கொங்கு நாட்டின் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாக விளங்கும் பவானி ஆறும் மோயாறு ஆறும் கூடும் இடத்தில் உள்ளது தான் தனாயக்கன் கோட்டை இதுவே மருவி டணாய்க்கன் கோட்டை ஆனது .
கொங்கு நாட்டை ஆண்ட ஒய்சாளர்களின் கடைசி மன்னன் மூன்றாம் வீர வல்லாளத் தேவன் ( கி.பி 1292 - கி.பி 1311) .இவன் கொங்கு நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான் . அவன் சேனை தலைவனான பெருமாள் தண்டனாயக்கனுக்கு அவனுடைய வீரத்தையும் விசுவாசத்தையும் பாராட்டி பரிசாக கொங்கு நாட்டை கொடுத்தான் . தண்டநாயக்கன் இங்கு கோட்டை அமைத்தான் . இவன் இங்கு கோட்டை அமைப்பதற்கு முன்பாகவே இங்கு சோமேஸ்வர மங்களாம்பிகை கோயிலும் கோட்டையும் இருந்ததாக கல்வெட்டு கூறுகிறது . இந்த கோயிலின் முற்கால பெயர் தான் தோன்றீஸ்வரமுடையார் கோயில் என்றும் இவ்வூருக்கு துரவலூர் என்றும் இங்குள்ள முற்கால கோட்டைக்கு நீலகிரி சாதாரணன் கோட்டை என்றும் அழைக்கப்பட்டது என்ற விபரம் செதுக்கப்பட்டுள்ளது .
மற்றொரு கல்வெட்டு வீரவல்லாளன் 3 ( கி.பி.1292 - கி.பி1341) பற்றியும் மாதப்ப சிங்கய்ய தணாய்க்கன் என்பவன் இரண்டு ஊர்களை கோயிலுக்கு கொடை ஆக கொடுத்த விவரம் பற்றியும் கூறப்பட்டுள்ளது . இவன் ஆட்சி காலத்தில் முகலாயர்கள் இங்கு படையெடுத்து கொங்கு நாட்டை பிடித்தனர்.அதன் போரின் போது இந்த கோட்டையும் சேதப்படுத்தப்பட்டது . மீண்டும் ஒய்சாலர்கள் மொகலயர்களை வென்று இந்த கோட்டையைக் கைப்பற்றி செப்பனிட்டனர் .
பின்பு அலாவுதீன் கில்ஜீயின் படை தளபதியான மாலிக்காபூர் ஒய்சாலர்களை வென்று டணாய்க்கன் கோட்டையை கைப்பற்றினான். அதன் பிறகு இக்கோட்டை வெகுநாள் பரமரிப்பு இல்லாமல் இருந்தது.
ஒய்சாலர்களின் வீழ்ச்சிக்கு பிறகு ராயர்கள் ஆட்சியில் , ராயர்கள் நேரடி ஆட்சி செய்ய இயலாது நாயக்கர்களை நியமித்து ஆட்சி செய்தனர் . திருமலை நாயக்கர் காலத்தில் இக்கோட்டை மீண்டும் பழுது பார்க்கப்பட்டது .
இக்கோட்டை இவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையிலும் நிலைத்து நிற்க காரணம் இக்கோட்டை ஆனது பெருவழி பாதையில் அமைந்தது தான் காரணம் . கேரளாவில் இருந்து கர்நாடக செல்லும் மூன்றாவது பெருவழி மோயாற்று கரைகளின் வழியாக சென்று மைசூரை அடைகிறது . இவ்வழி மேட்டுப்பாளையம் , டணாய்க்கன் கோட்டை , தெங்குமராட்டா, தாளவாடி ,சாம்ராஜ்நகர் வழியாக மைசூரை அடைகிறது .
இப்பெருவழியில் அமைந்த இக்கோட்டையை பிற்காலத்தில் திப்புசுல்தான் பயன்படுத்தியதோடு அல்லாமல் இப்பெருவழியே புதுப்பித்ததால் சுல்தான் ரோடு என்றும் குறிப்பிடப்படுகிறது . திப்பு வீழ்ச்சிக்கு பின் கொங்குநாடு கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது . அதன்பின் இக்கோட்டை பராமரிப்பு இன்றி போயி்ற்று .
1947 ல் பவானி சாகர் அணை கட்டப்பட்டதால் இந்த கோட்டை நீரில் மூழ்கியது . இங்கு இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி பவானி சாகர் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது . இது தற்போது அணையில் நீர் இல்லாத காலத்தில் சென்றால் பார்க்க முடியும் .