Saturday, December 26, 2020

ஈரோடு ஈஞ்சம்பள்ளி நடுகல்

கொங்கு நாட்டின் ஒரு பிரிவான மேல் கரைப் பூந்துறை நாட்டை சேர்ந்த ஊர்களில் ஒன்று , ஈஞ்சம்பள்ளி . ஈரோடு - கொடுமுடி செல்லும் வழியில் சோளங்காபாளையம் அருகில் அமைந்துள்ளது இவ்வூர் . ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ் ஒரு நடுகல் உள்ளது . " வேடன் சாமி " என்ற பெயரில் மக்கள் இந்த வீரனை வணங்குகின்றனர் . 

                              இந்த நடுகல் வீரன் வில்லுடன் காட்சி தருகிறான் . அடுத்து அவனே  ஒருவருடன் சண்டையிடுவது போலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது . ஊர்ப்பூசல், சிறு சண்டை காரணமாக இந்த வீரன் இறந்து பட்டிருக்கலாம்.  இந்த நடுகல் ஊர்ப்பொதுவில் உள்ளதால் பொது மக்களால் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன் (பிழையிருப்பின் அறிஞர்கள் திருத்தி உதவ வேண்டுகிறேன்). இதன்  15-16ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த நடுகல்லின்  அருகில் வேறு ஒரு நடுகல் கிடத்தப்பட்ட நிலையில் உள்ளது . இன்றுவரை இது நல்ல வாழிபாட்டுக்குறியதாக இருப்பது கொங்கு நாட்டில் நடுகல் வழிபாடு போற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் . 

                       மேலும் இவ்வூரில் சோழீஸ்வரர் மற்றும் பெருமாள் கோயில்கள் அருகருகே இருக்கின்றன.  இவற்றில் கல்வெட்டு எதுவும் காணப்படவில்லை . ஆனால் கோயில் பழமை மாறாமல் இருக்கிறது .  கோயிலின் உள்ளே தவ்வை தாய் சிற்பம் உள்ளது . அது மட்டும் அல்லாமல் கோயிலின் வெளியே பழமையான சிற்பங்கள் கிடத்தப்பட்டுள்ளது .






















கொங்கில் ஒரு கொற்றவை

 புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்

கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)

                    வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள்போலும் என்று சிலப்பதிகாரத்தின் வேட்டுவரி கொற்றவை குறித்து பாடுகிறது.

ஆதித்தாயாம் பாலநில எயினரின் திணைக்கடவுளாம் கொற்றவைத் தாய். கொங்குநாட்டில் நடுக்காட்டினுள் மரங்களையே கூரையாகக் கொண்டு நின்றிருக்கிறாள். இந்தத்தாய் முற்சோழர்காலம் (கிபி- 9ம் நூற்றாண்டு) முதலே இங்கு நின்று அனைவரையும் காத்த வண்ணம் உள்ளாள்.

(குறிப்பு - அனைவரையும் காத்த தாயினைக்காக்கும் வண்ணம் இவள் குடிகொண்ட இடம் குறிப்பிட முடியாமை வேதனையே.)








பழமங்களம் நடுகல்

                              கொங்கு என்றால் காடு , பொன் , மணம், தேன் என்று பல பொருள்கள் உண்டு . காடு மிகுந்த நாடு , பொன் நாடு , மணநாடு , தேன் நாடு என்ற பல பொருள்களில் கொங்கு நாட்டிற்க்கு பெயர் அமைந்தது என்பர் . 

                                       கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள்நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அதில் ஒன்றான மேல்கூரைப் பூந்துறை நாட்டின் 32 பழம் பெரும் ஊர்களின் ஒன்று பழமங்களம் . இப்போது இது ஈரோடு வட்டத்தில் உள்ளது . 

