மலர்கள் என்றாலே அழகு தான் . மலர்களின் அழகை இரசிக்காதவர்கள் எக்காலத்திலும் இல்லை . பெண்கள் தாங்கள் மலர் சூடி மகிழ்வதைப் போல இறைவனுக்கும் மலர் சூட்டி மகிழ்ந்தனர் . இவ்வாறு இறைவனுக்கு சூட்டும் மலர்களை தொடுக்க கோயில்களில் உள்ள இடம் தான் திருப்பூப்பலகை .
இறைவனுக்கு பூ நிவந்தங்கள் செய்ய கோயிலுக்கு அருகில் நந்தவனங்களை அமைத்து, அங்கு பல்வேறு மலர்ச் செடிகளை பயிரிட்டனர் . கோயில் நந்தவனங்களில் சேகரித்த பூக்களை திருப்பூ மண்டபத்தே சேர்த்தனர் . அங்கு கோயில் பணியாளர்கள் மலர்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் அளந்தும் எண்ணிக்கையிட்டும் தொடுத்தனர் . பூக்களை மலர்மாலையாக தொடுக்கப் பயன்படுத்தப் பட்ட கற்பலகையை திருப்பூப்பலகை என்ற பெயரில் அழைத்தனர் .
பல கோயில்களில் இதற்கு தனியே இடம் ஒதுக்கி கல்லால் பலகையும் அமைக்கப்பட்டு உள்ளது . இக்கற்பலகை வழ வழப்பாகவும் கல்வெட்டுடனும் காணப்படுகிறது . சில இடங்களில் சிற்ப வேலைப்பாடுடன் காணப்படுகிறது . இப்பலகையிலோ அல்லது தனித்தோ மலர் கட்டும் நார் நனைப்பதற்கு தேவையான நீர் நிரப்பப் சிறு கற் குழிகளும் அமைந்து காணப்படுகின்றது . இப்பலகையை சுற்றி நாற்புறமும் பூக்கட்டும் பணியாளர்கள் அமர்ந்து பூக்கட்டுவதற்கு ஏற்ப கல் இருக்கைகளும் இருக்கின்றன .
திருப்பூர் மாவட்டம், கொழுமம் என்ற இடத்தில் அமைந்த பூப்பலகை கல்வெட்டுடன் உள்ளது . அதில் உள்ள கல்வெட்டாவது
" ஸ்வஸ்தி ஸ்ரீ ஆளுடையார் விகேசுவர
தேவரான விசையாலராயர்
இட்ட திருப்பூப் பலகை "
என்று காணப்படுகிறது . கி. பி 13 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.
No comments:
Post a Comment