Showing posts with label கொங்கு குல கோயில்கள். Show all posts
Showing posts with label கொங்கு குல கோயில்கள். Show all posts

Monday, March 1, 2021

அகத்தூர் அம்மன் , காலிங்கராயர் கோயில்

கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார்  . 


தாங்கள் செய்த அறச்செயலை தானோ தன் சந்ததியினரோ பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணி அணையையும் கால்வாயையும் நாட்டுடமை ஆக்கி விட்டு , "இனி நானோ என் வழிவந்தவர்களோ இந்த கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம்" 

 என்று சத்தியம் செய்துவிட்டு தான் வாழ்ந்த வெள்ளோட்டை விட்டு காவடிக்கா நாட்டில் தன் மாட்டுப் பட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றுக் குழிகள் (ஊத்துக்குளி) இருந்த இடத்தில் புது ஊர் ஏற்படுத்தி அங்கு சென்று வாழ்த்தார் . அந்த இடம் தற்போதைய பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி ஆகும்.


அங்கு அவர்களுக்கும் அந்த ஊர் மக்களை காக்கும் வண்ணமும் அங்கு ஒரு கோயில் கட்டினார் . அது தான் அகத்தூர் அம்மன் . இது தான் காலிங்கராயர் குடும்பத்தின் குலதெய்வம் ஆகும் . முப்பத்தி எட்டு தலைமுறைகள்  கடந்தும் இன்றும் அதே சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயில் கலிங்கராயர் கட்டினர் என்ற கல்வெட்டு உள்ளது .















Tuesday, February 9, 2021

விஜயமங்கலம் விஜயபுரிஅம்மன் , குறுப்புநாடு

ஈரோடு மாவட்டம் , பெருந்துறைக்கு அருகே உள்ள ஊர் விஜயமங்கலம் . இவ்வூர் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றான குறுப்பு நாட்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும் . 32 ஊர்களை கொண்ட நாடு குறுப்பு நாடு . அவற்றின் தலைநகரம் விஜயமங்கலம்.  இங்கு உள்ள விஜயபுரி அம்மன் ஆலயம் பழமையானது . ஊரின் பெயரிலேயே அம்மன் அமைந்தது இதன் சிறப்பு . இக்கோயிலில்  மகாபாரத கதையை    விளக்கும் சிற்பம்  உள்ளது . 

பஞ்சபாண்டவர்கள்  ஓராண்டு காலம் மறைந்து வாழ்த்த பகுதி தாராபுரம் என்று கூறப்படுகிறது . அப்போது அர்ஜுனன் தன்னிடம் இருந்த வில்லை விஜயபுரி அம்மனிடம் அடைக்கலப்படுத்தி வைத்திருந்ததாக கொங்கு மண்டல சதங்கம் கூறுகிறது . 


கொங்கு மண்டல சதங்கம்,

"  துளைமணி ரத்ன மகுடா சலத்தைவர் சூதில்நொந்தே

கிளையினை நீங்கி வனவாசம் செய்கையில் கீர்த்திபெற்ற 

விளைவயல் சூழ்மங்கைப் பத்தினிக் கோட்டத்தில் வில்விசயன்

வளைவில் அடைக்கலம் வைத்தது வும்கொங்கு மண்டலமே "


இவ்வாலயத்தின் கிழக்கு சுவற்றில் அர்ஜுனன் தேரில் வருவது போலவும் தனது வில்லை அம்மனிடம் அடைக்கலம் கொடுப்பது போலவும் சிற்பங்கள் உள்ளன . 

இக்கோயிலின் புணரமைப்பின் போது முன்மண்டபத்தில் இருந்த சிம்மத்தூண்கள் அகற்றப்பட்டு கோயிலுக்கு வெளியே வைக்கப்படுள்ளது . அதனுடன் மிகப்பழமையான சில நடுகற்கள் உள்ளன . அவற்றில் மூன்று நவகண்ட சிற்பங்கள் . மக்கள் , நாடு அல்லது அரசன் நலனுக்காக தன்னை தாமே கழுத்தை அறுத்து கொண்டு பலியிட்டு கொண்டு வீரமரணம் அடைவது நவகண்டம் ஆகும் .