“தெய்யம்” கேரளத்தின் ஒரு புனிதக் கலை மற்றும் பண்பாடு. நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றான தெய்யம், கேரள மாநிலத்தின் வட பகுதிகளான கண்ணூர், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி பழங்குடி மற்றும் கிராம மக்களிடம் காணப்படும் இறை வழிபாட்டு முறைகளில் தெய்யம் மிக முக்கியமானது. "தெய்வம்" என்ற சொல்லே "தெய்யம்" என மருவியதாகக் கருதப்படுகிறது.
தெய்யத்தின் தத்துவம்
கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் சக்தியானது, தெய்யம் வேடமிடும் கலைஞர்களிடம் இறங்கி, மக்களின் துயரங்களையும் வேண்டுதல்களையும் நேரடியாகக் கேட்டு ஆசி வழங்கும் ஒரு நிகழ்வே தெய்யமாகும். இது வெறும் ஆட்டமாக மட்டுமல்லாமல், அம்மக்களின் இறை நம்பிக்கை மற்றும் உயரிய கலைப் பண்பாடாகவும் போற்றப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி :
பண்டைய காலத்தில் தோன்றிய தெய்யம், இன்று கேரளத்தின் அனைத்து கிராமக் கோயில்களிலும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. தொடக்கத்தில், மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடுகளுக்கு நடுவே 'காவு' எனப்படும் பொது இடங்களில் இது நடத்தப்பட்டது. இன்றும் சில இடங்களில் விளக்கொளியில் காடுகளுக்கு நடுவே இது நிகழ்ந்தாலும், பெரும்பாலான இடங்களில் கோயிலைச் சுற்றியே நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறும் கலைஞர்கள் மலையன் மற்றும் வண்ணான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக இக்கலையைத் தவம் போல் செய்து வருகிறார்கள். பல குடும்பங்களுக்குத் தெய்யமே குலதெய்வமாகவும், ஊரின் கிராம தேவதையாகவும் விளங்குகிறது. ஆண்டு விழாவாகவோ அல்லது வேண்டுதலுக்கான காணிக்கையாகவோ சுமார் 400-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தெய்யக் கோலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. எளிய கலைஞர்களைக் கடவுளாக ஏற்று அனைத்துத் தரப்பு மக்களும் வணங்கும் இந்த இறை சிந்தனை மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.
ஒப்பனையும் தயாரிப்பும்
தெய்யம் நிகழ்த்தும் கலைஞர்கள், சடங்கு நடப்பதற்கு முந்தைய வாரங்களில் விரதமிருந்து, துறவு நிலையைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். இக்கலையில் முக ஒப்பனைக்கான வண்ணங்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
மஞ்சள்: மஞ்சள் பொடி.
வெள்ளை: அரிசி மாவு.
சிவப்பு: சுண்ணாம்பு கலவை.
கருப்பு: தேங்காய் எண்ணெயுடன் எரித்த நெல் உமி மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உடை பச்சைப் பனை ஓலைகளைக் கொண்டு நுட்பமான உடைகள் உருவாக்கப்படுகின்றன. கிரீடம், மார்புக் கவசம் மற்றும் அணிகலன்கள் அந்தந்த தெய்யக் கதாபாத்திரத்திற்கு ஏற்பத் தயார் செய்யப்படுகின்றன. இதற்கெனக் கோயிலின் ஓரத்தில் தனி அறை அல்லது கூடாரம் அமைக்கப்படும். முகம் முழுவதும் வண்ணங்கள் பூசி, கண்களுக்கு மையிட்டு, மிக நேர்த்தியான ஒப்பனை செய்யப்படுகிறது.
ஆட்டமும் அருளாசியும்
பெண் தெய்வக் கதாபாத்திரங்களுக்கும் ஆண்களே வேடமிடுகின்றனர். சில தெய்யங்களின் கிரீடங்கள் 20 முதல் 30 அடி உயரம் வரை இருக்கும். இசை, மணம், மற்றும் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன் ஆடும் இந்தக் கலைஞர், ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ஆடுகிறார். இதுவே தெய்யாட்டம் என்றும், அந்த வேடம் தெய்யக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேள தாளங்களுடன் கலைஞர் கோயிலை வலம் வரும்போது, பாடல்கள் வழியாக அவர் படிப்படியாகத் தெய்வமாக மாறும் நிகழ்வு அரங்கேறுகிறது. தெய்வம் ஒரு மனித உடலில் தற்காலிகமாகப் புகுந்து வெளிப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். இதைக் காணும் பார்வையாளர்கள் பக்திப் பரவசமடைகின்றனர். சாதிப் பாகுபாடின்றி அனைவரும் தெய்யத்திடம் ஆசி பெறுகின்றனர். சில இடங்களில் கோழி பலியிடும் சடங்குகளும் நடைபெறுகின்றன.
முடிவுரை
அறிவியல் வளர்ச்சிகளுக்கு மத்தியிலும், தெய்யம் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத கலாச்சாரப் பாரம்பரியமாகத் திகழ்கிறது. தெய்யம் பார்ப்பவர்களுக்கு முதலில் ஒரு அச்சத்தை உண்டாக்கினாலும், இறுதியில் அது பக்தியையும் அமைதியையுமே வழங்குகிறது. இதனை ஒரு சுற்றுலா நிகழ்வாகவோ அல்லது வெறும் வேடிக்கையாகவோ பார்க்காமல், அவர்களின் புனிதமான பண்பாட்டு விழுமியமாக மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.
1)கண்ணபுரம் பூமலகாவு கோயில் , கண்ணூர்






