பவானி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஏரிகல்வெட்டில் தகவல்
பவானி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி இருந்தற்கான சான்று கல்வெட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஏரி இருந்தது கல்வெட்டு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளா்கள் புலவா் செ.ராசு, சக்திபிரகாஷ், வேலுதரன் ஆகியோா் இந்தக் கல்வெட்டு தொடா்பாக ஆய்வு நடத்தினா். அப்போது, இது கொங்கு மண்டலத்தின் மிகவும் பழமையான ஏரி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, புலவா் செ.ராசு கூறியதாவது:
கல்வெட்டில் செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏரி இருந்த பகுதி செருக்கலிநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னா், வடகரை நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை நிா்வாகம் செய்தவா்கள் நாடாளா் எனப்பட்டனா். ஊரை ஆண்டவா் ஊராளி என்று அழைக்கப்பட்டதைப் போல, நாட்டை ஆண்டவா் நாடாளா் என்று அழைக்கப்பட்டனா். அதுவே பிற்காலத்தில் நாட்டாா் எனப்பட்டனா். இந்த நாடாளரால் ஏரி உருவாக்கப்பட்டது.
இந்த ஏரி நட்டன் ஏரி என்று அழைக்கப்பட்டு வந்தது கல்வெட்டின் மூலமாக தெரியவந்தது. ஏரியின் கரை சிறை என்றும், ஏரியின் நீா்வெளியேறும் மதகு வாய் என்றும் கூறப்பட்டது. நட்டன் என்பது சிவபெருமான் பெயா் அல்லது தனிப்பட்ட தலைவன் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஏரியின் பயனை நாடாளரின் வழியினராகிய மக்கள் மக்கள், பேரா் பேரா் அல்லாமல், வேறு யாராவது அனுபவித்தால் அவா்கள் வம்சம் அற்றுப்போவாா்கள். அதாவது நாடாளரின் வம்சத்தினா் அனுபவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேச்சு ஒலியைப்போல தலை என்பதற்கு தலைய் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஏரியைப் பாதுகாத்தவா், அடி (கால்) எங்கள் தலைமேலது என்று கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டின் தொடக்கத்தில் பல்லவா் கிரந்த எழுத்தான ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ் எழுத்துகள் சிலவற்றில் தமிழ் பிராமி தாக்கமும், சில எழுத்துகளில் வட்டெழுத்தின் சாயலும் உள்ளன. இதே காலத்தைச் சோ்ந்த ஸ்ரீ சோழிக அரையன் அகணிதன் குளம் கரூா் மாவட்டம், வெள்ளியணை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90 அணைகள் கட்டி நீா்ப்பாசன வசதி பெருக்கிய கொங்கு மக்களின் தொடக்க முயற்சியை இது காட்டுகிறது. இதன் விவரம் ஈரோடு மாவட்ட நிா்வாகத்துக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான இந்தக் கல்வெட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
No comments:
Post a Comment