தொல்பழங்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொன்மையான அடையாளங்களாக பாறை ஓவியங்களை கூறலாம். இவை தனிமனிதனின் எச்சங்களாக இல்லாமல் ஓர் குழு அல்லது இனத்தின் பண்பாடு மற்றும் வாழ்க்கையை குறிப்பது போலவே அமைந்துள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஓவியங்கள் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் , வேட்டையாடுதல் , கால்நடை வளர்த்தல் போன்றவற்றை சார்ந்தே உள்ளன . பாறை ஓவியங்கள் பொதுவாக வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்பட்டாலும் சிவப்பு , வெள்ளை நிறங்களிலேயே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன .
கோத்தகிரி அடுத்து உள்ள சோலூர் மட்டம் அருகில் உள்ள கரிக்ககையூரில் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ளன . இந்தியாவில் உள்ள பெரிய பாறை ஓவியத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று . இங்கு ஒரு பெரிய குகை அமைப்பில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன . இங்கிருந்து பார்த்தால் சுமார் 10 - 20 கிலோமீட்டர் தூரத்தை பார்க்க முடிகிறது . இங்கு இருந்து பார்த்தால் பவானி சாகர் அணையின் நீர் தெரிகிறது . இங்கு 200க்கு மேற்பட்ட வெவ்வேறு காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன . இவை செந்நிறம் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது . இவை சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது .
இங்கு பல விலங்குகளின் ஓவியங்கள் , போர் காட்சி , நடனக்காட்சி , மனித உறவுகளை மையப்படுத்திய ஓவியங்கள் என பல ஓவியங்கள் உள்ளன . சில விலங்குகளை பக்கவாட்டிலும், சில விலங்குகளை நேர்கோட்டில் வரைந்துள்ளனர் . கற்கால மனிதனின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் இவ்வோவியங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது .
No comments:
Post a Comment