Saturday, May 28, 2022

அரியனூர் ( Ariyannur ) , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 

                கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை . 

 திருச்சூர் மாவட்டம்  , அரியனூர்  (ARIYANNUR ) என்னும் ஊரில் குடைக்கல் மற்றும்  தொப்பிக்கல் மற்றும் ஹூட்  (Hood stone )  காணப்படுகிறது .  நன்கு செதுக்கப்பட்ட (laterite ) முக்கோண வடிவில் உள்ள

மூன்று அல்லது நான்கு கற்களை சற்று சாய்வாக மேல் பகுதி ஒன்றாக வருமாறு நட்டு அதன் மேல், குடை போன்ற வட்ட வடிவ மூடு கல்லை வைத்து, பார்ப்பதற்கு காளான் போல் காட்சி தருவது குடைக்கல் (umbrella stone ) . இக்கற்கள் எல்லாம் சீராக இழைக்கப்பட்டுள்ளது . இக்குடைக்கல்லின்  அடியில் ஈமப்பொருட்களான தாழி , படையல் பொருட்கள் போன்றவற்றை  வைத்து அதன் மேல் இக்கல்லை நடுவது வழக்கம் .

                                         அடுத்து தொப்பிக்கல் (Hat stone ) , இதன் மேல் பகுதி  மட்டும் குடைக்கல் போலவே உள்ளது .  நன்றாக செத்துக்கட்ட குடையை போன்ற வட்ட வடிவமான மூடு கல்லை  , தரையின் மேல் வைப்பது தொப்பிக்கல் . அதன் அடியிலும் ஈமத்தாழி மற்றும் ஈமப்பொருட்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது .

                          அடுத்து காணப்படுவது ஹூட் ஸ்டோன் என்னும் வகை . முக்கோண வடிவ ஆறு அல்லது ஏழு  கற்களை சற்று சாய்வாக வட்ட வடிவமாக நடப்பட்டுள்ளது . இதை ஹூட் ஸ்டோன் (Hood Stone ) என்கிறார்கள் . இதுவும் குடைக்கல் , தொப்பிக்கல் அருகேயே காணப்படுகிறது .  இவை மூன்றும் ஒரே இடத்தில் காண்பது சிறப்பு .

                                                   











1 comment:

  1. மிகச்சிறந்த விவரிப்பு. இளம் தலைமுறையினருக்கு மற்றும் வரலாற்று ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் கட்டுரை ஒரு பாதுகாக்கப்படவேண்டிய ஆவணம். உங்களைப் போன்ற மனிதர்கள் மூலம் தான் வரலாறு தன்னை உயிர்ப்பித்துக் ககொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete