3. கொடுமணல் அகழாய்வு 3
4 . சிவகளை அகழாய்வு
பழங்கற்கால மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்து வந்தான் . பரிணாம வளர்ச்சியினாலும் மனித அடர்த்தி பெருக்கத்தாலும் இனக்குழுவாக பிரிந்து கால்நடை சமூகமாகவும் மாறத் தொடங்கினான் . பின்னர் நிலையான வாழ்க்கை ( settled ) வாழ எண்ணி ஆற்றுப்படுகை அருகில் குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டு வேளாண்மை கற்றுக்கொண்டான் . வேளாண்மைக்கு கால்நடை அவசியமாயிற்று . அவ்வாறு வாழ்ந்த காலத்தில் மற்ற இனக்குழுவிடமிருந்தும் வனவிலங்குகளிடமிருந்தும் கால்நடைகளுக்கு ஆபத்து உண்டாயிற்று . கால்நடைகளை காப்பாற்ற மற்ற இனக்குழுவோடும் ( ஆநிரை போர் ) , ஆபத்து ஏற்படுத்தும் வனவிலங்குடனும் சண்டையிட தொடங்கினான் . அவ்வாறு ஏற்படும் சண்டையில் இறக்கும் வீரர்களை அக்குழுவினர் தெய்வமாக எண்ணி நடுகல் வைத்து வணங்கினர் .அவ்வாறு வைத்த நடுகல் பற்றி காண்போம் .
திருப்பூர் மாவட்டம் , அவினாசி பொங்குபாளையத்தில் உள்ள சிறு வீட்டு குடியிருப்புக்கு அருகில் சாலை ஓரத்தில் புலிக்குத்தி நடுகல் ஒன்று உள்ளது . தான் செல்வமாக கருதிய கால்நடைகளை , தாக்க வரும் புலியை எதிர்த்து போரிட்டு இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது . இவ்வீரனின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது . இந்த நடுகல்லில் வீரனின் முகம் நேராகவும் , தலையில் சிறு கொண்டையும் காட்டப்பட்டுள்ளது . வீரன் தன்னை தாக்க வரும் புலியை இருகைகளாலும் ஈட்டியை கொண்டு தாக்குவது போலவும் , புலி தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றியவாறும் முன்னங்கால்களை வீரனின் தொடை மீது பதித்துள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் புலியின் உருவம் வீரனை விட சிறியதாக காட்டப்பட்டுள்ளது . இதில் பொறிந்த நிலையில் கல்வெட்டுகள் காணப்படுகிறது
கல்வெட்டு வாசகம் :
"தேவரு , புலிகு (த் ) தி பட்டார் கல் "
சில வரிகள் அழிந்து விட்டன .
ஆதாவது தேவரு என்பவர் கால் நடைகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு இறந்தார் என்பன செய்தி ஆகும் . இது சுமார் 1200 வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது . இக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர் .
நடுகல் வழிபாடு என்பது பொதுமக்கள் நலனுக்குக்காக சண்டையிட்டு வீரமரணம் அடைபவரின் நினைவாக கல் நட்டு வழிபடுவதே ஆகும் . நடப்பட்ட கல்லின் மீது வீரனின் உருவமும் , அவன் இறப்பை பற்றிய குறிப்பும் பொறிக்கப்படும் . நடுகல் வழிபாடு என்பது வீரத்தை அடிப்படையாக கொண்ட வழிபாடு . இவை பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன . கிராமங்களில் இன்றும் நடுகற்களை சிறுதெய்வங்களாக வணங்கி வருகின்றனர் .
திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி அருகே காங்கயம்பாளையம் என்னும் ஊரில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது . இவற்றில் இரண்டு புலிக்குத்தி நடுகற் கள் மற்றொன்று நினைவுக்கல் ஆகும் . முதல் புலிக் குத்தி கல்லில் புலி தன் வாயை திறந்த நிலையில் வீரன் மேல் பாய்வது போலவும் , வீரன் ஈட்டி ஆயுதத்தால் புலியை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால்கள் இரண்டும் தன்னை தாக்க வரும் வீரனை எதிர்த்து தாக்குவது போல உள்ளது . வீரனுக்கும் புலிக்கும் நடுவே ஒரு நாய் புலியை நோக்கி பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . கல் பொரிந்த நிலையில் உள்ளது .கல்வெட்டுகள் காணப்படவில்லை .
இதற்கு அடுத்து ஒரு நினைவுக்கல் உள்ளது . இதில் வீரனின் உருவம் இரு கைகளையும் கூப்பியநிலையில் காட்டப்பட்டுள்ளது . இது வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட கல் ஆகும் .
