Friday, May 6, 2022

மறுகால்தலை பிராமி கல்வெட்டு , திருநெல்வேலி

 சமண மதம் தமிழகத்தில் நீண்ட வரலாற்றை கொண்டது என்பதற்கு இங்கு பரவிக் கிடக்கும் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகள் மற்றும் சமண சிற்பங்களுமே சாட்சி .  சமண துறவிகள் , இயற்கையாக அமைந்த மலை குகைகளில் கற்படுக்கைகளை அமைத்துத் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்  . இவ்வாறான கற்படுக்கைகள் தமிழகத்தில்  அரச்சலூர் , சுக்காளியூர் , கீழ வளவு , அழகர் மலை மற்றும் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது  .   இக்கற்படுக்கையின் அருகே சில இடங்களில் கல்வெட்டுகளை பொறித்தும் உள்ளனர் . இவ்வாறு கல்வெட்டுகளுடன் கூடிய கற்படுக்கை திருநெல்வேலி மாவட்டம் மறுகால்தலை என்னும் ஊரில் உள்ளதைப் பற்றி காண்போம் .

                   திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9km தொலைவில் உள்ளது சீவலப்பேரி என்னும் ஊர் . பராந்தக வீர நாராயணன்  தன் தந்தை ஸ்ரீ வல்லப பாண்டியன் நினைவாக ஒரு பெரிய ஏரியை வெட்டி அதற்கு "ஸ்ரீ வல்லப பேரேரி " என்று பெயரிட்டான் . அதுவே பின்னாளில் மருவி "சீவலப்பேரி" என்று ஆனது . இந்த சீவலப்பேரி ஊரில் இருந்து 2 km தொலைவில் உள்ளது மறுகால்தலை என்னும் கிராமம் . குளம் நிரப்பி மறு கால் பாயும்  முதன்மையான இடம் (தலை) என்பதே "மறுகால்தலை "  என்றானதாக கூறப்படுகிறது .


 தாமிரபரணி , கடனாநதி , சிற்றாறு  ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகே இணைகின்றன .  இவ்வூரின் பாதை முன்னோரு காலத்தில்  திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக இருந்துள்ளது . இவ்வூரில் உள்ள பூவிலுடையார் மலையில் உள்ள சிறு குன்றில் பஞ்சபாண்டவர் கற்படுக்கை என்று அழைக்கப்படும் கற்படுக்கை அமைந்துள்ளது . இக்குகையின் மேற்பகுதியில் பெரிய அளவிலான எழுதுக்களால் வெட்டப்பட்ட பிராமி கல்வெட்டுகள் உள்ளன . இதன் காலம் 2ம் நூற்றாண்டு . தமிழகத்தில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று .

கல்வெட்டு :

" வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் " 

செய்தி : வெண்காசிபன்  என்பவன் இங்குள்ள குகைதளத்தில் கல்படுக்கை அமைத்து கொடுத்தான்  என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும் . கற்படுக்கையை கஞ்சனம் என்பர் . 


இக்கல்வெட்டு எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் மேலும் கீழுமாக பெரிய அளவிளான எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது . அளவில் பெரிய எழுத்துக்களாக உள்ளதால் கீழ்லிருந்தே படிக்க முடிகிறது . 

இயற்கையாக அமைந்த இக்குகையில் மழை நீர் குகைகளில் விழாதவாறு கூரை விளிம்பை குடைந்து உள்ளனர் . சீவலப்பேரி செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு இடமாகும்.








No comments:

Post a Comment