Saturday, March 15, 2025

புத்துருவகலா இலங்கை Buduruwagala

இலங்கையின் உயரமான புத்தர் சிலை வெல்லேவயாவில் Wellewaya இருந்து 4Km தொலைவில் உள்ள Buduruwagala என்னும் இடத்தில் அமைந்துள்ளது . இயற்கையாக அமைந்த பெரிய பாறையில் பிரம்மாண்டமான ஏழு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பெரிய பாறையின் அமைப்பே யானை மண்டியிட்டு படுத்து இருப்பது போல் உள்ளது. இவை மகாயான பௌத்த மரபின் எச்சங்களாக கருதப்படுகிறது .

இந்த இடத்தின் பெயரான Buduruwagala என்பதில் புதூ (budu  ) என்பது புத்தர் என்றும் , உரு (uruwa ) என்பது உருவம் என்றும், கலா (gala ) என்பது கல்  என்ற அர்த்தத்திலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது . இது கி . பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் ,  பல்லவ சிற்பங்களை ஒத்து இருப்பதாகவும் சில அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . இலங்கையில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் மகாயன பௌத்தம் பரவியதாக சொல்லப்படுகிறது . இங்குள்ள ஏழு சிற்பங்களுக்கு நடுவில் பெரிய புத்தர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . புத்தரின் சிற்பத்திற்கு இரண்டு புறமும் தலா மூன்று சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன .  சுமார் 52 அடி உயரம் நிற்கும் புத்தரின் சிற்பத்தில் வலது கை மேல் நோக்கியவாறு உள்ளங்கை முன்னோக்கிவாறு அபயமுத்திரையில் பக்தர்களை ஆசிர்வதிப்பது போலவும் இடது கை அங்கியை பிடித்தவாறும் காட்டப்பட்டுள்ளது . இச்சிற்பத்தில் தற்போது தெரியும் சுண்ணாம்பு கலவையை காணும்போது முன்பு சிலையின் மேல் ஏதாவது வண்ணப்பூச்சு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .

புத்தருக்கு வலது பக்கத்தில் இருக்கும் மூன்று சிலைகளில் நடுவில் இருப்பது சுமார் 7 அடி உயரம் கொண்ட bodhisattva Avalokitheshvara அவலோகிதெஸ்வர . கைகளில் கடக ஹஸ்த முத்திரையும் தலையலங்காரத்தில் புத்தரின் உருவமும் கொண்டு இருப்பதால் இவரை bodhisattva Avalokitheshvara என்று நம்மால் இனம் காண முடிகிறது . உடலின் மேற்பாகம் ஆடை இல்லாமலும் கீழ் பாகத்திற்கு மட்டும் சிறிய வேட்டி போன்ற உடை அணிந்து காணப்படுகிறது . இவ்வுருவத்திலும் சுண்ணாம்புக்ககலவை மற்றும் வண்ணக்கலவையின் எச்சங்களை காண முடிகிறது .

அடுத்து புத்தருக்கும் போதிசத்தவ அவலோகிதேஷ்வரர்கும் இடையே 5 அடியில் பெண்ணின் உருவம் காட்டப்படுள்ளது . இவர் மகாயான பௌத்தத்தில் ஒரு பெண் போதிசத்வாவாகத் கருதப்படுகிறார் .

அழகான வளைந்த இடுப்புடன் வலது கையில்  கடக ஹாஸ்த முத்திரை இடது கையில் தாமரை தண்டை பிடித்தவாறு காட்சி தருகிறார் . சில சமயங்களில் இவரை அவலோதேஸ்வரருக்கு  துணைவி என்று குறிப்பிடுகின்றனர் . வஜ்ராயன பௌத்த மரபில் இவர் அனைத்து புத்தர்களின் தாயாகவும் , ஒரு புத்தராகவும் வணங்கப்படுகிறார் . இவரை பின்பற்றுபவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளித்து அவர்கள் ஞானம் வழிநடத்துபவராக கருதப்படுகிறார் .

அடுத்து அவலோகிதேஸ்வரருக்கு வலது பக்கத்தில் இருப்பவர் இளவரசர் சுதானா என்று கூறப்படுகிறது . சுமார் 6 மீ உயரமும் இடது கையில் கடஹ முத்திரையும் வலது கை கீழே தொங்கியவாறு  , உடம்பின் கீழ் பகுதியில் ஆடை அணிந்துவாறு காட்சி தருகிறார் . இவரின் கால் பகுதி சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது .

அடுத்து புத்தரின் இடதுபுறம் மூன்று உருவங்களில் நடுவில் இருப்பவர் Maitreya Bodhisattva மைதிரெய போதிசத்வா என்று நம்பப்படுகிறது. இவரின் உருவ அமைப்பு அவலோகிதேஸ்வரர் போன்றே உள்ளது . சுமார் 7மீ உயரத்தில் உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லாமல் அணிகலன்கள் மட்டும் அணிந்துவாறு உடலின் கீழ்ப் பகுதியில் ஆடை அணிந்த நிலையில் அணிகலன்களுடன், தலை பகுதி அலங்காரம் செய்யப்பட்டு இரு கைகளிலும் கடஹ முத்திரை காட்டப்பட்ட நிலையில் முகத்தில் அமைதியுடன் காட்சி தருகிறார் .

மைத்ரேய போதிசத்வாவின் வலது புறத்தில் , கையில் கடக முத்திரையுடன் காணப்படும் இவர் மஞ்சு‌ஶ்ரீ போதிசத்வாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . இரண்டு கைகளிலும் கடஹ முத்திரையுடன் தலை அலங்காரத்துடன் காணப்பட்டாலும் மீதி பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

மைத்ரேய போதிசத்வாவின் இடது புறத்தில் வஜ்ரபானி போதிசத்வா காணப்படுகிறார். சுமார் 6 மீ உயரமும் தலை அலங்காரத்துடனும் காதுகளில் மற்றும் கழுத்திலும் அணிகலண்களுடன் கைகளில் வளையல்களுடனும் காட்சி தருகிறார் .

இலங்கையில் காணப்படும் பல புத்த சிற்பங்களில் இது மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது . 













Wednesday, February 12, 2025

Kustarajakala , Weligama, srilanka

 இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் வெலிகாம Weligama என்னும் இடத்தில் உள்ள கடினமான பாறையில் குஷ்டராஜ கலா Kushtaraja gala ( Kushtaraja - குஷ்டம் நோய் வந்த ராஜா , gala - கல் )என்னும் சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பம்  இலங்கையில் உள்ள மாகாயன பௌத்த மதத்தின் சிறந்த சிற்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது . சிற்பத்தை பற்றி இங்கு உள்ள மக்களிடையே பல கதைகள் நிலவுகின்றது . குஷ்டம் என்னும் தோல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு மன்னர் வெலிகாம வந்திறங்கி , இங்குள்ள உள்ளூர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் அவர் நினைவாக செதுக்கப்பட்டது என்பது ஒரு சாராரின் கருத்து ,  மற்றொரு சாரார் நோய்வாய்ப்பட்ட மன்னர் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு உடல்நிலை சரியில்லாத போது காணிக்கை செலுத்துவதாக வேண்டி குணமானதும் இச்சிலையை வடித்தார் என்ற கருத்தும் நிலவுகிறது . எனினும் இவை புனைக்கதைகளாக இருந்த போதிலும் வெலிகாமா செழிப்பான நகரமாகவும் வெளிநாட்டு வர்த்தக மையமாகவும் அக்காலத்தில் கப்பல்கள் வந்து போகும் துறைமுகமாகவும் இருந்திருக்கிறது . 

இந்த சிலை போதிசத்வா Bodhisattva உருவமாக இருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாக உள்ளது . கி. பி 6ம் 7ம் நூற்றாண்டில் குடையப்பட்ட சிற்பம் என்பது இலங்கை தொல்லியல் துறையினரின் கருத்தாகும் .

