Tuesday, November 8, 2022

குண்டான்குழி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு, புதுச்சேரி.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் மதகடிப்பட்டு. தற்போது சிறு கிராமமாக தோற்றமளிக்கும் இவ்வூர் சோழர் காலத்தில் எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பதை இங்குள்ள கோயிலைக் கொண்டு நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சோழர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்களம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இதில் "ஜெயங்கொண்டான்" என்பது இராஜராஜ சோழன் பல நாடுகளை வென்றதாலும், கப்பற்படையை கொண்டு எண்ணாயிரம் தீவுகளை வென்றதாலும் வழங்கப்பட்ட சிறப்பு பெயர் ஆகும். ஜெயங்கொண்டான் என்னும் பெயருடைய சில ஊர்கள் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் உண்டு. திரிபுவனமாதேவி என்பது இராஜராஜனின் தேவியருள் ஒருவர். இதில் சதுர்வேதிமங்கலம் என்பது பிராமணர்கள் குடியிருப்பு பகுதியாகும். இதன் மூலம் இராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று என்பது புலப்படுகிறது.


இராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னரே இங்குள்ள கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. "திருகுண்டாங்குழி மகாதேவர் கோயில்" என அழைக்கப்படும் இவ்வாலயமானது, அடித்தளம் முதல் கலசம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட முழுக் கற்றளி ஆகும்.  மேற்கு பார்த்து அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் ஆவுடையார் காணப்படவில்லை, பாணம் மட்டுமே உள்ளது . தெற்கு பார்த்து அமைத்துள்ள அம்மன் சன்னதியில் அகிலாண்டேஸ்வரி அம்மன் வீற்றிருக்கிறார். சப்த மாதர்களுக்கு தனி சன்னதி உள்ளது . கோயிலின் கருவறை சதுரமாகவும் மேலே உள்ள கிரிவம் வட்டமாகவும் அதன் சிகரம் உருண்டையாகவும் உள்ளன. விமானத்தின் கிரிவ கோஷ்டத்தில்  வடக்கு  பிரம்மா, மேற்கு விஷ்ணு, தெற்கு தட்சிணாமூர்த்தி, கிழக்கு முருகன் என நான்கு புறமும்  அழகான சிற்பங்கள் அமைந்துள்ளன. கிரிவத்தில் இரண்டு நந்திகள் என எட்டு நந்திகள் அமைந்துள்ளன.  இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இராஜராஜன் சோழன் காலம் முதல் காலம் குலோத்துங்க சோழன் வரை அனைவரின் கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கிறது இக்கோயில்.  
 
"ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளிய திருக்கற்றளி" என்ற கல்வெட்டின் மூலம்  ராஜராஜ சோழனால் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டதை  நாம் அறிந்து கொள்ள முடிகிறது. முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியவரின் மெய்க்கீர்த்திகள் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்தி என்பது அரசனுடைய பரம்பரை அடைந்த வெற்றி, அம்மன்னின் ஆட்சி காலம், பட்டப்பெயர் முதலியவற்றை பாடல் வரிகளாக தெரிவிப்பது. பிற்கால சோழர் ஆட்சியில் தான் மெய்க்கீர்த்திகள் வடிவம் பெற்றன. ஒவ்வொரு அரசருக்கும் ஒவ்வொரு வகையான தொடர்கள் உண்டு . மெய்க்கீர்த்தியின் அடியைக் கொண்டே இந்த மன்னன் யார் என்று அறிந்து கொள்ள முடியும்.

கல்வெட்டுக்கள் :
மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள் :
1) முதலாம் ராஜராஜனின்  "திருமகள் போலப் பெருநிலச் செல்வி" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி பாடல் பொறிக்கப்பட்டுள்ளது.

