Showing posts with label கர்நாடக கோயில்கள். Show all posts
Showing posts with label கர்நாடக கோயில்கள். Show all posts

Thursday, February 11, 2021

கர்நாடகா மாண்டியமாவட்டம் பன்னூர்

ராஜராஜசோழன்கல்வெட்டுகள்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள தொடர்பு  தொன்மையானது. தஞ்சையை ஆண்ட சோழர்கள்  கர்நாடக பகுதியின் மீது படையெடுத்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர் . சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் அங்கு ஆட்சி செய்துள்ளனர் .  அங்கு சோழர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் , கன்னடம் என இரு மொழிகளிலும் காணப்படுகின்றது . 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள பன்னூர் என்னும் ஊர் முதலில் வன்னியூரான  ஜானார்த்தன சதுர்வேதி மங்கலம்  என்றும்  , பின்பு  விஜயநகர பேரரசு காலத்தில்  வாகினிபுரம்  என்றும் அழைக்கப்பட்டுள்ளது . 

   மைசூரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் ஹனுமந்தீஸ்வரா  என்னும் கோயில் உள்ளது . இக்கோயில்  இப்பகுதியின் மிகப்பழமையான கோயில் ஆகும் . இப்பகுதி முதலில் கங்கர் வசம் இருந்தது போது   ஸ்ரீ புருசா என்னும் கங்கமன்னரால்  இங்கு ஒரு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது . மூலவர் பகுதி மட்டும் கட்டப்பட்டு இருந்த இக்கோயில் , ராஜராஜ சோழரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள கன்னட கல்வெட்டில் ராஜராஜ சோழரது மெய்க்கீரத்தி ஆன "திருமகள் போல்" என்று ஆரம்பிக்கும் மெய்கீர்த்தி ஏழு வரிவரை உள்ளது . இவற்றுடன் ராஜராஜசோழன் இக்கோயிலின் திருமுற்றம் கட்டுவதற்காக நிலம் கொடையாக கொடுத்த செய்தியும் உள்ளது .   மகாஜன சபையோருக்கும் தத்தனூர் வணிகர்களுக்கும் கோயில் கட்ட நிலம் கொடையாக கொடுத்த செய்தி  தமிழில் உள்ளது .  விஷ்ணுவர்தன் கொடை  கொடுத்த செய்தி கன்னட மொழியில் உள்ளது . அக்கல்வெட்டில் "வடகரை நாட்டு வன்னியூரான ஜனார்த்தன சதுர்வேதிமங்கலம்" என்று இவ்வூர் குறிப்பிடுகிறது . இங்கு கங்கர்கள் , சோழர்கள் , ஹொய்சளர்கள் , விஜயநகர பேரரசு , மைசூர் உடையார்கள் ஆகியோரின் கல்வெட்டுக்கள் உள்ளன . தற்போது இக்கோயில் மிகவும் பராமரிப்பு இல்லாமலும் கல்வெட்டுகள் அனைத்தும் புதைந்த நிலையில் சிதைக்கப்பட்ட நிலையிலும்  உள்ளன . இக்கோயிலின் கல்வெட்டு செய்திகளை  மைசூர் ஆவணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் .













Wednesday, February 10, 2021

ஹொய்சாளர் மல்லிகார்ஜுனகோயில் மாண்டியா கர்நாடக basaralu

ஹொய்சாளர் அல்லது கோசலர் என்று அழைக்கப்படும் ஹொய்சாளர்கள்  தென்னிந்தியாவின் முக்கிய பேரரசுகளில் ஒன்றாகும் .  இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்த மலை நாட்டைச் சார்ந்தவர்கள் . 

 மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்குப்பின் நிருபகாமன் (கி.பி 1022 - 1040) கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் பேலூரில் , கோசலை மரபை தோற்றுவித்தார் . அவரை அடுத்து வந்த ஹொய்சாள மன்னன் வினயாதித்தன் தலைநகரை பேலூரில் இருந்து ஹளேபேடு  என்னும் இடத்திற்கு மாற்றினார் . இவர்கள் வழிவந்த ஹொய்சாளர்  மன்னன் வீர நரசிம்மர் கர்நாடகம் மாநிலம் முழுவதும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார் . இவர்கள் தமிழகத்திலும் பல பகுதிகளில் ஆட்சி செய்து உள்ளனர் . தமிழ் கல்வெட்டுகள் இவர்களை போசாளர்கள் என்று குறிப்பிடுகிறது . 

          மாண்டிய மாவட்டத்தில் உள்ள பஸ்ரலு (Basaralu) இன்னும் சிறிய கிராமம் நாகமங்களா (Nagamangala) என்னுமிடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாண்டியாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது . 2ம் நரசிம்மரின் தளபதியான ஹரிஹர தனநாயக அவர்கள் கட்டிய மல்லிகார்ஜுனா கோயில் ஒன்று இங்கு உள்ளது . இக் கோயில் ஹொய்சாளர்களின்  தனித்தன்மையுடன் காணப்படுகிறது.  


