கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றான வடகரை நாடு , பவானி ,அந்தியூர் ஆகிய முக்கிய ஊர்களை உள்ளடக்கிய நாடு ஆகும் . பவானியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலகடம் என்னும் ஊர் .
இங்கே மிக பழமையான உலகேஸ்வரர் கோயில் உள்ளது . இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இவ்வூரை "உலகவிடங்கம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது . "உலகவிடங்கம்" இதுவே மருவி "உலகடம்" என்றும் "ஓலகடம்" என்றும் ஆயிற்று . இங்கு கி . பி 12 - கி. பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகள் மற்றும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன. கொங்கு சோழரான வீரராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் , விக்கிரம சோழன் ஆகியோர்களின் கல்வெட்டுகளும் , கொங்கு பாண்டியரான சுந்தர பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன . சில கல்வெட்டுகள் சிதைந்த நிலையிலும் , சில கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது மாற்றி வைக்கபட்டுள்ளது.
கொங்கு நாட்டில் ஆட்சி செய்த சோழர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் வீரராஜேந்திர சோழர் . இவர் கொங்கு சோழமன்னர்களின் பெரும்புகழ் பெற்றவர் . வட கொங்கு , தென் கொங்கு என இரு கொங்கு பகுதியையும் ஆண்டவர் என்று குறிப்பிடப்படுபவர் . இவரது கல்வெட்டுகள் சில உள்ளன .
இக்கோவிலில் மூன்று நடுகற்கள் உள்ளன . ஆநிரை மீட்டல் , சதி கல் மற்றும் பெண் நவகண்டம் ஆகிய நடுகற்கள் உள்ளன . வேறு எங்கும் காணப்படாத பெண் நவகண்டம் கொடுக்கும் சிற்பம் இங்கு உள்ளது இக்கோயிலின் மற்றுமொறு சிறப்பு ஆகும் .
No comments:
Post a Comment