Friday, February 26, 2021

கொடுமணல்

கொடுமணல்

              ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் வடகரையில் உள்ள கிராமம் தான் கொடுமணல் . இன்றைக்கு சின்னஞ்சிறிய கிராமமாக உள்ள இந்த ஊர் தான் சங்ககாலத்தில் மிகவும் பரபரப்பாக வெளிநாடுகளுடன் வாணிகம் செய்த ஊர்.

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் " கொடுமணம் பட்ட விணைமான் அருங்கலம்" என்று பாடப்பெற்றத்தையும் இந்த வணிக நகரத்தை தொல்லியல் அறிஞர் புலவர் ராசு கண்டறிந்ததைப் பற்றி முந்தைய பதிவில் கண்டோம். இனி தொடர்ந்து கொடுமணலின் சிறப்புகள் குறித்து காண்போம் . 

                               கொடுமணலின் காலத்தை அங்கு காணப்படும் ஈமச்சின்னங்கள் மற்றும் அகழாய்வு செய்த பின் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கின்றனர் . அவை

(1) கி.மு 500 இருந்து கி.பி. 100 வரை

 (2) கி.பி 100 இருந்து கி.பி 300 வரை 

இதில் முதலாம் காலத்தில் உள்ள ஈமச்சின்னங்களை பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக பகுக்கலாம் . 

                                     தொல்லியல் துறையால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இடங்கள் முதலாவதாக நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ள நத்தமேடு (வாழ்வியல் இடம்) அடுத்ததாக நத்தமேட்டிற்கு வடக்காக உள்ள ஈமக்காடு உள்ளிட்டவை ஆகும் . 

நாம் முதலில் இங்குள்ள ஈமக்காட்டினையும் அங்குள்ள ஈமச்சின்னங்கள் குறித்தும் ஒரு அடிப்படை விவரங்கள் அறிந்து கொண்டு, பின்னர் அகழாய்வு குறித்து பார்ப்போம் . 


பாண்டியன் நகரம் : 

பாண்டியன் நகரம் என்ற பகுதி தான் கொடுமணலில் உள்ள பெருங்கற்கால ஈமக்காடாகும் . இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட மிகப்பெரிய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருந்தன . இந்த ஈமச்சின்னங்களை அங்குள்ள மக்கள் பாண்டவர் வீடு அல்லது பாண்டியர் குழி என்றழைக்கின்றனர் . பாண்டவர் வீடு என்ற இந்த கல்வீடுகளில் பாண்டவர்கள் தங்கி இருந்தார்கள் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்  . ஆனால் அடிப்படையில் அவை ஈமக்குழிகளாகும். மாண்டவர்களை அடக்கம் செய்து அதன் மீது எழுதுப்பட்ட வீடு என்றும் அதுவே பின்னாளில் பாண்டவர் வீடு அல்லது பாண்டியர் வீடு என்றும் மருவியது . இன்றைக்கு இந்த பாண்டியர் வீடுகள் நிறைத்த இடம் பாண்டியன் நகரம் என்று பெயர்.  


கொடுமணல் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஒரு விளக்கம்.

பெருங்கற்காலம் :

பெரிய பெரிய கற்களை கொள்ளது ஈமச்சின்னங்களை உருவாக்கிய காலத்தை பெருங்கற்காலம் என்கிறோம் .பெருங்கற்காலம் என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய காலம் என்பது ஆய்வாளர்கள் கருத்து .  


பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஓர் அறிமுகம் :

1)கற்திட்டைகள் 

2)கல்வட்டம்

3) கற்பதுக்கைகள்

4)நெடுங்கற்கள்.


1)கற்திட்டைகள் :

                             இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.


2) கல்வட்டம் :

                              இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதை சுற்றி வட்டமாக குண்டு கற்களை வட்டமாக அமைப்பது கல்வட்டம் ஆகும் . 


3)கற்பதுக்கைகள் :

                              இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதை சுற்றி நிலமட்டத்திற்க்கு கீழே நான்கு பக்கமும் பலகை கற்களை நிறுத்தி , மேல் பக்கமும் பலகை கல்லை வைப்பது கற்பதுக்கை ஆகும் .


4) நெடுங்கற்கள் :

                                  இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதனருகில் உயரமான ஒரு கல்லை நேராக வைப்பது நெடுங்கற்கல் ஆகும் .

கொடுமணலில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் :

கொடுமணலில் உள்ள ஈமச்சின்னங்கள் பெரும்பாலும் கல்வட்டங்களுடன் அமைந்த கற்பதுகைகளும் சிலவற்றிற்க்கு நெடுங்கற்கள் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது . அடுத்து ஈமச்சின்னங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளை குறித்து தொடர்வோம் .






No comments:

Post a Comment