சிறிய தோப்பில் உள்ள பாறையில் நின்ற கோலத்தில் சுமார் 10 அடி உயர பெரிய புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இச்சிலை நேர்த்தியாக அமைக்கப்பட்டது . சிற்பத்தின் இரண்டு கைகளிலும் இரண்டு வெவ்வேறு முத்திரைகள் காட்டப்பட்டுள்ளது . வலது கையில் விதர்கா முத்திரையும் இடது கையில் கடகஹஸ்தா முத்திரையும் காட்டப்பட்டுள்ளது . சிலையின் மேற்பகுதி ஆடைகள் இன்றி , கழுத்திலும் தோல் பட்டையிலும் ஆபரணங்கள் அணிந்தவாறும் கீழ்ப்பகுதியில் பட்டைகள் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் கைகளிலும் அணி அலங்காரங்களுடனும் காணப்படுகின்றன . சிலையின் தலைப்பாகத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் ஜடா மகுடத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கும் நான்கு உருவங்கள் காட்டப்பட்டுள்ளது. மகாயான பௌத்தர்கள் பெரிதும் மதிக்கும் அமிதாப புத்தரின் உருவமும் காட்டப்பட்டுள்ளது . இவைகளை வைத்து பார்க்கும்போது இச்சிலை புத்தரின் போதி சட்வராக அவலோகிதேஷ்வரராக Bodhisattva Avalokiteshwara இருக்கலாம் என்பது அறிஞர்களின் கூற்று . அதாவது புத்தரின் கடந்த கால வாழ்க்கை கதைகளில் அவர் ஒரு போதி சட்வராக விவரிக்கப்பட்டுள்ளார் . அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யவும் , புத்தரை போல் ஞானம் அடையும் பயணத்தில் உதவுபவரே அவலோகிதேஸ்வர போதிசட்வர் . தெய்வத்தன்மை , இரக்கத்தன்மை ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் போதிசத்வர்களுள் மிக உயர்ந்த வெளிப்பாடு அவலோகிய தேஷ்வரர் போதி சிற்பமாகும் . மகாயான பௌத்த நம்பிக்கைகளின் படி அவலோகிதேஸ்வரரே இரக்க குணத்தின் அதிபதி ஆவார் . இதனால் இப்பகுதி மக்கள் அவலோக்கியதேஷ்கர் வணங்கினால் தம் மேல் இரக்கம் கொண்டு வியாதிகளை குணமாக்குவார் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது .







Monday, February 10, 2025

இலங்கை சிகிரியா கோட்டை

        கடலால் சூழப்பட்ட அழகிய தீவான இலங்கையின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுவது சிகிரியாகும் . உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் சிகிரியா , இலங்கையில் தம்புல்லா நகரத்திற்கு வடக்கே உள்ள மாத்திரை மாவட்டத்தில் அமைந்துள்ளது .  இயற்கையாக அமைந்த ஒரு பழமையான பாறை மேல் கட்டப்பட்ட கோட்டைதான் சிகிரியா கோட்டை . இயற்கை சூழலில் மிக அழகாகவும் அமைதியாகவும் காட்சி தரும் இக்கோட்டை , பல கொடூரமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது .

