"பாறு கழுகுகளுடன் ஒரு நாள் " என்ற நிகழ்வு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி (செப்டம்பர் முதல் சனி )பாறு கழுகுகள் தினத்தன்று நடைபெற்றது . தமிழக வனத்துறையும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அருளகமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது . பாறு கழுகுகள் பற்றி எந்த ஒரு சிறு அறிமுகமும் இல்லாமல் கலந்து கொண்ட எனக்கு அங்கு வந்த சிறப்பு விருந்தினர் திரு ரவீந்திரன் நடராஜன் , அருளகம் பாரதிதாசன் மற்றும் வன அலுவலர்கள் பாறுகள் பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்தனர் . பாறு கழுகுகள் என்றால் பிணந்தின்னி கழுகுகள் என்று மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களும் அவைகளால் காடுகளுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் அவைகள் ஏன் வேகமாக அழிந்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டோம் . காலை 7 மணிக்கு பவானிசாகர் அணையின் செக்போஸ்ட் அருகே இருந்து தொடங்கி தெங்கு மராட்டா வனப்பகுதியின் உள்ளே எங்களை அழைத்துச் சென்று அங்கு பறந்து கொண்டிருந்த பாறுகழுகுகளை நேரில் காட்டியதுடன் அவற்றின் வகைகள் பற்றியும் அவற்றால் காடுகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கமாக கூறினர் . இந்நிகழ்ச்சியில் செவிக்கு மட்டும் உணவளிக்காமல் காலை 11 மணி அளவில் சுவையான சுண்டலும் சுக்கு டீயும் வழங்கியதுடன் நிறைவான மதிய உணவும் அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியின் இறுதியில் பாறு கழுகளை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் . நிகழ்வுக்கு சென்றதால் பாறு கழுகுகளை பற்றி நான் தெரிந்து கொண்டவையை கட்டுரையாக காண்போம் .
பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வினை இயல்பாக ஏற்று சிறப்பாக வாழ்ந்தனர் . வீரமும் , காதலும் , கொடையும் , நீதியும் மட்டுமின்றி சுற்றுச்சூழல் அமைப்பையும் போற்றி வாழ்ந்தனர் . நிலங்களை நான்கு வகையாக பிரித்து முல்லை மருத நிலத்தின் பண்புகள் மாறுவதை பாலை என்று வகைப்படுத்தி , ஐவகை நிலங்கள் ஆக்கினர் . ஐவகை நிலங்களுக்குரிய பறவைகள் விலங்குகள் மரங்கள் செடிகள் கொடிகள் என தனித்தனியே வகுத்தனர் . கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பட்டியலிட்ட 96 பூக்களைப் பற்றி நாம் அறிவோம் . இவை போல பல விலங்குகள் பறவைகள் பற்றிய பல அறிவியல் உண்மையை சங்க பாடலில் இடம் பெற்றுள்ளன . இவற்றில் பிணந்தின்னும் கழுகுகள் பற்றி சங்க நூல்களில் கூறப்பட்டவை பற்றியும் தற்போது அவற்றின் நிலைமையையும் இங்கு காண்போம் .
சங்க இலக்கியத்தில் போர் பற்றிய வர்ணனைகளில் தவறாமல் கழுகும் பருந்தும் இடம்பெற்றிருக்கின்றன . சங்க இலக்கியத்தில்
*பருந்து பசி தீர்க்கும் நற்போர்த்
திருந்து வேல் நாகற் கூறினர் பலரே*
புற179
பிணத்தை தின்று வாழும் பருந்திற்கு போர்க்களத்தில் நல்ல விருந்து கிடைக்கும் அல்லவா . பருந்தின் பசியாருவதற்காகவே போர்கள் நடைபெற்றனவாம் . காலைக்கிழவன் நாகன் என்ற தலைவனை பருந்தின் பசி தீர்க்கும் நல்ல போரை செய்யும் என்று வடநெடுதத்தனார் பாடுகிறார்.
சங்க இலக்கியத்தில் இதுபோன்று பாறு கழுகுகளைப் போற்றி பல பாடல்கள் இடம் பெற்றுள்ளது . இவ்வாறு போற்றி பாடப்பட்ட பல உயிரினங்களின் தற்போதைய நிலை தான் என்ன ? தற்போது உள்ள மனிதன் சுயநலத்துக்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களை அறிந்தும் அறியாமலும் செய்வதால் , பல உயிரினங்கள் அழியும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளான் .
