Tuesday, November 8, 2022

குன்னத்தூர் / வரிச்சியூர் பிராமி , மதுரை

                       மதுரை , தமிழகத்தின் பழம்பெரும் நகரமாகும் . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பெருமைக்குரிய தலைநகரமாக விளங்கியதுடன் இன்றும் தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக விளங்குகிறது . சங்க காலத்தில் இருந்து பல்வேறு சமய நம்பிக்கைகளை தன்னுள் கொண்டு விளங்கும் நகரம் இது . மதுரையின் வரலாற்றோடு தொன்மையான சமண சமயத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது . சமண மதத்தின் தோற்றத்தைப் பற்றியும் அது தமிழகத்தில் பரவியது பற்றியும் காண்போம் .

                         சமண மதமானது கி.மு ஆறாம் நூற்றாண்டில் பீகாரில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக தென்னமும் நோக்கி பரவியதாக கருதப்படுகிறது . சமணர்கள் என்றால் துறவிகள் என்று பொருள் . துறவு நெறியை வலியுறுத்திய மதம் சமண மதம் ஆகும் . அடைக்கலம் , அன்னதானம் , மருத்துவம் , கல்வி ஆகிய நான்கு தானங்களையும் வலியுறுத்தியது இம்மதம் . சமண சமயத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் , அவர்களில் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் என்கிற ஆதிநாதர் , 24வது தீர்த்தங்கராக மகாவீரர் தோன்றினார் . இவரின் இயற்பெயர் வர்த்தமானர் ஆகும் . இவரே சமண சமயத்தை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது .

                        மகாவீரர் கி.மு 527 ம் ஆண்டு , தன் 72 ஆவது வயதில் வீடுபேறு அடைந்தார் . இவர் வழிவந்த மாணவர்கள் பலரும் இவரை பின்பற்றியதுடன் இவரின் கொள்கையை நாடு முழுவதும் பரப்பினர் . இவர் வழிவந்த மாணவர்களுள் ஒருவர்தான் பத்திரபாகு முனிவர் . இவரே பேரரசர் சந்திரகுப்த மவுரியரின் குருவாக விளக்கினார் . 

கி மு 4 ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவினார் என்றும் மகத நாட்டில் பெரியதோர் பஞ்சம் ஏற்பட இருப்பதை முன்னரே அறிந்த பத்திரபாகு முனிவர்  தன்னுடைய சீடர்கள் 12,000 பேருடன் தென்னகம் நோக்கி புறப்பட்டார் . சந்திர குப்தரும் அரசு பதவியைத் துறந்து தன் குருவுடன் தென்னாடு நோக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது . இன்றைய மைசூர் பகுதிக்கு அருகே உள்ள சரவணபெலகொலா என்னும் இடத்தில் இவர்கள் தங்கினர் என்றும் அங்கேயே சந்திர குப்த மவுரியர் வீடு பேறு அடை ந்ததாகவும் கூறப்படுகிறது . அங்கிருந்த காலத்தில் பத்திர பாகு தன் சீடரான விசாகாச்சாரியார்  என்பவரை சோழ , பாண்டிய நாடுகளுக்கு சமணத்தை பரப்பும்படி அனுப்பியதாக கூறப்படுகிறது . இவ்வாரே பாண்டிய நாட்டிற்கு சமண சமயம் பரப்பியதாகவும் , ஒரு காலத்தில் சமணர் பல்லாயிரம் பேர் வாழ்ந்த ஊர்களாக பாண்டிய நாடு விளங்கியதாக அறியப்படுகிறது . சமணம் மதுரையில் சிறப்புற்று இருந்ததற்குச் சான்றாக சமண தடயங்களை இன்றும் நாம் காண முடிகிறது .

 மதுரையை  சுற்றி உள்ள மலைகளில் உள்ள இயற்கையாக அமைந்த குகைகளில் சமண துறவிகள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக  கற்படுக்கைகள் மற்றும் அங்கு அத்துறவிகளின் பெயர் அல்லது கற்படுக்கை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டாக   கிடைக்கின்றன . மொத்தம் 13  இடங்களில் 30க்கும் மேற்பட்ட தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன . கி.மு 300 முதல் கி.பி 300 வரை சமணர்கள் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன .  குன்னத்தூர்/ வரிச்சியூர் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள குகைதளத்தை பற்றி இங்கு காண்போம் .

மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15km தொலைவில் வரிச்சியூர் என்னும் சிறு கிராமம் அமைத்துள்ளது . இங்கு காணப்படும் சிறு குன்றில் இயற்கையாக அமைந்த பெரிய குகை ஒன்று காணப்படுகிறது  . சுமார் 30 பேர் தங்கும் அளவில் காணப்படும் இக்குகை வடக்கு நோக்கி அமைந்துள்ளது . பல கற்படுக்கைகள் வெட்டப்படுள்ளது . குகையின் மேல் மடிப்பில் நீர் வடி விளிம்பு செதுக்கப்பட்டுள்ளது . இந்த குகையில் வாழ்ந்த மக்களுக்கு மன்னர்களும் வாணிபர்களும் , பொது மக்களும் உதவி செய்துள்ளனர் என்பதற்கு இங்கு காணப்படும் 3 தமிழி கல்வெட்டுகளே சாட்சி . நீர் விளிம்பின் மேலும் கீழுமாக காணப்படும் இம்கல்வெட்டுகள் மூன்றும் கி.மு 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் .

கல்வெட்டு 1:

" பளிய் கொடுபி..."

இங்குள்ள குகையில்  பள்ளி அமைத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . ஆனால் அவரின் பெயர் காலப்போக்கில் சிதைந்துள்ளது .

கல்வெட்டு 2 :

'..டா....  ஈதா வைக ன நூறுகல நெல்..."

நூறு கலம் நெல் வழங்கப்பட்டதை கூறும் இக்கல்வெட்டில் வழங்கப்பட்டவரின் பெயர் சிதந்துள்ளது .நூறு என்ற எண் அளவை குறிக்கும் காலத்தால் முதல் கல்வெட்டு இதுவே . கலன் என்பதும் அளவுப்பெயர் . அதேபோல் நெல்லை தானமாக கொடுக்கப்பட்டத்தை சொல்லும் குகைக்கல்வெட்டு இதுவே ஆகும் .


கல்வெட்டு 3 :

‘இளநதன் கருஇய நல் முழு உகை'

இக்குகையை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டத்தை கூறுகிறது . 

பாறையில் அமைந்த இடைப்பட்ட பகுதியை இன்று குகை  என்கிறோம் . கல்வெட்டு வழக்கில் குகை என்பது துறவு நிலை மேற்கொள்வோர் வாழும் பாறைகள் மிகுந்த உள்ள இருப்பிடத்தை குறிக்கும் . சமண துறவிகள் பெரும்பாலும் மலைப் பாறைகளில் அடித்தளத்தை செதுக்கி படுக்கையாக பயன்படுத்தி உள்ளனர்  .

கி.பி 15ம் நூற்றாண்டு ,

விஜயநகர காலத்து கல்வெட்டு ஒன்று  கற்படுக்கையின் மீது வெட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்னும் ஊர் பெயர் இடம் பெற்றுள்ளது . தற்போது இங்கு உள்ள  குகையின் ஒருபுறம் முருகன் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .


    












  .

No comments:

Post a Comment