மூன்றாவதாக மற்றொரு புலி குத்தி கல் காணப்படுகிறது . இதில் புலி வாயை திறந்த நிலையில் பாய்வது போலவும் அதன் முன்னங்காலில் ஒரு கால் வீரன் தோள் பட்டை மீதும் மற்றொரு கால் வீரனின் தொடையை பிடித்து இருப்பது போலவும் , வீரனும் தன்னை தாக்க வரும் புலியை ஈட்டியைக் கொண்டு தாக்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் வீரனின் முகம் நேராக நம்மை பார்ப்பது போல உள்ளது . இதுவும் 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது . இதிலும் கல்வெட்டுகள் காணப்படவில்லை .
மனிதன் தன்னையும் , தான் வாழும் இடத்தையும் அடையாளப்படுத்திக் கொள்ள பெயர்களை சூட்டிக் கொண்டான் . இவ்வாறு சூட்டப்பட்ட ஊர்களின் பெயர்களை ஆராயும்போது அவை வரலாற்றை சார்ந்ததாகவோ , மக்களின் வாழ்வியல் அல்லது பண்பாடு சார்ந்ததாகவோ உள்ளன . அவ்வாறு பார்க்கும்போது கொங்கு நாட்டில் உள்ள பல ஊர்ப் பெயர்களில் இரண்டு கூறுகள் இருக்கின்றன . முதற்பெயர் சிறப்பு பெயராகவும் , இரண்டாவது பெயர் பொது பெயராகவும் உள்ளது . கொங்கு நாட்டில் உள்ள "தளவாய்பாளையம்" என்னும் ஊரைப் பற்றி காண்போம் .
திருப்பூர் மாவட்டம் , வாய்ப்பாடி அருகே உள்ள பழமையான ஊர் "தளவாய்ப்பாளையம்" . ஊரின் முதற்பெயரான "தளவாய்" என்ற சொல்லுக்கு "தளம் ஒன்றின் தலைவன்" என்பது பொருளாகும் . அதாவது ஒரு படையின் அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட தலைவன் என்றும் பொருள் .
கிபி 14 ஆம் நூற்றாண்டில் விஜய பேரரசு தங்கள் பிரதிநிதிகளை தமிழகமெங்கும் அனுப்பி நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர் . இதுவே தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் தொடக்கம் ஆயிற்று . நாயக்கர்கள் ஆட்சியில் தளவாய்கள் (அமைச்சர் போன்ற அதிகாரி) நியமிக்கப்பட்டனர் . தளவாய் என்னும் பதவி அதிகாரமிக்க பதவியாக இருந்தது . பாளையத்தை காப்பவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர் . பாலையக்காரர்களுக்கு மேலான அதிகார பதவியில் இருப்பவர் தான் தளவாய் அதிகாரி .
அடுத்து இரண்டாவதாக உள்ள "பாளையம்" என்னும் பொதுப்பெயர் பற்றி காண்போம் . விஜயநகர பேரரசு ஆட்சியில் காடு அழித்து நாடு உருவாக்கும் போது புது ஊருக்கு பாளையம் என்று பெயர் வைக்கப்பட்டது . கொங்கு நாட்டில் பட்டி , தொழுவு போன்ற பெயர்கள் இருந்தன ஆனால் பாளையம் என்னும் பெயர் விஜயநகர பேரரசு ஆட்சிக்கு பின் நிறைய காணப்படுகிறது . பாளையக்காரர்கள் ஆண்ட பகுதிகளும் பெரும்பாலும் பாளையம் என முடியும். அதிகார பதவியின் பெயரில் உள்ள "தளவாய்ப்பாளையம்" ஊரில் உள்ள பழமையான கோயிலை பற்றி காண்போம் .
"அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்" என்னும் பெயரில் சுமார் 200 வருடங்கள் பழமையான சிவன் கோயில் உள்ளது . இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி , பைரவர் , முருகன் , ஆஞ்சிநேயர் சிற்பங்கள் உள்ளன . நாயக்கர் கால கட்டிட கலையில் இக்கோயில் விளங்குகிறது . இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . சுவற்றின் மீது மீன் சின்னமும் முதலை போன்ற அமைப்புடன் ஒரு உருவமும் காணப்படுகிறது . தற்போது கிராமமாக உள்ள இவ்வூர் ஒரு காலத்தில் தளவாய் போன்ற அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு பெற்ற ஊராக இருந்து இருக்கலாம் .