பண்டைய தமிழ் மக்கள் கோவிலுக்கு கொடை அளிப்பது, ஏரி குளங்கள் வெட்டுவது போன்ற அறச்செயல்களைப் போல, ஆடு மாடுகளின் இயற்கை உணர்வுகளை திருப்தி படுத்துவதும் அறச்செயல்களாக கருதினர். அவற்றில் ஒன்று தான் ஆதீண்டு கல் அல்லது ஆதிண்டுக்குற்றி நடுதல் . ஆதீண்டுக்குற்றி (ஆ+தீண்டும்+குற்றி) .
கிராமப்புறத்தின் மந்தைகளில் மாடு உரசும் கல் நடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆடு, மாடுகளின் உடம்பில் பூச்சிகளும் கொசுக்களும் தொடர்ந்து கடித்துக் கொண்டிருப்பதிலிருந்து தப்பிக்கவும் , பலவிதமான தாவரங்களை உண்ணும் போது உடம்பில் திணவெடுக்கும், அந்தத் திணவைப் போக்கிக் கொள்ள நடப்பட்ட கல்தான் ஆதீண்டு குற்றி . அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்கு பக்கத்திலும் உயரமான கல் நட்டு வைத்தனர்.
மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு திணவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன.
கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே நிரம்பியிருப்பதால் ஆடு, மாடுகள் தங்களது உடலை உரசி ஆசுவாசப்படுத்த முடியாத சூழல் காரணத்தாலும் , மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதாலும் , இந்த ஏற்பாட்டை செய்தனர்.
இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருக்காது . இந்த கல்லை "தன்மத்தறி" "நடுதறி" "ஆவுரிஞ்சி "
"ஆவுரிஞ்சு தறி" "ஆதீண்டுகல்" "மாடுஉரசல்" என்று பல பெயர்களில் கூறுகின்றனர் .
பல்லுயிரை நேசித்த விவசாயப் பண்பாட்டின் வெளிப்பாடு இது . ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது.
இடம் : சொக்கநாதர் கோயில் ,
பட்லூர் , பவானி.