாரிகளும் இந்த தர்காவிற்கு வரும் அரதேசி , பரதேசி , பக்கிரிகள் ஆகியோருக்கு நாள் தோறும் கொடை அளிக்கவும் ஆடை கொடுக்கவும் 5 மா நிலம் நன்செய் பூமியைக் கொடையாக கொடுத்தனர் . நாள் 12.6.1761.


அந்நிலம் வைராபாளையம் கரையை சேர்ந்த பீளமேடு பகுதியில் தோப்பு அருகில் உள்ளது . அது காலிங்கராயன் வாய்க்கால் பாயும் நன் செய் நிலம் . சந்திர சூரியர் உள்ள வரை இக்கொடை நிலைக்க வேண்டும் என்று கொடுத்துள்ளதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.


இதன் மூலம் முஸ்லீம்களுக்கு மெக்காவிலே பன்றியைக் கொல்வது பாவமாக பாவித்து கல்வெட்டில் கூறியுள்ளது வியக்கத்தக்கது

(கல்வெட்டு பாடம் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது)


(இதே போல வேறு கல்வெட்டு இருப்பின் நண்பர்கள் கூறி உதவவும்)











No comments:

Post a Comment