கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் எனும் ஊரில் உள்ளது ஆறுநாட்டார்மலை. இம்மலை உச்சியில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இதே மலையின் மேல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளிலும் குகையின் விளிம்பிகளிலும்தான் கரூரின் தொன்மைக் கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டு 1
......தா அ ம ண ண ன யா ற றூ செ ங கா
ய ப ன உ றை ய
கோ ஆ த ன செ ல லி ரு ம பொ றை ம க ன
பெ ரு ங க டு ங கோ ன ம க ன.ன ங்
க டு ங கோ ள ங கோ ஆ சி அ று த த க ல
மேற்கண்ட இந்த கல்வெட்டானது மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ, இவரது மகன் இளங்கடுங்கோ என்பவர் இந்த படுகையை அமைத்துக் கொடுத்ததாக செய்தி.
சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இம்மூன்று சேர அரசர்களையும் இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு.
கல்வெட்டு ; 2
யா ற றூ செ ங கா ய ப ன ..ற றி ட
டா ட டா ன ம
என்ற கல்வெட்டு வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாற்றூரைச் (தற்போதைய ஆத்தூராக இருக்கலாம்) சேர்ந்த செங்காயபன் என்பவர் சமணத் துறவியாக மாறியதன் பொருட்டு அவருக்கு செய்து கொடுத்த படுக்கை இதுவாகும். மூத்த அமணன் என்று குறிப்பிடப்படுவதால் அங்கிருக்கும் துறவிகளுக்கு தலைமை துறவியாக இருக்கலாம்.
மேலும் இவரது படுக்கையை குறிக்கும் வகையில் துறவியின் பெயர் படுக்கையிலும் உள்ளது.
கல்வெட்டு 3
(சு) ண ண வா ண ணி க ன
வே ள ஆ த ன அ தி ட டா ன ம
மேற்குறிப்பிட்ட இந்த கல்வெட்டு வாசகமும் ஒரு துறவியின் படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த துறவி ஒரு சுண்ணாம்பு வணிகராக இருந்தவர் என்பதையும், கரூரில் சுண்ணாம்பு வாணிகம் நடந்திருந்தமையும் இந்த கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.
கல்வெட்டு 4
கருஊர பொன வாணிகன
நநதி அதிடடானம
இந்த கல்வெட்டானது கரூரைச் சார்ந்த பொன் வாணிகன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளமையால் கரூரில் பொன் வேலைப்பாடுகளும் பொன் சார்ந்த வாணிகமும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.
கல்வெட்டு 5
ந ம பி ஊ ர அ பி ட ன கு று ம ம க ள
கீ ர ன னே றி செ யி பி த ப ளி
மேற்கண்ட இந்த கல்வெட்டில் வரும் பிட்டன் குறுமகள் என்ற வாசகத்தின் மூலம் பெண்துறவிகளும் இங்கு இருந்தமையை அறிய முடிகிறது.
மேற்கண்ட இந்த கல்வெட்டுக்கள் யாவும் தொன்மைத்தமிழ் பிராமி எழுத்துக்களால் கிமு2ம் நூற்றாண்டு முதல் கிபி2ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவை என்று அறிஞர்களால் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேரநாட்டின் தலைநகராக விளங்கிய வஞ்சிமாநகர் என்றழைக்கப்படும் கரூரின் தொன்மையையும் சிறப்பையும் அறியலாம்.
No comments:
Post a Comment