இந்தியாவில் பல்வேறு வகை ஊனுண்ணும் பறவைகள் உள்ளன . வல்லூறுகள் , பருந்துகள் , பாறுகழுகுகள் (பிணந்தின்னி ) ஆகியவை இவற்றில் அடங்கும் . வெளித்தோற்றத்தை வைத்து இவற்றை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் . மற்ற பறவைகள் போல இவற்றுக்கு தலையிலும் கழுத்திலும் சிறகுகள் இருக்காது . கண் மற்றும் மூக்கின் அபார சக்தியால் இரையை துல்லியமாக கண்டறியும் ஆற்றல் பெற்றது . வலிமையான அலகும் , குத்தி கிழிக்கும் கூர்மையான நகங்களுடன் காணப்பட்டாலும் இவைகள் பகிர்ந்து உண்ணும் குணமும் கூட்டமாக வாழும் பண்பும் கொண்டவை . உயரமான மரங்களிலும் (மருது மரம் ) செங்குத்தான பாறை முகடுகளிலும் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டும் இயல்புடையது . இவை சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்தாலும் இது வருடத்திற்கு ஒரு முட்டையை இடும் , குஞ்சு வளர்ந்து அது இனப்பெருக்கம் செய்ய நான்கிலிருந்து ஏழு வருடங்கள் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழும் பறவை அதே போல் ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டையையே இடும் அதை 60 நாட்கள் அடைகாக்கும் . முட்டையை அடைகாக்கும் போது ஆண் பெண் இரண்டும் மாறி மாறி அடைகாக்கும் . இப்பறவை மனிதனிடம் மிகவும் விலகியே வாழும் எனினும் இவை உணவுச்சங்கலிகளில் மிக முக்கியமானவை . இவற்றால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இவை இல்லாவிட்டால் என்னவாகும் என்பதை பற்றி காண்போம் .
*இயற்கை துப்புரவாளர்கள்* என்று போற்றப்படும் பாறு கழுகுகள் அதிகம் சிறகடிக்காமலே உயரமாக பறக்கும் ஆற்றலை பெற்றது . வானத்தில் வட்டமிட்டுவாறே எங்காவது பிணங்கள் இருக்கின்றனவா என்று நோட்டம் விட்டவாறு பறக்கும் இவை , சுமார் 7 கிலோமீட்டர் தொலைவு தூரம் வரை மேலிருந்து இரையை பார்க்கும் ஆற்றலே பெற்றது . இவை உயிரோடு உள்ள எவற்றையும் வேட்டையாடுவதோ உண்பதோ இல்லை , பெரும்பாலும் அழுகத் தொடங்கிவிட்ட பிணங்களிலேயே உணவாக கொள்ளும். இறந்த விலங்குகளின் உடல்களில் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்தையும் இவை தின்று விடுவதால் காடுகளில் உள்ள மற்ற விலங்குகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கிறது . இயற்கையாகவே அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியால் இவைகள் தொற்று நோயால் இறந்து கால்நடைகள் உண்டு , தொற்று மற்ற கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்கிறது . இறந்த கால்நடைகளை நான்கிலிருந்து 5 மணி நேரத்தில் முழுமையாக தின்று முடித்து விடும். இவை சாப்பிட்டவுடன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள நன்கு குளிக்கும் . காட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும் . இப்பாறுகழுகின் வகைகள் பற்றி காண்போம் .இந்தியாவில் ஒன்பது வகையாக பாறு கழுகுகள் காணப்படுகின்றன . அவை
மஞ்சள் முகப்பாறு ,செம்முகப் பாறு , வெண் முதுகு மாறு , கருங்கழுத்துப் பாறு , வெண் கால் பாறு ,வெண் தலை பாறு , இமாலயப்பாறு , ஊதா முகப்பாறு , தாடிப் பாறு . அவற்றில் தமிழகத்தில் நான்கு வகைகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன . அதிலும் மாயாறு , முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் மாறு கழுகுகளின் முக்கிய வாழ்விடங்கள் ஆகும். தமிழகத்தில் காணப்படும் மாறு கழுகுகள் பற்றி காண்போம் .