 கி.பி 4 ம் ,5 ம் நூற்றாண்டுகளில் இலங்கை தீவானது இரண்டு மூன்று ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்துள்ளது . இதில் அனுராதபுரத்தில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த ஆறு தமிழ் மன்னர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் . இந்த வரிசையில் கடைசியாக ஆட்சி செய்த ஆறாவது பாண்டிய மன்னனான பிட்டியன் (கி . பி 458 - 459 ) என்பவர் காலத்தில் தாது சேனன்  என்ற மன்னன் படையுடன் வந்து அனுராதபுரத்தை கைப்பற்றினார் . இம்மன்னனே மொரியன் வம்சத்தை நிறுவிய மன்னர் ஆவார் . தாதுசேனன் (கி . பி 463 - 479 )அனுராதபுரத்தை கைப்பற்றி சிறப்பான ஆட்சியை வழங்கினார் . இவரது ஆட்சி காலத்தில் அனுராதபுரம் நல்ல வளர்ச்சி அடைந்தது . இவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் பல புத்த விகாரங்கள் மற்றும்  அவகானா ( Awukana ) என்னும் மிகப்பெரிய புத்தர் சிலையையும் நிறுவினார் . பல குளங்களை வெட்டி நீர் மேலாண்மையை வளர்த்தார் . தாது சேனன் மன்னனுக்கு  காசியப்பன் மற்றும் முகலன் என இரண்டு மகன்கள் இருந்தனர் . இதில் முகலன் மன்னனின் பட்டத்து ராணிக்கு பிறந்தவர் , காசியப்பர் மன்னரின் விருப்பமான துணைவிக்கு பிறந்தவர் . அதாவது காசியப்பரின் தாய் அரசு பின்னணி இல்லாதவர்  என்பதால். மூத்த மகனாக இருந்தும் அரசு பதவிக்கு தகுதி இல்லாமல் இருந்தார் . தாது சேனர் மன்னருக்கு இரண்டு மகன்கள் மட்டுமின்றி ஒரு செல்ல மகளும் இருந்தார் . மன்னர் அவர் மீது கொண்ட பேரன்பால் அவரை தன் சகோதரியின் மகனும் தனது சேனாதிபதியுமான மிகாராவுக்கு மணமுடித்து வைத்தார் . மிகாரா , இளவரசி என்றும் பாராமல் தன்‌மனைவியை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்வதை அறிந்த மன்னர் , மிகாராவின் தாயான அதாவது தனது சகோதரியை உயிருடன் எரித்து மிகாராவை தண்டித்தார் . இதனால் மிகக்கோபமுற்ற மிகாரா மன்னனை பழி வாங்க தக்க சமயம் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தார் . இச்சூழலில் தான் தாது சேனருக்கு பிறகு யாருக்கு மன்னர் பதவி என்ற குழப்பம் ஏற்பட்டது . இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட மிகாரா காசியப்பருக்கு பதவி ஆசையை வளர்த்தார் . பதவிக்கு தடையாக உள்ள தனது சகோதரரையும் தந்தையும் வெறுக்க ஆரம்பித்தார் . தக்க சமயத்தில் காசயப்பர் அரசவை உறுப்பினர்களை தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவரது தந்தையான மன்னரை  சிறையில் அடைத்தார் . இதை அறிந்த முகலன் தனக்கும் இந்நிலை ஏற்பட்டு விடும் என்று எண்ணி தன்னால் தற்போது படை உருவாக்க முடியாத காரணத்தால் தப்பி ஓடினார் .  இதையடுத்து காசயப்பர் (கி பி 477 - 495 ) அனுராத புரத்தில் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் . எனினும் காசியப்பருக்கு எப்படியும் தன் தம்பி ஒருநாள் படையுடன் போருக்கு வருவார் என்று எண்ணி தனக்கென ஒரு பாதுகாப்பான கோட்டையை அமைத்து ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த இடம் தான் சிகிரியா ஆகும் . தனது சகோதரன் பழிவாங்குவான் என்ற பயத்தில் , சிகிரியாவில் எதிரிகள் உள்ளே நுழைய முடியாதபடி கோட்டையை கட்டி தனது நாட்டின் தலைநகரை அனுராதாபுரத்தில் இருந்து சிகிரியாவிற்கு மாற்றினார் . இனி சிகிரியா கோட்டை பற்றி காண்போம் . 

சிகிரியா அடர்ந்த காட்டிற்கு நடுவே 200 மீட்டர் உயரம் கொண்ட பெரிய பாறை மேல் கட்டப்பட்ட கோட்டையாகும் . கோட்டையின் நுழைவாயிலை அடைய‌ அகழியை கடந்து சென்றால் ,  நீண்ட செம்மண் நடைபாதையும் அதன்  இரண்டு புறமும் குளங்களையும் காண முடிகிறது . மேலும் சிறிது தூரம் சென்றால்  எண்கோண குளத்தை காணலாம் . எட்டு கோணங்களில் அமைந்துள்ள குளம் என்பதால் எண் கோணம் என்று அழைக்கப்படுகிறது . மேலும் சிறிது தூரம் சென்றதும் இரு பாறைகளுக்கு நடுவே நீள்கிறது பாதை .  இவ்விரு பாறைகள் இயற்கையாகவே அமைந்ததோ அல்லது வெட்டப்பட்டதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது . கோட்டையின் நுழைவாயில் பாறையில் சிங்கத்தின் தோற்றம் போல் அமைக்கப்பட்டு இருந்திருக்கலாம்  ஆனால் தற்போது சிங்கம்  முன்னங்கால்களை  ஊன்றி அமர்ந்து போன்ற தோற்றம் மட்டுமே இருக்கிறது . சிங்க பாதங்களில் விரல்கள் மற்றும் நகங்கள் பிரம்மாண்டமாக  செதுக்கப்பட்டுள்ளது .சிங்க கால்களுக்கு நடுவே செல்லும் படிகளை கடந்து மேலே கோட்டைக்குச் செல்ல வேண்டும் . கோட்டைக்குச் செல்ல செங்குத்தான இரும்பு படிகளே உள்ளன . இரும்புப் படிகள் கைப்பிடிகள் உடன் பாதுகாப்பாக இருந்தாலும் , பாறைக்கு வெளியே அந்தரத்தில் நடப்பது போன்ற உணர்வை தருகிறது . மேலும் உயர பயம் இருப்பவர்கள் இப்படியில் ஏறுவது  கொஞ்சம் கடினம் தான் . இப்படியை கடந்து மேலே சென்றால் மலையின் உச்சி சமதளமாக உள்ளது . அங்கே முழுவதும் அழிக்கப்பட்ட கோட்டையை காண முடிகிறது .மலையின் உச்சியில் ஒரு காலத்தில் செங்கல் கட்டிடங்கள் நிரம்பி இருந்ததற்கு சான்றாக தற்போது வெறும் கட்டிடஅடித்தளங்களே காண முடிகிறது . மலையின் உச்சிக்கு இவ்வளவு செங்கல்களை எவ்வளவு பேர் , எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள்  எப்படி கொண்டு வந்திருப்பார்கள் ,  அதுவும் மலை ஏற பாறை அல்லது கற்படிகளோ காணப்படவே இல்லை  என்பதையேள்ளாம் நினைக்கும் போது வியப்பாக உள்ளது . 

மலையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் உள்ள இயற்கை காட்சிகளை காண முடிவதுடன். எதிரிகளின் வருகையை கண்காணிக்கவும் மிக எளிதாக இருந்திருக்க வேண்டும் . கோட்டைக்குள்ளே பல அறைகள் , குளங்கள், தோட்டங்கள் , மன்னர் அமரும் கல் இருக்கை போன்றவற்றை காண முடிகிறது .

அதன் பின்னே மலையிலிருந்து சிறிது தூரம் படிகளில் இறங்கி வந்தால் , ஏறும் படிகளில் இருந்து இறங்கும்படி தனியாகப் பிரிந்து செல்கிறது அவ்வழியே இறங்கினால் கண்ணாடி சுவர் என்ற பெயருடன் பாறையின் ஓரத்தில் ஆறடிக்கு உயரமான சுவரைப் பார்க்க முடிகிறது . 

கண்ணாடி சுவர் :

கண்ணாடி சுவர் என்று சொல்லப்படும் இச்சுவற்றை சுண்ணாம்பு ,தேன் , முட்டை கொண்டு பூசி இருக்கலாம் .  கண்ணாடி போல் பிரதிபலித்த இச்சுவர் தற்போது  பாலிஷ் கொஞ்சம் குறைந்து காணப்பட்டாலும்  இச்சுவரில் நிறைய எழுத்துக்களையும்  ஓவியங்களையும் காண முடிகிறது .  சுவரில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் இக்கோட்டை மன்னர்களால் கைவிடபட்ட பிறகு இங்கு பார்வையிட வந்த மக்களால் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஓவியங்களாக இருக்க வேண்டும் . கண்ணாடி சுற்றை கடந்து சென்றால் சுழல் படிக்கட்டுகல் நம்மை ஓவிய குகைக்கு அழைத்துச் செல்கிறது .

ஓவிய குகை :

இங்கு புகைப்படம் எடுக்க நமக்கு அனுமதி இல்லை .  இரண்டு குகைகளில் fressco எனப்படும் வகையை சேர்ந்த ஓவியங்கள் காணப்பட்டாலும் ஒரு குகைக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர் . அங்கு உள்ள ஓவியங்களில் பெண்கள் கைகளில் பூத்தட்டுக்களையும் பூங்கொத்துகளையும் கொண்டிருக்கின்றன நீளம் , மஞ்சள் , சிவப்பு வண்ணங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன . நிறத்திற்கு பழமையான மரத்தின் பச்சிலை , சுண்ணாம்பு கலவைகள் , களிமண்கள் கலவை கலந்து ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம் .  காசியப்ப மன்னர் நல்ல கலை ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக ஓவியங்கள் விளங்குகின்றன . இவ் ஓவியங்களை மேலும் காணவும் புகைப்படம் எடுக்கவும் கீழே உள்ள அருங்காட்சியகத்தில் இவ் ஓவியங்களை தத்துரூ வமாக வரைந்து வைத்துள்ளனர் . அவற்றை நாம் பார்த்து மகிழலாம் . குகையிலிருந்த ஓவியங்களை பார்த்துவிட்டு  மற்றொரு சுழல் படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கலாம் . கீழே இறங்கி வந்தால் பார்வையாளர் மண்டபம் என்று ஒன்று அமைந்திருக்கிறது . அ ங்கு அரசர் அமர்ந்து பார்வையாளர்களை சந்திக்கும் இடமாக சொல்லப்படும் இம்மண்டபம் தற்போது மேற்கூரை இல்லாமல் காணப்படுகிறது . அதற்கு அடுத்து சிறிது நேரம் நடைபாதையில் வந்தால் ஆசன குகை என்று ஒரு குகை காணப்படுகிறது.