2) முதலாம் ராஜேந்திரன் சோழனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர இருநில மடந்தையும் " எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும்,  முதலாம் ராஜாதி ராஜனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடை" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், இரண்டாம் ராஜேந்திரனின் "திருமாது புவியெனும்" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், வீர ராஜேந்திரனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரமே துணையாக" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், முதலாம்  குலோத்துங்க சோழனின் "திருமன்னி விளங்கும் பூமே லரி" எனத் தொடங்கும் அரிய மெய்க்கீர்த்தியும், விக்கிரம சோழனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது புணரப் புவிமாது" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. 

3)  முதலாம் இராஜராஜன் ( கி.பி 1012 ) காலத்தில் விஷ்ணு சேரியைச் சேர்ந்த பத்தங்கி திருவையாறு தேவ கிரமவித்தன் என்பான் திருகுண்டாங் குழி மகாதேவர்க்கு நந்தா விளக்கு கொண்றெரிப்பதற்காக 96 ஆடுகள் கொடுத்துள்ளான் என்பது கல்வெட்டு செய்தி.

பல குடிகள் சேர்ந்து வாழும் இடம் சேரி எனப்பட்டது. சோழமண்டல கரையில் புதிதாக தோன்றிய ஒரு சேரி புதுச்சேரி என்று பெயர் பெற்றது . இதுவே இன்று பாண்டிச்சேரி என்று திரிந்துள்ளது. பெருமாள் கோயிலில் பணிபுரியும் பிராமணர்களுக்கு தனியே ஏற்படுத்திய சேரிகளை விஷ்ணு பெயரிலேயே அமைத்துள்ளனர். இங்கு மொத்தம் 12 சேரில் சேரிகள் அமைந்துள்ளதாக தெரிகிறது. மதுசூதனச்சேரி, கேசவ சேரி, வாமனச்சேரி, மாதவ சேரி, நாராயணசேரி, கோவிந்த சேரி  திரிவிக்கிரமசேரி, ஸ்ரீதரசேரி, தாமோதரசேரி, பத்மநாபசேரி  ரிஷிகேஷ சேரி  விஷ்ணு சேரி என்பன ஆகும்.இக்கல்வெட்டில்  விஷ்ணு சேரியைக் சேர்ந்த பத்தங்கி திருவையாறு தேவ கிரமவித்தன் என்பவன்  மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள் கொடுத்துள்ளான் என்பது செய்தி. கோயில்களில் நந்தா விளக்கு இடைவிடாமல் தொடர்ந்து எரிப்பது வழக்கம் அதற்காக செலவுக்காக பெருமக்களின் பொறுப்பில் ஆடுகளை தானமாக வழங்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு விளக்குகள் எரிக்கபட்டன. 

4) முதலாம் இராஜராஜன்  காலத்தில் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையார் 13 பிராமணரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கிய நிலங்களை பனிரெண்டாம் தரத்தின் படி வரியிருக்க முடிவு செய்ததை குறிப்பிடுகிறது. அந்நாளில் நிலங்கள் அவ்வப்போது அளவிடப்பட்டு நிலத்தின் தரத்தை பொறுத்து, அதற்கு ஏற்ப நிலவரி விதித்தனர் .நிலத்தின் தரத்தை "தரப்பொத்தகம்" என்னும் பதிவேடு பாதுகாக்கப்பட்டு வந்ததை அறியலாம். கல்வெட்டின் படி நிலத்தை பன்னிரண்டாம் தரமாக கருதி வரி வசூலிக்கபட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

5 ) முதலாம் இராஜராஜன் காலத்தில் திருகுண்டாங் குழி மகாதேவருக்கு திருவமுதுக்கும், திருப்பலிக்கும்  ,திருவிழாக்கும் நிலங்கள் அளித்தமையை கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருவமுது என்பது கோமில்களில்‌ இறைவன் வழிபாட்டிற்‌கெனத்‌ தூய முறையில்‌ ஆக்கப்பெறும்‌ நிவேதன உணவு. கோயிலில் நடைபெறும் திருவிழா மற்றும் பூசையில் நிகழும் ஸ்ரீ பலிக்கும் நிலங்கள் கொடுத்ததை குறிப்பிடுகிறது.

