Saturday, December 5, 2020

பரஞ்சேர்வழி / பரஞ்சேர்பள்ளி

 கொங்கு நாட்டின் உட்பிரிவு நாடுகளில் ஒன்றான காங்கயநாட்டில் உள்ளது பரஞ்சேர்வழி. இவ்வூர் பரஞ்சேர் பள்ளி (பரஞ்சேர்+பள்ளி)என்று சமணம் தொடர்புடையதாகவும், இப்பெயர் மருவி தற்போது பரஞ்சேர்வழி (பரம்+சேர்+வழி) சைவம் தொடர்புடையதாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. 


 சமணர்கள் முதலில் கொங்கு நாடு வந்ததை "பொன்னாடதேசம்" வந்து பின் மற்ற பகுதிகளுக்குச் சென்றதாக குறிப்பிடுகின்றனர் . கொங்குதேசம் முழுவதிலும் சமணம் பரவியிருந்தமைக்கு பல உதாரணங்கள் உண்டு. பரஞ்சேர்பள்ளி என்ற ஊரின் பெயரைக் கொண்டு இங்கு சமணப்பள்ளி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில்  இங்கு  சமண தீர்த்தங்கரர் சிற்பம்  ஒன்று உள்ளது.


 இந்த சமண தீர்த்தங்கரரின் சிற்பமானது அம்மன் கோயிலுக்கு அருகில்  சாலை ஓரத்தில் உள்ளது . இந்த அழகிய தீர்த்தங்கரர் தலைக்கு மேலாக முக்குடையுடனும் , இருபுறமும் கரண்ட மகுடத்துடன் கவரி வீசும் ஆடவர்களுடன் காட்சி தருகிறார் . இந்த சிலை 10 ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருதுகின்றனர் . 


மேலும் இந்த ஊரில் சிறப்பான  மத்யபுரீஸ்வர் என்றழைக்கப்படும் சிவாலயம் ஒன்று உள்ளது .  கி.பி 1261ம் ஆண்டு கொங்கு சோழரான இரண்டாம் விக்கிரம சோழன் கல்வெட்டு ஒன்று கோவில் கிணற்றுக்கு அருகே உள்ள கல்லில் பதிக்கப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில்  சமூகம் மற்றும் திருவிழா பற்றி ஆய்வு செய்ய பல செய்திகள் உள்ளன . கரைநாடு , அடிக்கீழ்தளம் பதினெண் பூமி மாகேஸ்வரர்களும் சேர்ந்து ஊர் மன்றுபிச்சை அளித்த செய்தியும் உள்ளது . பரஞ்சேர்பள்ளி இறைவனுக்கு பரஞ்சேரபள்ளிபிடாகையைக் கொடையாக அளித்த செய்தும் உள்ளது .


ஆக கொங்குநாட்டில் இவ்வூர் இருவேறு மதங்களை ஒன்றினைத்து சிறப்புற விளங்கியதை அறிய முடிகிறது.















No comments:

Post a Comment