கொற்கை
வரலாற்றுப் புகழ்மிக்க #கொற்கை பாண்டியர்களின் துறைமுகம் மட்டுமல்லாமல் பழம் பெரும் வணிக நகரமாகவும் இருந்து உள்ளது . "தன்பொருநை " ஆறு கடலில் கலக்கும் இடத்தில் , முன்பு அமைந்து இருந்தது இந்நகரம் . கிரேக்கர்கள் முதன் முதலில் வந்து இறங்கியது இங்கு தான் . அதனால் இந்த நகரை பற்றிய செய்திகள் நம்மை விட கிரேக்க வணிகர்களின் குறிப்புகளில் அதிகம் காணப்படுகிறது . அவர்களின் குறிப்பில் தாமிரபரணி ஆற்றிற்கு வடக்கே இந்த நகரம் இருந்ததாக கூறப்படுகிறது . பிற்காலத்தில் கடலின் நீர் மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட மாற்றத்தால் கொற்கைக்கும் கடலுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது . அந்த இடைவெளியில் ஏற்பட்ட ஒரு புதிய நகரம் தான் காயல் . இந் நகரமும் வணிகத்தில் சிறந்து விளங்கியது . கொற்கை , காயல் இரண்டு நகருமே தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் இருந்த மிகப்பெரிய வணிக நகரம் ஆகும் .
தமிழரின் தொன்மையை பறைசாற்றும் ஆதித்தநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களுக்கு அருகில் இவ்வூர் இருப்பது கூடுதல் சிறப்பு .கொற்கை என்றால் "படைகளின் கூடாரம்" என்று பொருள் . தற்போது குறிப்பிடத்தக்க இடமாக இல்லாமல் போனாலும் , 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் , அரேபியர்கள் சீனர்கள் , ரோமானியர்கள் வந்து வணிகம் செய்ய தங்கிய நகரம் இது . குதிரை வணிகம் , முத்து வணிகம் , மிளகு வணிகம் இன்னும் பல முக்கிய வணிகங்கள் நடந்த மிகப் பெரிய பெரிய நகரமாகும் . முத்து வணிகத்தில் தலைமையிடமாக கொற்கை விளங்கி இருக்கிறது . முத்து குளித்தல் இங்கு சிறப்பாக இருந்து இருக்கிறது . கொற்கை பற்றிய செய்திகள் கி.பி 80 ல் இந்தியாவிற்கு வந்த கிரேக்க அறிஞரான பெரிப்புளூஸ் மாரிஸ் ஏரித்தரேஸ் (Periplus Maris Erigthrace) தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . கி.பி 130 இல் வாழ்ந்த நில நூல் அறிஞர் தாலமியும் இந்நகரை பற்றி செய்திகளை குறிப்பிட்டுள்ளார் .
#அக்கசாலை :
கொற்கைக்கு அருகே உள்ள ஊர் "அக்கசாலை ". அக்கசாலை என்பது நாணயம் அச்சடிக்கும் இடம் ஆகும் . தற்போது "அக்காசாலை" என்று மருவி வழங்கப்படுகிறது . கார்டுவெல் இப்பகுதியை கொற்கையின் ஒரு பகுதியென்றும் , அங்கே பாண்டியர்களின் நாணயங்கள் அச்சிடப்பட்டதென்றும் குறிப்பிடுகிறார் . அக்கம் என்றால் பொன் என்று பொருள் . பொன் ,வெள்ளி , செம்பு உலோகங்களால் இங்கு நாணயங்கள் செய்யப்பட்டன . தாமிரபரணி ஆற்றங்கரையில் நாணயங்கள் கிடைத்து இருக்கின்றன .
#ஈஸ்வரமுடையார்கோயில்
இங்கு ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது . "அக்கசாலை ஈஸ்வரமுடையார் கோயில் " என்று வழங்கப்படும் இக்கோயிலில் தற்போது மூலவராக விநாயகர் உள்ளார் . இக்கோயில் கல்வெட்டுகள் கொற்கையை " மதுரோதய நல்லூர் " என்று குறிப்பிடுகின்றன . பாண்டியர்களால் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு இருக்கலாம் .
#கண்ணகிகோயில் :
கண்ணகி கோயில் ஒன்றும் இங்கு உள்ளது .கோவலன் மதுரையில் கொலையுண்டதை கேள்விப்பட்ட கண்ணகி நெடுஞ்செழிய பாண்டியனிடம் நீதி கேட்டதும் , அவன் தன் தவறை உணர்ந்து உயிர் விட்டதும் , கோபத்தால் கண்ணகி மதுரையை எரித்ததும் நாம் அறிந்ததே . கொற்கை பண்டியநாட்டின் முக்கிய வணிக நகரமாகும் . அப்போது இங்கு இளவரசனாக இருந்த வெற்றிவேற் செழியன் பாண்டிய அரசு கட்டிலில் ஏறினான் என்றும் , பின்னர் பத்தினி தெய்வம் கண்ணகியை சாந்தப்படுத்த 1000 பொற்கொல்லர்களை பலியிட்டான் என்றும் கூறப்படுகிறது .மேலும் கண்ணகிக்கு இங்கு சிலை எடுத்தான் என்றும் அதற்கு "வெற்றிவேல் நங்கை " என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது . "செழுமை நங்கை " என்பது செழியனின் நங்கை என்றும் , செழியன் வணங்கிய நங்கை என்றும் கூறப்படுகிறது . பழைய சிலை காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது . ஆனால் தற்போது இருப்பது தற்கால கோயிலும் , தற்கால கண்ணகி சிலையும் தான் .
இவ்வளவு சிறப்பு மிக்க பகுதியில் அடுத்த வருடம் அகழ்வாராய்ச்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
No comments:
Post a Comment