6 ) முதலாம் இராஜராஜன் காலத்தில்  கோயிலில் சிவப்பிராமணர் கால் நந்தா விளக்கு எரிக்க ஏற்றுக்கொண்டதை மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

7) முதலாம் ராஜேந்திரன் (கி.பி 1015 ) திருக்குண்டாங்குழி பரமேஸ்வர சுவாமிகளுக்கு மதுசூதனச் சேரியைச் சேர்ந்த திருமிழலைக் கௌதமன் செட்டி விரட்டனான உத்தம நம்பி என்பான் நந்தா விளக்கொன்றெரிக்க 90 ஆடுகள் கொடுத்தமையை தெரிவிக்கிறது. இதில் மிழலை என்பது சோழர் காலத்தில் மாயவரம் பகுதியில் அமைந்த மிழலை நாட்டை குறிப்பதாகும் . தற்போது மிழலை என்ற ஊர் மாயவரத்தில் இருந்து 12 கால் தொலைவில் அமைந்துள்ளது.

8) இராஜேந்திரன் (கி.பி 1016) கோவிந்த சேரி ஆலந்தூர் காஸ்யபன் மகாதேவனான திருஞானசம்பந்தடிகள் என்பார் ஐம்பது நிறையுள்ள மூடியுடன் கூடிய மலையன் கெண்டி ஒன்றைத் திருக்குண்டாங்குழி மகாதேவருக்கு வழங்கியமை பற்றியும் சூரசூளா மணிச்சேரி வெள்ளிலைப் பாக்கத்து ஆடவல்லவன் தில்லையழகன் என்பான் வைத்த கால் நந்தா விளக்கு பற்றியும் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடும் கெண்டி என்பது குவளையின் உடற்பகுதியில் தூம்புகுழலுடன் அமைக்கப்பட்டது. இறைவழிபாட்டில் ஆகம விதிப்படி நீர் இறைக்க பயன்படுத்துவது.

9 ) இராஜேந்திர சோழன் ( கி.பி 1016 ) ஸ்ரீ கார்யந்திரித்துகின்ற கூட்டப் பெருமக்கள் சிவப்பிராமணர் நால்வருக்குத் திருவுண்ணாழிகையில் திருப்பணி செய்வதற்கு நிலமளித்த செய்தியை தெரிவிக்கிறது.

10) முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பூவம் என்பவள் வைத்த நந்தா விளக்கு பற்றிய ஒரு கல்வெட்டும் உள்ளது.

11) இராசாதி ராசன் காலத்தில் திருகுண்டாங்குழி மகாதேவர்க்கு தயிரமுது படைத்தமை பற்றியது.



12) முதலாம்  குலோத்துங்கன் (கி.பி 1075 ) கோயிலில் உள்ள சப்த மாதருக்கு  திருவமுது படைக்க பிராமண பெண்கள் சிலர் 45 பொற்காசுகள் கொடுத்ததைப் பற்றி கல்வெட்டு.

13) முதலாம் குலோத்துடன் (கி.பி 1114) ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி தேவருக்கு அமுதப் படைக்க சிவப்பிராமனர்கள் ஒப்புக்கொண்டு நெல்லை பெற்றுக்கொண்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.

14) விக்ரமன் (கி.பி 1026) திருக்குண்டாங்குழி மகாதேவருக்கு பொய்யா மொழி என்ற பெயரில் ஒரு நந்தனம் அமைக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

15) திருக்குண்டாங்குழி மகாதேவர்க்கு சீரீளங்கோ பட்டன் சந்தி விளக்கு வைத்ததை தெரிவிக்கிறது. திருக்கோயில்களில் ஆறு வேலைகளிலும், அதாவது ஆறு காலமும் வழிபாடு நிகழ்த்துவது சிறப்புடையது ஆகும் .  அதில் பகலும் இரவும் கூடும் வேளையில் ஏற்றப்படும் விளக்கு சந்தி விளக்கு ஆகும். சந்தி விளக்கு பெரும்பாலும் மாலையில் தான் ஏற்றப்படுகிறது, சில இடங்களில் காலையில் ஏற்றப்படுவதும் உண்டு. 