1)மஞ்சள் முகப்பாறு (Egyptian vulture) :
திருக்கழுக்குன்ற பாறு , நோண்டிக் கழுகு , கோடாங்கி கழுகு , மஞ்சள் திருடி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது . இவற்றின் முகம் மற்றும் வளைந்த கூரிய அலகு மஞ்சள் நிறத்திலும் ,இறகுகள் அழுக்கடைந்த வெண்ணிற நிறத்திலும் காணப்படுகிறது . இவை தற்போது பேரழிவுக்கு ஆட்பட்டுள்ளது . உலக அளவில் இவற்றின் எண்ணிக்கை நிறைய இருப்பினும் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளன . தமிழகத்தில் திருக்கழுக்குன்ற கோயிலில் பல நூறு ஆண்டுகளாக இரண்டு கழுகுகள் வந்து பிரசாதத்தை உணவாக உண்டு போனதாக சொல்லப்பட்ட கழுகு மஞ்சள் முகப்பாறு ஆகும் .
2)செம்முகப்பாறு (Red headed vulture) :
எருவை, ராஜாளி என்றும் அழைக்கப்படுகிறது . பாண்டிச்சேரி கழுகு என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு. இதன் உடல் மற்றும் கழுத்துப்பகுதி செம்மை நிறத்திலும், மார்பில் உள்ள இறகுகள் வெண்மை நிறத்திலும் உடம்பில் உள்ள இறகுகள் கருமை நிறத்திலும் காணப்படும். இது உயரமான மரத்தில் கூடுகட்டி வாழும் . இறந்து போன விலங்குகளின் கடினமான தோலை தன்னுடைய அழகால் குத்தி கிழிக்கும் வகையில் வலுவான அழகுடன் காணப்படும் . இதுவும் தற்போது அழியும் நிலையில் உள்ளது , தமிழகத்தில் 12 கழுகு மட்டுமே எஞ்சி உள்ளது .
3)வெண்முதுகுப் பாறு White rumped vulture :
கருத்த உடலும் முதுகுப்பகுதியில் வெள்ளை நிறமும் கொண்டு காணப்படும் இவை பறக்கும் போது முதுகுப்பகுதியில் உள்ள வெள்ளை நிறம் தெளிவாக தெரியும் . கூர்மையான அலகு மிகவும் அழிவு நிலையில் காணப்படும் இக்கழுக்கானது சுமார் 160 மட்டுமே தமிழகத்தில் காணப்படுகிறது .
4)கருங்கழுத்துப் பாறு long billed vulture Indian vulture
இதன் தலைப் பகுதியும் கழுத்துப் பகுதியும் கருமை நிறத்திலும் உடற் பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
தமிழகம் எங்கும் காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது பார்ப்பதே அரிதாகி விட்டது . இப்படியான பேரழிவுக்கான காரணங்களை காண்போம் . நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவற்றுக்கு கொடுக்கப்படும் வலிப்போக்கி மருந்துகளில் கலந்துள்ள டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், புளூநிக்சின், நிமிசுலாய்ட்ஸ் ,கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகள் கால்நடைகளின் உடல் நலத்திற்கு பலனளிக்காமல் அவை இறந்த நேரிடுகிறது . இறந்த கால்நடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான போடப்பட்டு அதனை இக்கழுகுகள் உண்பதால் அவற்றிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவை இறக்கின்றன . அதுமட்டுமின்றி சிறுத்தைக்கு அஞ்சி இறந்த கால்நடைகளின் மீதும் நஞ்சு பூசுவதாலும் எதிர்பாராமல் இவை இறக்க நேரிடுகிறது . இவை மட்டுமல்லாமல் காட்டுத்தீ , காடழிப்பு , முக்கியமாக இப்பறவை கூடு கட்டும் நீர்மருது மரம் அழிப்பு இப்படியான பல காரணங்களால் இவற்றின் பேரழிவுக்கு நாமே காரணம் என்பதை நாம் உணர வேண்டும் . கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு மாற்றாக மெலாக்சிகம், டோல்பினாமிக் ஆசிட், சித்த, ஆயுர்வேதா, ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தவேண்டும் . காட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் இறந்த கால்நடைகளை புதைக்காமல் அதனை கழுகளுக்கு உணவாக வழங்க வேண்டும் . உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்ற இப்பாறு கழுகுகளை பாதுகாப்பது நம் கடமை ஆகும் . இவற்றை காக்க தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் அருளகம் அமைப்பின் பாரதிதாசன் ஐயா அவர்களுக்கும் , சுந்தரி, ரேவதி, சந்தோஷ் மற்றும் ஏனையோருக்கும் எனது அன்பும் நன்றியும் .

















