Saturday, May 28, 2022

கந்தனச்செரி Kandanassery , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 


கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை .  திருச்சூர் மாவட்டம்  , கந்தனச்செரி ( Kandanassery  ) என்னும் ஊரில்  குடைவரை தாழ்வறை ஈமச்சின்னம் காணப்படுகிறது . குடைவரை தாழ்வறை என்பது பாறையை குடைந்து தாழ்வான இடத்தில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகும் . இயற்கையான நிலமட்டத்தில் உள்ள கற்பறையை (laterite ) செவ்வக குழியாக குடைந்து வெட்டியெடுக்கப்பட்டு இருப்பதுடன் அக்குழியில் இறங்க படியும் காணப்படுகிறது . இக்குழியின் ஒரு பக்கத்தில் உள்ள  சதுர துவாரத்தின் வழியே உள்ளே சென்றால் ஒரு சிறு அறை போன்ற அமைப்பு உள்ளது . அந்த அறையில் இரு புறமும் திண்ணை போன்ற அமைப்பும் அறையின் மேல் கூரையில் ஒரு வட்ட துவாரம் உள்ளது . இவ்வறை வெளியே உள்ள முன்னறையை விட சற்று தாழ்வாக உள்ளது . இங்குள்ள திண்ணையில் படையல் பொருட்கள் மற்றும் எழும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது . 

வரலாற்று காலத்திற்கு முன்பே பாறையை குடைந்து ஈமச்சின்னங்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது . இவ்விடம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நன்றாக வேலி அமைத்து பாதுகாப்பாக உள்ளது . மழை அல்லதா காலத்தில் சென்றால்  குடைவரை உள்ளே வரை நாம் சென்று காண முடியும் .

                                                      








No comments:

Post a Comment