Wednesday, November 25, 2020

கொங்கு பெருவழிகள்

 கொங்கு பெருவழிகள்

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒரு சில நெடுஞ்சாலைகளுக்கு  வயது 2500 ஆண்டுகளுக்கும் மேல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...!?

ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானவை கொங்குப் பெருவழிகள் . 

பெருவழிகள் என்பது இன்றைய நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பாகும் . இப்பெருவழிகளை பண்டைய மக்கள் போக்குவரத்திற்காகவும் வணிகத்திற்காகவும் பயன்படுத்தினர் . இதனால் உள்நாட்டு அயல்நாட்டு வாணிகம் செழிப்புற நடந்தன . 

பண்டைய தமிழகத்தை மேற்கு கடற்கரையுடன் இணைக்க மேற்கு தொடர்ச்சி மலையைக் கடக்க ஏதுவான இடமாக கொங்கு நாட்டின் பாலக்காட்டு கணவாய் விளங்கியது . இந்த பாலக்காட்டு கணவாய் வழியாக மூன்று முக்கிய பெருவழிகள் சென்றன .

அவை 

1) பேரூர் , அவிநாசி , ஈரோடு ,சேலம் , தகடூர் , கோலார் வழியாக வடபகுதிக்கு சென்றது . 

2) வெள்ளலூர் , சூலூர் , கத்தாங்கண்ணி , கொடுமணல் , கரூர் , வேலையுதம்பளையம்  வழியாக உறையூர் சென்று அங்கிருந்து பூம்புகார் சென்றடைந்தது . இப்பெருவழி ராஜகேசரிப் பெருவழி என்றழைக்கப்பட்டது . 

3) ஆனைமலை , உடுமலை , கொழுமம் , பழனி , திண்டுக்கல் வழியாக மதுரை சென்று மேலும் இராமேஸ்வரம் , அழகன்குளம் மற்றும் கோடிக்கரையை சென்றடைந்தது . 

இம்மூன்றும் கொங்கின்  வழியாக சென்ற மிக முக்கிய பெருவழி ஆகும் . 

இவை தவிர 

மகிஷ மண்டலம் பெருவழி மைசூரிலிருந்து சத்தியமங்கலம் அருகிலுள்ள கஜலெட்டி கணவாய் வழியாக சேர தலைநகரான கரூரை அடைந்தது . அடுத்ததாக கர்நாடகத்தில் தொடங்கும் ஒரு பெருவழி காவேரிபுரம் மேட்டூர் கணவாய் வழியாக பயணித்து காவேரி கறையோரமாகவே ஈரோடு சென்று அங்கிருந்து கொடுமுடி வழியாக கரூரில் முடிவடைகிறது . 

ஆக கொங்கு நாடு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பெருவழிகள் சென்றதால் வாணிகச் சிறப்பு மிக்கதாக விளங்கியது . இப்பெருவழிகள் வழியாக உள்நாட்டு அயல்நாட்டு வாணிகம் சிறப்புற விளங்கியமைக்கும் சான்றாகும் . கொங்கு பகுதிகளில் அகழ்வாய்வுகள் மூலம் பல வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன .

Pic credit google




No comments:

Post a Comment