16) திருக்குண்டாங்குடி பரமேஸ்வர ஸ்வாமிகளுக்கு சிவப்பிராமணர்கள் இவ்வூர் கோதண்டராமச்சேரி திருமிழிலை வீற்றிருந்தான் பட்டன் பிராமணி ஆண்டமைச்சானி கொடுத்த 12  ஆடுகள் பெற்றுக் கொண்டு சந்தி விளக்கு எரிக்க   ஏற்று கொண்டதை குறிக்கிறது.

17) பெருங்குறிப் பெருமக்கள் கோயில் பண்டாரத்திலிருந்து 37 1/2 காசு பெற்றுக்கொண்டதோடு சில நிலங்களை விற்றுக் கொடுத்ததோடு வட்டியாக கோயிலுக்கு நெல் அளிக்கவும் ஒப்புக்கொண்டதை தெரிவிக்கிறது. பெருங்குறி பெருமக்கள் என்பது சதுர்வேதி மங்களத்தை அமைந்த ஊர் நிர்வாக சபை மற்றும் பிற சபைகளின்  உறுப்பினர்கள் ஆவர் . 

18) அடுத்தது  கிரந்தத்தில் சில கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. அவற்றில் அரசனின் ஆணைப்படி கொற்ற மங்கலத்தைச் சேர்ந்த நாராயணன் என்பான் குண்டாங்குழி கிராமத்தை நிர்வகித்து வந்ததை தெரிவிக்கிறது .

19) அடுத்து கோயிலில் நிவந்தம் பற்றியது. இதன் மூலம் வரும் வட்டியை கொண்டு உணவு படைக்கவும் தும்பை பூக்களால் மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 84 பெருமக்கள் கிராம காரியங்கள் செய்தாக  கல்வெட்டு தெரிகிறது.

20) ஒரு நந்தா விளக்ககெரிக்க 90 ஆடுகள் கொடுத்த செய்தியும், வானவன் மாதேவி நல்லூர் என்ற பெயரில் ஊர் உண்டாக்கி மக்களை குடியேற்றியதையும் குறிப்பிடுகிறது.

21) அடுத்து கோயிலுக்கு வெள்ளித் திருமேனி கோயிலுக்கு செய்து கொடுத்ததை தெரிவிக்கிறது. ஆனால் தற்போது வெள்ளித் திருமேனி அங்கு காணப்படவில்லை.

22) பாற்குளத்து விஷ்ணுதாசக்கிர பவித்தன் என்பான் கருவறை மூன்றாவது தளத்தையும் திருமண்டபத்தின் மூன்றாம் தளத்தையும் கட்டுவதற்கு பொன் கொடுத்ததோடு, காலோடு கூடிய தளிகை ஒன்றையும் அமுதுண்ணக் கொடுத்ததை குறிக்கிறது. தங்கத்தால் செய்யப்பட்ட நிவேதனத் தட்டு தளிகை என்பப்படும்.












5 comments:

  1. அருமையான வரலாற்றுக் கருவூலம் குறித்த செய்திகள்..!
    நன்றி சகோதரி.
    தங்கள் ஆய்வுகள் பல்கிப் பெருகிட உளமார்ந்த வாழ்த்துக்கள்.!!💐💐

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை, நன்றி mam.

    ReplyDelete
  3. அருமையான படங்கள் மற்றும் கல்வெட்டு செய்திகள்.. வாழ்க வளமுடன் மா

    ReplyDelete
  4. அருமையான தகவல் அக்கா.
    மிக்க பயனுள்ளது.

    ReplyDelete