Tuesday, July 30, 2024

AKBARI MASJITH , AMBER , JAIPUR

 இந்து மன்னர் இஸ்லாமிய மன்னருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததுடன் ஒரு மசூதியும் கட்டினார் என்ற வரலாற்றை அறிந்து கொள்ளலாம் . ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 13 km தொலைவில் அம்பர்கோட்டைக்கு (Amber Fort ) அருகில் ஜமா மஸ்ஜித் (Jama Masjid ) என்னும் பழமையான மசூதி அமைந்துள்ளது . கிபி 1569 ஆம் ஆண்டு அக்பரின் உத்தரவை ஏற்று ராஜா பர்மால் ( Raja Bharmal ) என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . வட இந்தியாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்க முடிவு செய்த அக்பர் , இரண்டு யுக்திகளை பயன்படுத்தினார் . பகைவர்களை வீரத்தாலும் மற்ற நாட்டவர்களை அன்பாலும் வெல்ல திட்டமிட்டார் . போர் புரிவதால் இருபுறமும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதால் அதை தவிர்க்க விரும்பி , திருமண உறவாலும்  எல்லைகளை விரிவாக்க முடிவு செய்தார் . அதுவும் குறிப்பாக ராஜபுத்திர மன்னர்களுடன் அவர் திருமண உறவு ஏற்று போர்கள் இன்றி தனது எல்லையை பாதுகாக்க முடிவு செய்தார் . அக்பர் , இஸ்லாமியர் ராஜபுத்திரார்களோ இந்துக்கள் . ஆனால் அக்பர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை . ராஜ்ஜியத்தை விரிவாக்க மட்டுமே எண்ணினார் . அம்பர் சமஸ்தானத்தை முகலாய ராஜ்யத்துடன் இணைக்க திருமணமே சிறந்த வழி என முடிவு செய்தார் . மேவார் மன்னர் ராணா உதய்சிங் தவிர மற்றவர் ராஜபுத்திர மன்னர்கள் திருமண உறவுக்கு ஒப்புக்கொண்டனர் . இதன் முதல் முயற்சியாக அக்பர் , அம்பர் ராஜ்ஜியத்தின் 22வது ராஜபுத்திர மன்னரான ராஜா  பர்மால் (1498- 27 சன 1574 ) என்பவரின் மகளான ஹீரா கன்வாரியை மணம் புரிந்தார் .  அக்பர் திருமணத்திற்கு முன்பும் ஹீரா கன்வாரியை மதம் மாற சொல்லவில்லை அதுமட்டுமின்றி அரண்மனையில் இந்துவாக வாழவும் , பூஜைகள் செய்யவும் அனுமதி கொடுத்ததுடன் சில பூஜைகளில் அவரும் கலந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது .  செப் 20 ,1569ம் ஆண்டு ஹீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது . அக்குழந்தையே பின்னாளில் ஜஹாங்கீர் என்ற புகழ் பெற்ற முகலாய மன்னராவார் . அம்பரின் மன்னரான ராஜா பர்மால் தன் மருமகனான அக்பரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பர் கோட்டைக்கு அருகில் மஸ்ஜித் ஒன்றை கட்டி அதற்கு அக்பரின் பெயரே சூட்டியுள்ளனார் . " அக்பரி மஸ்ஜித் " என்றும் , " ஜமா மஸ்ஜித் " என்றும் அழைக்கப்பட்டுள்ளது . மஸ்ஜித் என்பது இஸ்லாமியர் அனைவரும் ஒன்றுகூடி இறைவனை தொழுகை செய்யும் இடம் ஆகும் .இதனையே தமிழில் பள்ளிவாசல் என்றும் அரபுமொழியில் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது . ராஜபுத்திர ராஜ்ஜியத்தில் இஸ்லாமியருக்கும் தொழுகை செய்ய இடம் வேண்டும் என்று நோக்கத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . மசூதியின் நுழைவாயில் தாண்டி சென்றால் முகப்பில் ஏழு வளைவுகளைக் கொண்டு அவற்றின் மைய வளைவு மற்ற வளைவுகளை விட பெரியதாகவும் உள்ளது . இம்மசூதி இன்னும் பயன்பாட்டில் உள்ளது . இக்கட்டிடம் ராஜஸ்தான் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

                                             


                                         








                                          

                                                           

                                                            

                                                           


        

No comments:

Post a Comment