Wednesday, February 10, 2021

கொடுமணல்

 ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்த கொடுமணலில் 

தற்போது இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த கொடுமணலில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களைக் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுவதற்கு முன்னால் இந்த சங்ககால தொழில் நகரான கொடுமணல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இதனைக் கண்டுபிடித்த முதுபெரும் தொல்லியல் அறிஞர் திரு. புலவர் இராசுவிடம் கேட்டறிந்தவற்றை அவரிடமே கேட்டறிவோம்.


ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18யை ஒட்டிய புதன் கிழமை கொடுமணல் அருகில்  உள்ள தங்கம்மன் கோயிலில் விழா எடுப்பது வழக்கம் . அவ்வாறே1979ம் ஆண்டு விழா நடந்த போது சிறப்பு விருந்தினராக அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. தியனேஸ்வரர் அவர்கள் கலந்து கொண்டார் . அவர் புதிதாக பொறுப்பேற்ற காரணத்தால் என்னையும் (புலவர்.இராசு) அவருடன் அழைத்து சென்றார் . அங்கு ஆட்சியருக்கு இரண்டு மணி நேரம் வேலை இருந்த காரணத்தால் நான் மிதிவண்டி எடுத்துக்கொண்டு நொய்யல் ஆற்றின் வழியே சிறிது தூரம் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஆற்றின் கரையில் சில சிவப்பு கறுப்பு ஓடு , பாசி மற்றும் சங்குகள் ஆகியவற்றை கண்டெடுத்து பத்திரப்படுத்தினேன். அது குறித்து அப்போது எதுவும் தெரியாததால் அதற்கு அடுத்த வாரம் மதுரை நாயக்கர் மஹாலில் நடந்த தொல்லியல் மாநாட்டில் திரு . நாகசாமி ஐயாவிடம் காண்பித்த போது அவர் " ராசு இது ஒரு அரிய பொக்கிஷம் " எங்கு கிடைத்தது என்று கேட்டு அறிந்து கொண்டார் . பின்னர் கொடுமணல் வந்து சிறு சோதனை (trial bit) நடத்தி உறுதிபடுத்தினார். இவை யாவும் சங்ககால பானை ஓடுகள் என்றும் இவ்விடம் சங்ககால தொல்லியல் மேடு என்பதையும் உறுதி செய்தார்.


அதன் பிறகு நான் அப்போதைய ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியின் தாளாளர் முத்தையாவுடன் கலந்து பேசி அவருடன் இணைந்து 30 மாணவியர்களை அழைத்துக்கொண்டு சிறு சுற்றுலா போல உணவு தண்ணீர் எடுத்துக்கொண்டு கொடுமணல் நோக்கி பயணப்பட்டோம். அங்கு மாணவியர்களுக்கு எப்படி பட்ட பொருள்களை எடுத்துத் தரவேண்டும் என்று பயற்சியளித்ததால், அக்குழந்தைகள் கடுகு போல பச்சை பாசியை கூட எடுத்துக்கொடுத்தனர் . அங்கு கிடைத்த மிக அரிய கல்மணிகள்  தற்போது கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது .


அதன் பிறகு 1985,1986,1989,1990,1997 ஆகிய ஆண்டுகளில் தமிழ் பல்கலைகழகம் , தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை , சென்னை பல்கலைகழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆகியவை தனித்தனியேவும் இணைந்தும் அகழாய்வுகளை நடத்தினர் . 









No comments:

Post a Comment