Thursday, November 7, 2024

Book review

 BUDDHISM IN CHOLA NADU

Dr.B. JAMBULINGAM 

பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு நம் இந்திய நாடு . அவற்றுள் ஒன்றான புத்தமதம் புத்தரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது . சீனா , ஜப்பான் , இலங்கை ஆகிய நாடுகளில் இன்றும் பல மக்களால் பின்பற்றப்படும் புத்தமதம் , அசோகச் சக்கரவர்த்தியால் பின்பற்றப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட மதமாகும் . சோழ நாட்டில்  சோழர்கள் ஆட்சியின் போது புத்த மதம் எவ்வாறு விளங்கியது என்பதை விளக்குகிறது இந்நூல்  .

         சோழ நாட்டைப் பற்றிய அறிமுகத்துக்கு பின் புத்த மதம் எவ்வாறு சோழ நாட்டில் பரவியது என்பதை தெளிவாக விளக்குகிறது . புத்த மதத்தைப் பற்றி சங்க கால நூல்களில் வரும் குறிப்புகள் மற்றும் பல்வேறு புலவர்கள் கூறும் தகவல்களை வரிசைபடுத்தி  இருக்கிறார் ஆசிரியர் . சிலப்பதிகாரம்  ,மணிமேகலை , திருக்குறள் ஆகியவற்றுடன் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்படும் புத்தமதம் பற்றிய செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது . இராஜராஜன் சோழன் , இராஜேந்திர சோழன் மற்றும் பிற மன்னர்கள் புத்த விகாருக்கு கொடுத்த கொடையைப் பற்றிய செய்திகளுடன் தஞ்சை பெரிய கோயில் , தாராசுரம் ஆகிய சைவக் கோயில்களில் காணப்படும் புத்தரின் உருவத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது . 

        சோழ நாட்டில் எங்கெல்லாம் புத்தரின் உருவசிலைகள் இருக்கிறது என்பதையும்  , அந்த உருவத்தின் அமைப்பையும் விளக்குவதுடன் அச்சிலையை உள்ளூர் மக்கள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பதையும் தற்போது நடக்கும் வழிபாட்டையும் தெளிவாக விளக்குகிறார் . பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட சிலைகள் தற்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதையும் , அவர் நேரில் சென்று கள ஆய்வு செய்த சிலைகளின் தற்போதைய நிலை பற்றியும் குறிப்பிடுகிறார் . ஆசிரியர் இதில் குறிப்பிடும் ஊரில் நேரில் சென்று ஆய்வு செய்த போது அவருக்கு உதவியவர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருப்பது அவரின் சிறந்த பண்பை காட்டுகிறது . அழகிய புகைப்படத்துடன் மிகச் சிறந்த ஆய்வு நூலை எளிமையாக்கி  நமக்கு அளித்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் .