       நடுகல் கல்வெட்டில் பெருமையும் பெயரும் பாடல் (வெண்பா) வடிவில் பொறித்திருப்பது தென்னிந்தியாவிலேயே ஈரோடு வட்டம் பழமங்களத்தில் தான் . அனுமநதி  புகழ்ந்து கூறுப்பெரும் ஓடையின் தென்கரையில் உள்ள ஊர் . இங்கு 10ம் நூற்றாண்டை சேர்ந்த " கரையகுலச் சொக்கன்" என்பவனின் நடுகல் கோயில் அமைப்பில் உள்ளது . பாடல் மூலம் பழமங்களத்தின் பழைய பெயர் புகழ்மங்களம் என்று தெரிகிறது . மங்களம் என்பதே இவ்வூரின் சிறப்பை உணர்த்தும் .                                         


" வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்ந்த மாற்றலரைச்

சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்

நிக்வேணம் கற்பொறிக்கப் பட்டான் கறைய குலச்

சொக்கனேந்த வேவுலகல் தான்"

ARE 217 of 1977 (வெண்பா)

இக்கற்பொறி இரட்சிப்பான் பாதம் என் தலைமேலே என்பது நடுகல் கல்வெட்டாகும் நானாதேசித் திசை   ஐயாயிரத்து ஐநூற்றுவருக்கு இங்கு நானாதேசி அடைக்கலம் ஒன்று இருந்துள்ளது . இவ்வூர் பெரிய வணிகர் குழுக்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது . தொல்பொருட் சிறப்பு வாய்ந்த பல பொருட்கள் கிடைகின்றன . இன்று இந்த நடுகல்லை  ஊர் மக்கள் "வேடன் கல் "  "வேடம் சாமி" என்று அழைக்கின்றனர்.







Monday, December 14, 2020

பன்னவாடி , மேட்டூர்அணை

மேட்டூர் பகுதியில் உள்ள பன்னவாடியில் பாயும் காவேரி ஆற்றின் இடதுபுறத்தில் தர்மபுரி மாவட்ட நாகமரை, நெருப்பூர்,  பென்னாகரம் ஆகிய ஊர்களும்  வலது பகுதியில் சேலம் மாவட்ட மேட்டூர், கொளத்தூர், பன்னவாடி உள்ளிட்ட கிராமங்களும் இருந்து வருகின்றன. இந்த இரண்டு மாவட்டத்தின் எல்லைகளையும் காவேரி ஆற்றை கடந்தால் எளிமையாக செல்லமுடியும். அதனால் ஆற்றை கடக்க விசை படகுகள் பயன்படுத்தபடுகிறது . அணையின் நீர் மட்டத்தை பொறுத்து சவாரியின் தூரம் மற்றும் கடினம் அமைகிறது . நீர் இல்லாத சமயத்தில் கூட ஆற்றை நடந்து கடக்க பணம் செலுத்த வேண்டும் .








கங்கர்கள்கோயில் , நரசமங்களா ராமேஸ்வராகோயில்

கர்நாடக மாநிலம் , சாம்ராஜ் நகருக்கு அருகில் உள்ளது நரசமங்களா என்னும் சிற்றூர் . இங்கு உள்ள  "ராமேஸ்வரா கோயில்" 9ம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பழமையான  கோயில் ஆகும் . கங்கர்கள் 9ம் நூற்றாண்டில் தலைக்காட்டை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கர்கள் கோயிலில் இக்கோயில் மிகப்பழைமையானது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தமிழக கோவில் கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது  . மிக அகலமான கருவறையும் அதைவிட சற்றே குறுகலான அர்த்தமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறை மேல் அமைந்துள்ள விமானத்தில் மிக அழகான சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மிக அழகிய வேலைபாடுடன் நான்கு அடி உயர  சப்தமாதர் சிலைகள் உள்ளன . ( அறை பூட்டி இருந்ததால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை ) . இக்கோயிலின் உள்ளே விதானத்தில் ஒரு சதுரப்பலகையில் நடுவில் நடராஜரும் அதனைச் சுற்றி எண்திசை பாலகர்களும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. கங்கர்களுக்கே உரிய தனித்துவமான தூண்கள் உள்ளன. இதில் ஒரு தூணின் மேல்பகுதியில் கங்கமன்னர் அவர் மனைவியுடன் அமர்த்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது .

கோவிலின் வெளிப்புற வளாகத்தில் பழமையான கன்னட மற்றும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன .  ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளான் இக்கோயிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு உள்ளது . இக்கோயின் அமைப்பு புள்ளமங்கை கோயில் மற்றும் சீனிவாசநல்லூர் கோயிலை ஒத்து காணப்படுகிறது .