ஆசன குகை :

பாறையில் செதுக்கப்பட்ட இருக்கை காணப்படுகிறது . அரசருக்கு பின்  சிகிரியா மடாலயமாக இருந்த போது பௌத்த துறவிகள் அமர்ந்து தியானம் செய்யவதற்கு வெட்டப்பட்டது போல உள்ளது . இதற்கு அடுத்து வந்தால் பாம்பு குகை அமைத்திருக்கிறது .  

பாம்பு குகை :

குகையின் மேற்பகுதி பாம்பின் தலை போன்று அமைப்புடன் இருப்பதால் இதை பாம்பு குகை என்கிறார்கள் . குகையின் மேலே வெளிப்புறத்தில் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன . இதுவே சிகிரியா கோட்டையின் கடைசி பகுதியாகும் .

சிகிரியாவில் இருந்து காசியப்ப மன்னர் 18 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார் . 18வது ஆட்சி ஆண்டில் மன்னர்  நினைத்தது போலவே அவரின் தம்பி முகலன்  பெரும் படையுடன் போருக்கு வந்தார் . 

இதில் காசியப்பன் மன்னரின் படை தோற்கும் தருவாயில் இருப்பதை உணர்ந்த காசியப்ப மன்னர் தன் வாளால் தன் தலையை தானே கொய்து மரணம் அடைந்தார்  . வெற்றி பெற்ற முகலன் இக்கோட்டையை கைவிட்டு தலைநகரை அனுராதபுரத்திக்கு மாற்றினார் . பின் இக்கோட்டையை பௌத்த மடாலயத்திற்கு வழங்கினார் . அதனால் அடுத்த சில நூற்றாண்டுகள் பௌத்த துறவிகள் இக்கோட்டையை பயன்படுத்தி வந்தனர் பின்பு அவர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் 19-ம் நூற்றாண்டில் முற்பகுதியில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி யானையை வேட்டையாடப் போகும்போது இடிபாடுகளின் காணப்பட்ட இக்கோட்டையை கண்டு வரலாற்றை மீட்டெடுத்தார் . 

சிகிரியா அருங்காட்சியகம் :

 இங்கே அகழ்வாய்வுகள் பல நடத்தப்பட்டு இம்மலையில் உள்ள குகைகளில் கற்கால மனிதன் வாழ்ந்த தடயங்கள் மற்றும் ஆயுதங்கள் முதல் பல உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன . அவற்றை எல்லாம் கோட்டைக்கு அருகே உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன .  அதுமட்டுள்ளாமல் மேலே உள்ள ஓவியங்களின் மாதிரிகளை உண்மை ஓவியங்கள் போலவே வரைந்து வைத்துள்ளனர் . புத்த மடாலாயமாக இருந்த போது இங்கே இருந்து பல புத்தர் சிலைகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளன .

பின் குறிப்பு:

சுமார் 200 மீட்டர் உயரம் கொண்ட சிகிரியா கோட்டையை காண 1200 படிகள் ஏற வேண்டும் . மலையின் உச்சிக்கு செல்ல 1.5 முதல் 3 மணி நேரம் ஆகும் , உயரத்திற்கு பயப்படுபவர்களுக்கு  சற்று கடினமான பயணமாக இருந்தாலும் நல்ல அனுபவமாக இருக்கும் . காலை ஏழு முதல் ஐந்தரை மணி வரை இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

ராவண கோட்டை :

இராமாயண இதிகாசத்தில் ராவணன் சீதையை கடத்தி இலங்கையில் தன் கோட்டையில் சிறை வைத்திருந்தாக சொல்லப்படுவதால் இக்கோட்டையை தான் ராவண கோட்டை என்று பலரின் நம்பிக்கையாக இருக்கிறது 



               சிகிரியா கோட்டை 


                    எண்கோண குளம்



பாறைகளுக்கு நடுவே செல்லும் படி






         சிங்க பாதம் : கோட்டை வாயில் 



                      இரும்புப் படிகள் 


             கோட்டையின் மேலே 











             கோட்டை மேல் உள்ள குளம்

                  கண்ணாடி சுவர் 

ஓவிய குகைக்கு செல்லும் சுருள் படி



                          ஆசன குகை 




                         பாம்பு குகை 



                   பிராமி கல்வெட்டு