இக்கோயின் நுழைவாயில் கூடத்தின் இருமருங்கிலும் இரண்டு யானைகள் அமைந்துள்ளன . கருவறை முன் மண்டபம் பல தூண்களுடன் காணப்படுகிறது .  உயரமான மேடையின் மீது கோயில் கட்டப்பட்டு இருக்கின்றது . இக்கோயில்களில் சுவர்களில் நரசிம்மர் , பைரவர் நடனமாடும் சரஸ்வதி , மன்மதன் ரதி ,  காலபைரவர் , சிவயோகி, பலராமன் , நான்கு முக பிரம்மா பிரம்மா , நடனமாடும் பைரவா ஆகிய சிற்பங்கள் உள்ளன . இக்கோயில்களின் சுவர்களில்  அடுக்கடுக்காய் காணப்படும் இச்சிற்பங்கள்  தனித்தன்மையுடன் விளங்குகிறது . அடிப்பகுதியில் யானைகள் குதிரைகள் யானைகள் போன்றவற்றின் அணிகளும் உருவங்களும் காணப்படுகின்றன . ராமாயணம் , மகாபாரத காட்சிகளும் விவரிக்கப்பட்டுள்ளன .  இக்கோயிலில் உள்ள தூண்கள் அனைத்தும் வட்ட வடிவில் காணப்படுகின்றன . இக்கோவிலின் உள்ளே சப்தமாதர் சிலைகள் அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது .  இந்தியாவிலுள்ள  கோயில்கள் அனைத்திலும் நுணுக்க வேலைப்பாட்டுக்கு சிறந்த காணப்படுவது ஹொய்சாளர் கோயில்களாகும் .

























Arethippura ; Doddabetta , Chikkabetta Mandyadistrict , Karnataka

கர்நாடக மாநிலம் , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் அரெதிப்புரா (Arethippura)  . இது மத்தூரில்   இருந்து 22km தொலைவில் உள்ளது . இவ்வூர் சமணர்களின் புனித தலங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கி இருக்கிறது  . இங்கு தொட்டபெட்டா  (Doddabetta ) ,  சிக்கபெட்டா (Chikkabetta ) அல்லது கனககிரி என இரண்டு மலைகள் உள்ளன . 


தொட்டபெட்டா  மலையின் உச்சியில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பாகுபலி  சிலை (கி.பி 843 )ஒன்று நின்ற நிலையில் இருக்கிறது .  இது சரவணபெலகுளாவில்  ( கி. பி 973 )உள்ள பாகுபலி சிலையை விட பழமையானதாக கருதப்படுகிறது . இங்குள்ள கல்வெட்டுகளின் படி இது கங்கர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் பின்னர் ஹொய்சளர் ஆட்சியில் இது சிறந்து விளங்கி இருக்கிறது  .  விஷ்ணுவர்தன்  , சமண கோயிலுக்கு திப்பூர் (Tippur )  என்னும் கிராமத்தை தானமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .  இது சமணர்களின் முக்கிய தலமாக அப்பொழுது விளங்கியிருக்கிறது  . இங்கு உள்ள பாகுபலி சிலை  சுமார் 10 அடி உயரம் கொண்டது . இது தென்னிந்தியாவின் பழமையான சிற்பமாக கருதப்படுகிறது . 


சிக்கபெட்டா என்னும் மலையில் இடிந்த நிலையில் பழைய சமணக்கோயில் இருந்து இருக்கிறது .  1970ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளபட்டபோது இங்கு  சமணக்கோயில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இங்கு 12 கோயில்கள் இருந்திருக்கலாம் என்றும்  இதில் ஐந்து கோயில்கள் தெற்கு நோக்கியும் , மூன்று கிழக்கு நோக்கியும் , இரண்டு மேற்கு நோக்கியும்,  இரண்டு வடக்கு நோக்கியும்  இருந்ததாக தெரிகிறது .   அகழ்வாராய்ச்சியின் போது ஆதிநாதர் ,  பாகுபலி ,சரஸ்வதி ,  தீர்த்தங்கர்கள் சிலைகள்  மற்றும் தீர்த்தங்கர்கள் உள்ள தூண்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது . இங்கு உள்ள பாலியின்   அருகே உள்ள பாறையில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . இது ஒரு காலத்தில் சமணர்களின் புனித தலமாக விளங்கி இருக்கிறது  என்பதற்கு இதுவே சான்று .














Monday, December 14, 2020

கங்கர்கள்கோயில் , நரசமங்களா ராமேஸ்வராகோயில்

கர்நாடக மாநிலம் , சாம்ராஜ் நகருக்கு அருகில் உள்ளது நரசமங்களா என்னும் சிற்றூர் . இங்கு உள்ள  "ராமேஸ்வரா கோயில்" 9ம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பழமையான  கோயில் ஆகும் . கங்கர்கள் 9ம் நூற்றாண்டில் தலைக்காட்டை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கர்கள் கோயிலில் இக்கோயில் மிகப்பழைமையானது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தமிழக கோவில் கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது  . மிக அகலமான கருவறையும் அதைவிட சற்றே குறுகலான அர்த்தமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறை மேல் அமைந்துள்ள விமானத்தில் மிக அழகான சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மிக அழகிய வேலைபாடுடன் நான்கு அடி உயர  சப்தமாதர் சிலைகள் உள்ளன . ( அறை பூட்டி இருந்ததால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை ) . இக்கோயிலின் உள்ளே விதானத்தில் ஒரு சதுரப்பலகையில் நடுவில் நடராஜரும் அதனைச் சுற்றி எண்திசை பாலகர்களும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. கங்கர்களுக்கே உரிய தனித்துவமான தூண்கள் உள்ளன. இதில் ஒரு தூணின் மேல்பகுதியில் கங்கமன்னர் அவர் மனைவியுடன் அமர்த்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது .

கோவிலின் வெளிப்புற வளாகத்தில் பழமையான கன்னட மற்றும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன .  ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளான் இக்கோயிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு உள்ளது . இக்கோயின் அமைப்பு புள்ளமங்கை கோயில் மற்றும் சீனிவாசநல்லூர் கோயிலை ஒத்து காணப்படுகிறது .