Thursday, December 3, 2020

தேரிக்காடு , திருநெல்வேலி

 

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது "தேரிக்காடு" . நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சில செம்மண் மேட்டுப் பகுதியை தேரி என்கிறார்கள் . சிவப்பு நிற  பாலைவனம் என்றே சொல்லலாம்.  " தெற்றி " , "தேரி" என்றால் மணற்குன்று அல்லது (மண்)மேடு என்று பொருள் . (தேரிக்)காடு என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு வறண்ட நிலப்  பகுதியே . பாலைவனம் போல் காட்சியளித்தாலும் ஆங்காங்கே முந்திரி மரமும் , பனை மரமும் உள்ளது . பாலைநிலத்தில் உள்ளது போல் வெண்ணிற மணற்பரப்பு இல்லாமல் சிவந்த நிறத்தில் கற்கள் அற்ற மணல் காணப்படுகிறது . கண்ணுக்கெட்டிய தூரம் வரை  செம்மணல் தான் . வேதியல் மாற்றங்களுக்கு உள்ளாகி நிறம் மாறி சிவந்த நிலையில் மணல் உள்ளது . காற்றின் போக்கிற் ஏற்ப இங்குள்ள மணற்குன்றுகள் இடம் மாறுகின்றன . இதனால் இப்பகுதியில் கடலை போல் திசை காண்பது கடினம் . 


நுண்கற்கால கருவிகள் :

   கி.பி 1883 ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞர் புரூஸ் புட் மற்றும் பலர் இந்த இடங்களில் மேற்பரப்பு ஆய்வு நடத்தி உள்ளனர் . இங்கு கண்ணாடி போன்றும் , சாக்லேட்  கலரிலும் நுண்கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்து இருக்கின்றன , இந்த சாக்லேட் சிவப்பு கறை   செந்நிற மணலுக்கு சம காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது .இவற்றின் காலம் கி.மு 800 முதல் 10000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது . கூத்தம்புளி ,கட்டலங்குளம் , சாயாபுரம் , நாசரேத் , மெய்ஞ்ஞானபுரம் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் கிடைத்து இருக்கிறது .


        சேர்ட் (chert ) என்ற கல்லையும் ,குவார்ட்ஸ் ( quartz ) என்ற படிமக்கல்லையும் கொண்டு இவ்வாயுதங்கள் செய்யப்பட்டு இருக்கிறது . இவை அளவில்  சிறியவை என்பதால் இவற்றை "சிறுகல் கருவிகள் " (microlithic tools ) என்கின்றனர் . மிகச் சிறியவையாக இருப்பதால் இவற்றை நேரிடையாக கையில் பயன்படுத்துவதை விட மரப்பிடிகளிலோ , எலும்புப்பிடிகளிலோ கட்டி பயன்படுத்தி இருப்பர் . முனைகள் , கல்லுளி ,சுரண்டிகள் , இருபக்க முனைகள்(bifacial ), துளையிடும் கருவி , பட்டைக்கத்திகள் மற்றும் பல கருவிகள் இங்கு சேகரிக்க பட்டுள்ளன . 


 தொன்மையான நகரங்களான ஆதிச்சநல்லூர் சிவகளை உருவாவதற்கு முந்தைய காலத்தின் பண்பாட்டு தடயங்கள் இங்கு கிடைப்பது இதன் சிறப்பு .







No comments:

Post a Comment